செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (14:31 IST)

புற்றுநோய் சிகிச்சையின் போது நோய் அணுக்களை அழிக்கப் பயன்படும் மஞ்சள் - சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: புற்றுநோய் அணுக்களை அழிக்கப் பயன்படும் மஞ்சள்: சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி

உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை, ஆரோக்கிய அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், புற்றுநோய் அணுக்களை அழிப்பது முக்கியம் ஆகும்.

இவ்வாறான தன்மையுடைய மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ''குா்குமின்'' ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று சென்னை ஐ.ஐ.டி.யைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் குழு கண்டறிந்துள்ளது.

அந்த வகையில் மஞ்சள் மற்றும் ''குா்குமின்'' கோட்பாடுகள், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆராய்ச்சியை சென்னை ஐ.ஐ.டி. உயிரிதொழில்நுட்பத்துறையைச் சோ்ந்த பேராசிரியா் ரமா சங்கா் வா்மா தலைமையிலான குழுவினா் கண்டுபிடித்துள்ளனா்.

மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத ''குா்குமின்'', ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ''லுகிமியா'' அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

தினத்தந்தி: காவல் நிலையத்திற்கு சென்ற பெண் 'திடீர்' சாவு

திருவண்ணாமலையில் காவல் நிலையத்திற்கு சென்ற பெண் திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அந்தனூர் மதுரா கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். அவருடைய மனைவி சுதர்சனா(வயது 42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தர்மலிங்கத்துக்கும் அவரது சகோதரருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மேல்சங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக சுதர்சனாவின் மகன், கணவர், சகோதரர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இந்த தகராறில் சுதர்சனாவின் மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என சுதர்சனா கூறி வந்தார். இதுகுறித்து போலீசாரிடம் நியாயம் கேட்க சம்பவத்தன்று மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு சுதர்சனா சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பெண் காவலர் ஒருவர் சுதர்சனாவின் வீட்டுக்கு சென்று சுதர்சனா விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். அதன்பேரில் உறவினர்கள் காவல் நிலையம் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் சுதர்சனாவை சிகிச்சைக்காக செங்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சுதர்சனா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுதர்சனாவின் உறவினர்கள் மேல்செங்கம் போலீசார்தான் சுதர்சனாவை தற்கொலைக்கு தூண்டினர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து தர்ணாவை கைவிட்டனர்.
- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்து தமிழ் திசை: திருவொற்றியூர், சேப்பாக்கம், குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித் துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 3 சட்டப் பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவொற்றியூர் தொகுதி திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி உடல் நலக்குறைவால் கால மானார். அடுத்த நாள் (பிப்.28) குடியாத்தம் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காத்தவராயன் உடல் நலக்குறைவால் இறந்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக உறுப்பினராக இருந்த ஜெ.அன்பழகன். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடந்த ஜூன் 10-ம் தேதி உயிரிழந்தார்.

திமுக உறுப்பினர்களின் மறை வால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அங்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது, ''நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய தொகுதிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி முதல் நிலை பரிசோதனை முடித்துச் சரிபார்க்கப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த வாரம் காணொலி காட்சி மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. ஆனால், இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதி குறித்து எந்த முடிவையும் ஆணையம் தெரிவிக்கவில்லை'' என்றார்.