ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2017 (20:29 IST)

ஏ-1 பாலா, ஏ-2 பாலா? சர்ச்சையில் அறிவியல் அடிப்படை இருக்கிறதா?

ஜல்லிக்கட்டு நடத்த கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், அன்றடம் நாம் பருகும் பால் பற்றிய சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளது.


படம் உதவி: Senaapathy Kangayam Cattle Research Foundation

நாட்டு ரக மாடுகளின் ஏ 2 ரக (A 2) பால் புரதம் நிறைந்தது என்றும் ஏ 1 (A 1) ரகம் சார்ந்த வெளிநாட்டு மாடுகளின் பாலை தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களுக்கு அது வழிவகுக்கும் என்ற கருத்து பகிரப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இந்த பிரசாரத்தை பலரும் முன்வைத்தனர்.

இதை உறுதிப்படுத்த இந்தியாவில் ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை என்றும் அந்த ஆராய்ச்சி தற்போதுதான் தொடங்கியுள்ளது என்றும் ஹரியானாவில் உள்ள இந்திய அரசின் தேசிய மரபணு ஆதாரங்களுக்கான மையம் (National Bureau of Genetics Resources) தெரிவித்துள்ளது.

ஏ1க்கும் ஏ 2க்கும் என்ன வித்தியாசம்?:

நாம் உட்கொள்ளும் பால் செரிமானம் ஆகும் போது, பால் பீட்டா கேசோ மார்பின்7 (beta casomorphin7) என்ற ரசாயன கலவையாக மாறினால் அந்த பால் ஏ1 ரக பால்.


ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னையில் நடந்த போராட்டம்

நாட்டு ரக மாட்டின் பாலை பருகும் போது, பால் பீட்டா கேசோ மார்பின்7 ரசாயன கலவையாக மாறாமல் முழுமையாக செரிமானம் ஆகிவிடுகிறது. அது ஏ2 ரக பால் ஆகும் என்கிறார் தமிழக அரசின் கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராச்சியாளர்கள்.

அதிக விலையில் ஏ2 பால் விற்பனை:

பீட்டா கேசோ மார்பின் 7 ரசாயன கலவை செரிமானம் ஆவதில் பிரச்சனை உள்ளது என்றும், அது நோய்களை உருவாக்கும் என்று சொல்லப்படும் கருத்து இதுவரை பக்கசார்பற்ற வகையில் எங்கும் நிரூபிக்கப்படவில்லை.

ஏ 2 ரக (A 2) பால் என்றும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அளிக்கும் பால் ஏ 1 (A 1) ரகத்தை சார்ந்தவை. இந்த நிலையில் ஏ 2 ரக (A 2) பாலுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

சென்னை நகரத்தில் சில பால் விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஒரு லிட்டர் நாட்டு மாட்டின் பாலை ரூ.70 தொடங்கி ரூ.120 வரை வரை விற்று வருகின்றனர்.

ஏ1- ஏ 2பால் பற்றிய ஆராய்ச்சி:

தேசிய மரபணு ஆதாரங்களுக்கான மையத்தில் ஏ 1 (A 1) ரக பால் மற்றும் ஏ 2 ரக(A 2) பாலை தொடர்ந்து உட்கொள்ளுவதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை எலிகளை கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய விஞ்ஞானி ராஜா, ''எலிகள் மீதான சோதனைதான் நடந்து வருகிறது. இதன் பிறகு இதே ஆராய்ச்சி மனிதர்கள் மீது நடத்தப்பட்ட பிறகுதான் உறுதி செய்ய முடியும். இது வரை ஏ 1 (A 1) ஆபத்தானது என்றோ, ஏ2 ரக(A 2) பால்தான் சிறந்தது என்றோ சொல்ல எந்த முழுமையான தீர்வும் எட்டப்படவில்லை'' என்றார்.

அவர், ''கடந்த ஆண்டு எங்களது மையம் நடத்திய ஆராச்சியில் இந்தியாவில் உள்ள 25 விதமான நாட்டு மாடுகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தோம். தமிழகத்தை சேர்ந்த காங்கேயம் வகை அதில் அடங்கும். இந்திய நாட்டு ரக மாடுகளில் இருந்து பெறப்படும் பாலின் தன்மை 99 சதவீதம் ஏ 2 ரக(A 2) பால் வகையை சேர்ந்தவை என்று இந்த சோதனையில் தெரியவந்துள்ளது. பிற வெளிநாட்டு ரக மாடுகளின் பால் ஏ 1 (A 1) பால் வகையை சார்ந்தவை'' என்றார்.