திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (17:32 IST)

நீதிபதி கர்ணனுக்கு இந்த தண்டனை போதாது - நீதிபதி சந்துரு பேட்டி

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருபகிர்ந்து கொண்டார்.


 

 
''நீதிபதி கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, கர்ணன் குற்றவாளி என முடிவு செய்தது. இது தொடர்பாக அவருக்கு அறிவிக்கை வழங்கப்பட்டது'' என நீதிபதி சந்துரு நினைவுகூர்ந்தார்.
 
மேலும், இது குறித்து நீதிபதி சந்துரு கூறுகையில், ''ஆனால், நீதிபதி கர்ணன் இதனை புறக்கணித்துவிட்டு, மேலும் மேலும் நீதிமன்றத்தை அவதூறு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்'' என்று தெரிவித்தார்.
 
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை கர்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, ''நீதிபதி கர்ணனின் அனைத்து குற்றங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடலாம்'' என்று தெரிவித்தார்.
 
தற்போது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை அவர் மீதுள்ள முதல் குற்றத்துக்கான சிறைத்தண்டனை. அவர் மீதுள்ள அனைத்து குற்றங்களுக்கும் இது போல தண்டனை கொடுக்கலாம். ஆனால், அது அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்று நீதிபதி சந்துரு தெரிவித்தார்.
 
கர்ணனின் கருத்துக்களை உத்தரவு என்று கூறுவது தவறு
 
நீதிபதி கர்ணன் விதிக்கும் உத்தரவுகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது பற்றிக் கருத்துத் தெரிவித்த நீதிபதி சந்துரு, ''இந்திய அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விதிக்கும் உத்தரவை உத்தரவு என்று கூறலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ஒருவர் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு லெட்டர்ஹெட்டில் எழுதுவதையெல்லாம் உத்தரவு என்று ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன'' என்று நீதிபதி சந்துரு விமர்சித்தார்.
 
சாலையில் செல்லும் மனநோயாளி ஒருவர் சொல்வதை எல்லாம் உத்தரவு என ஊடகங்கள் கூறுவது தவறு என்று நீதிபதி சந்துரு மேலும் கூறினார்.
 
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் இது போன்ற மோதல் போக்கு இதற்கு முன்பு இருந்துள்ளதா என்று கேட்டதற்கு பதிலளித்த நீதிபதி சந்துரு, ''இதற்கு முன்னர் கூட ஊழல் குற்றச்சட்டுக்கள் சுமத்தப்பட்ட மற்றும் பிரச்சனை உண்டாக்கிய சிலர் இடம்மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்களால் பிறகு பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால், நீதிபதி கர்ணன் விஷயத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னரும், அவரால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதன் விளைவுதான் தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு'' என்று தெரிவித்தார்.


 

 
கர்ணனுக்கு மனநலன் சரியில்லையா என்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது அவருக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு. அதனையும் கர்ணன் வீணாக்கிவிட்டார். உச்ச நீதிமன்ற ஆணைகளுக்கு கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்தது சிறுபிள்ளைத்தனமானது. அவர் நீதிமன்றத்தை விளையாட்டுத்தனமாக கருதி விட்டார் என்று சந்துரு குற்றம் சாட்டினார்.
 
''தான் தலித் என்பதால் தன் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதிபதி கர்ணன் கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, மூன்று தலைமை நீதிபதிகள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும், 21 நீதிபதிகள் கையெழுத்திட்டு அவர் மீது எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளனர்'' என்று நீதிபதி சந்துரு நினைவு கூர்ந்தார்.
 
''மேலும் தலித் நீதிபதிகளும் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். நானும் அவருடன் பணியாற்றியுள்ளேன். ஆனால், அவர் கூறியடி சாதி ரீதியான பாரபட்சம் காட்டப்படவில்லை. அவர் கூறிய சாதி ரீதியான பாரபட்ச குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமுமில்லை '' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் இவ்வளவு நாட்களாக விசாரிக்காத காரணத்தால்தான் கர்ணன் என்ற விஷ விருட்சம் வளர்ந்ததற்கு காரணம் என்றும் நீதிபதி சந்துரு குற்றம் சாட்டினார்.
 
''நான் ஓர் ஒய்வு பெற்ற நீதிபதி. நான் ஒரு லெட்டர்ஹெட்டில் எது வேண்டுமானாலும் எழுதினால் அது தீர்ப்பாகி விடுமா? அதே போல் நீதிமன்ற பணி செய்ய தடை விதிக்கப்பட்ட கர்ணன் தனது லெட்டர்ஹெட்டில் எழுதியவை எல்லாம் தீர்ப்பாகுமா, அவரது கிறுக்கலாக வேண்டுமானால் இருக்கலாம்'' என்று நீதிபதி சந்துரு விமர்சித்துள்ளார்.