1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:07 IST)

இறைச்சி உணவை விட வீகன் உணவு ஆரோக்கியமானதா?

இரட்டையர்களான ஹியூகோவும் ரோஸ் டர்னரும், ஒரு பரிசோதனை முயற்சியாக 12 வாரங்கள் டயட்டில் இருந்தனர். ஹியூகோ 'வீகன்' உணவு உண்பவராக மாறினார். ரோஸ் தொடர்ந்து இறைச்சி சாப்பிட்டார். என்ன நடந்தது?
 
"நாங்கள் மரபணு ரீதியில் இரட்டையர்களாக இருப்பதால், பல்வேறு உணவுகள், உடற்பயிற்சி முறைகளை ஒப்பிட்டுப் பார்த்து, எங்களுக்கு எது சரியாக இருக்கிறது என்பதை கண்டறியலாம். அதனால், தாவர வகை உணவுகள், இறைச்சி வகை உணவுகளில் எது எங்களுக்கு சிறந்தது என்பதையும் சோதிக்க விரும்பினோம்," என்று சாகச தடகள வீரரான ரோஸ் டர்னர் கூறுகிறார்.
 
இந்த இரட்டையர்கள் 12 வார பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹியூகோ வீகன் உணவு உண்பவராக மாறினார். ரோஸ் இறைச்சி சாப்பிடுவதைத் தொடர்ந்தார். இருவரும் ஒரு நாளைக்கு ஒரே அளவு கலோரிகளை உட்கொண்டு, ஒரே விதமான உடற்பயிற்சியை மேற்கொண்டனர்.
 
முதல் முறையாக, வீகன் உணவு உண்ணும் ஹியூகோவுக்கு, அவரது உடல் தொடக்கத்தில் அவ்வளவு எளிதாக ஒத்துழைக்கவில்லை. "நான் வீகன் உணவை எடுத்துக்கொண்டேன். அது உண்மையில் என் உடலைப் பாதிக்கிறது. முதல் இரண்டு வாரங்களில், அது இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் சீஸ் ஆகியவற்றுக்காக ஏங்கியது. நான் இப்போது பழங்களையும், பருப்புவகைகளையும் சாப்பிட வேண்டியிருக்கிறது. என் உடலில் சர்க்கரையின் அளவு பகல் நேரங்களில் சரியாக இருக்கிறது. எனக்கு அதிக ஆற்றல் இருப்பது போல் உணர்கிறேன்," என்று ஹியூகோ டர்னர் கூறுகிறார்.
 
"எனது இறைச்சி உணவில் செயல்திறன் ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. நான் சில நாட்கள் ஜிம்மில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். அதன் பிறகு நான் அதிக ஓய்வை பெறுவேன். அதே சமயம், ஹியூனோ மிகவும் நீடித்த ஆற்றல் அளவை கொண்டிருந்தார்," என்கிறார் ரோஸ். நீங்கள் சாப்பிடும் சர்க்கரையின் அளவு மட்டும் முக்கியமல்ல. உங்கள் உடல் சர்க்கரையை எவ்வாறு எடுத்துக்கொள்கிறது என்பதும் முக்கியமே.
 
"ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும், சர்க்கரையும் கொழுப்பும் எவ்வாறு இவர்களின் உடலில் எதிர்வினையாற்றுகிறது என்பது சுவாரஸ்யமான விஷயம். உண்மையில், ரோஸ் உடல் கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகளை பதப்படுத்திய விதம் சராசரிக்கு மேலாக இருந்தது. ஆனால், ஹியூகோவுக்கு சராசரிக்கும் குறைவாக இருந்தது," என்கிறார் டாக்டர் டிம் ஸ்பெக்டர்.
 
ட்ரில்லியன் கணக்கான வெவ்வேறு நுண்ணுயிரிகள் நமது குடலில் வாழ்கின்றன என்று சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. நீங்கள் அதை சரியாக கவனித்து கொண்டால், அவை ஆயிரக்கணக்கான வெவ்வேறு ரசாயனங்களை உற்பத்தி செய்யும். அவை உங்கள் உடலை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும். அவை உங்கள் மூளைக்குச் சென்று பசியை அதிகமாக உணரச்செய்தல், மன அழுத்தம் ஆகியவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
 
சராசரியாக, இரட்டையர்கள் தங்கள் நுண்ணுயிரிகளில் 25 முதல் 30 சதவிகிதம் வரை மட்டுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதை நாங்கள் பார்க்கிறோம் என்கிறார் டாக்டர் டிம். நாம் ஒவ்வொருவரின் உடலும் உணவுகளை எடுத்துக்கொள்வதில் வெவ்வேறாக எதிர்வினையாற்றுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
"வீகன் உணவை உண்டதாலும், அந்த 12 வார காலத்தைக் கடந்து சென்றதாலும், எனது குடல் பாக்டீரியாவின் பன்முகத்தன்மை கடுமையாக குறைந்தது," என்கிறார் ஹியூகோ." "என்னுடையது அப்படியே இருந்தது, அதாவது நான் நோய்க்கு ஆளாகவில்லை," என்கிறார் ரோஸ்.
 
ஹியூகோவும் ரோஸும் ஆரோக்கியமான தடகள வீரர்கள். ஆனால், குறைந்த அளவிலான ஊட்டச்சத்துடன் தொடங்குபவர்கள், அவர்களின் குடலை பல்வேறு உணவு வகைகளுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
 
"அதனால், முதலில், ஒரு வாரத்திற்கு 30 வெவ்வேறு வகையான தாவரம் சார்ந்த உணவை சாப்பிட்ட வேண்டும். இரண்டாவதாக, பாலிபினால்கள் (Polyphenols) எனப்படும் இயற்கை ரசாயனங்கள் கொண்ட தாவர வகை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரகாசமான நிறமுள்ள பெர்ரி, பருப்புவகைகள், விதைகள், காபி போன்றவை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, புரோபயாடிக் (Probiotic) - நேரடி நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளான தயிர் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்," என்று டாக்டர் டிம் ஸ்பெக்டர் அறிவுறுத்துகிறார்.
 
ஒட்டுமொத்தமாக கவனித்தால், ஹியூகோவுக்கும் ரோஸ்ஸிற்கும் அவ்வளவு வேறுபாடுகள் இல்லை. "எங்களை கண்காணிக்கும் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆய்வுகள், இரண்டு உணவு முறைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறது," என்று ஹியூகோ டர்னர் கூறுகிறார்.
 
ஒரே மரபணுக்களை பகிர்ந்து கொள்ளும் இரட்டையர்களாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியாக செயல்படும் உலகளாவிய உணவுமுறை (டியட்) என்று எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்ள இவை அனைத்தும் நமக்கு உதவுகின்றன.
 
"உங்களிடம் யாராவது குறிப்பிட்ட உடல் அமைப்பை பெறுவதற்கு இந்த பயிற்சிகளையும், உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினால், அவர்களிடம் கொஞ்சம் கேள்வி கேளுங்கள். உங்களுக்கு எது சிறந்தது என்று நீங்களை சோதனை செய்து பாருங்கள்," என்கிறார் ரோஸ் டர்னர்.