வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (21:17 IST)

காஸாவை தாக்கும் இஸ்ரேலை எச்சரிக்கும் இரான் - போரில் நேரடியாக இறங்க தயாராகிறதா?

israel -Palestine
அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு, மத்திய கிழக்கில் நிலைமை வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.
 
ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1,400 இஸ்ரேல் நாட்டவர் உயிரிழந்துள்ளனர். அதன் பின் காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து எட்டு நாட்களாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவில் இது வரை 2,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் ஆவர்.
 
காஸா எல்லையில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். டாங்கிகள், கனரக துப்பாக்கிகள் தவிர கனரக ஆயுதங்களை இஸ்ரேல் குவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் தான் அறிவித்துள்ள ‘தரை வழி’ தாக்குதலை இன்னும் தொடங்கவில்லை.
 
இந்நிலையில், இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாயின் மத்திய கிழக்கு நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். இராக், சிரியா நாட்டு தலைவர்களுடன் சந்தித்த பிறகு லெபனான் மற்றும் கத்தார் நாடுகளுக்கும் சென்றார்.
 
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த அறைகூவல் விடுத்தார். லெபனானின் ஹிஸ்புல்லா இதில் ஈடுபட்டால், இந்த மோதல் மத்திய கிழக்கின் பிற பகுதிகளுக்கும் பரவும் என அவர் எச்சரித்தார். “அப்படி நடந்தால், ஒரு பெரிய நிலநடுக்கத்தை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றும் அவர் கூறினார்.
 
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது ஹிஸ்புல்லா இந்த பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் கணித்து வைத்துள்ளது என்றும் இஸ்ரேல் காஸா மீதான தனது தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை தொடங்கினால், தான் தலையிட வேண்டியிருக்கும் என இரான் ஐக்கிய நாடுகள் மூலமாக இஸ்ரேலுக்கு செய்தி அனுப்பியிருப்பதாக, அமெரிக்க செய்தி இணையதளம் ஆக்சியோஸ் கூறுகிறது. உயர் மட்ட அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. இரான் மற்றும் ஹிஸ்புல்லா காஸா விவகாரத்தில் தலையிடுவதை தடுக்க அமெரிக்கா முயற்சி செய்துக் கொண்டிருக்கும் போது இந்த செய்தி வந்துள்ளது.
 
இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்க மத்திய கிழக்கு வந்தடைந்துள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் எந்த வகையிலாவது இரானின் ஈடுபாடு இருந்தால், இந்த பிரச்னை மத்திய கிழக்கின் பிற பகுதிகளுக்கு பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
தமிழ்நாடு அரசு இந்துக் கோயில்களின் உண்டியல் பணத்தை எடுத்துக் கொள்கிறதா?
 
லெபனான் - இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாகவும் அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய செய்தியறிக்கைகளின் படி, ஒரு கிராமத்தின் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் காயமடைந்துள்ளனர்.
 
லெபனான் தாக்குதலுக்கு பிறகு, லெபனானுடனான எல்லைப் பகுதியில் 4 கி.மீ தூரத்தை இடைப்பகுதியாக அறிவித்து அங்கிருந்து மக்களை வெளியேற்றியது இஸ்ரேல்.
 
“காஸா குடிமக்கள் மீது குற்றங்கள் செய்வதை நிறுத்துக, ஏன் என்றால், இன்னும் சில மணி நேரத்தில் அது தாமதமான முடிவாக மாறிவிடும்” என்று இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் அப்துல்லாயின், ஹிஸ்புல்லா தலைவர் ஹசான் நசரல்லாவை பெய்ரூட்டில் சந்தித்த பிறகு தெரிவித்தார்.
 
“ஹிஸ்புல்லா எவ்வளவு தயாராக இருக்கிறது என எனக்கு தெரியும். ஹிஸ்புல்லா எடுக்கும் நடவடிக்கைகள் நிலநடுக்கத்தை உருவாக்கக் கூடும்” என்றார்.
 
பெய்ரூட்டிலிருந்து புறப்பட்ட இரான் வெளியுறவுத்துறை அமைச்சர், அடுத்ததாக கதார் தலைநகரான தோஹா சென்றடந்தார். பாலத்தீனப் பகுதிகளின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை சந்தித்தார். கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசீம் அல் தனி-ஐ சந்தித்தார்.
 
அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, ஒரு ஹமாஸ் தலைவரும் இரான் அதிகாரியும் சந்திக்கும் முதல் நிகழ்வாகும் இது.
 
கத்தார் செல்வதற்கு முன்பாக, இராக், சிரியா, லெபனான் ஆகிய நாட்டு தலைவர்களையும் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்தார். காஸாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதல் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
 
இந்நிலையில், காஸாவில் இஸ்ரேல் செய்து கொண்டிருப்பது, “போர் குற்றம், இனப் படுகொலைக்கு சமம்” என்று இரான் அதிபர் இப்ராஹிம் ராய்ஸி தெரிவித்துள்ளார்.
 
 
இஸ்ரேல் மீதான் ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, இரான் இஸ்ரேலை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இஸ்ரேலின் கொள்கைகளால் தான் இந்த தாக்குதல் நடைபெற்றதாக இரான் கூறி வருகிறது.
 
பல தசாப்தங்களாக பாலத்தீனர்களின் உரிமைகளை இஸ்ரேல் மறுத்து வந்ததன் விளைவு தான் இந்த தாக்குதல் என்று இரான் கூறுகிறது.
 
மேற்கு கரையில் பாலத்தீனர்களை இஸ்ரேல் தாக்குவதாக இரான் குற்றம்சாட்டுகிறது. இஸ்ரேல் ராணுவம் அவர்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக கூறியது.
 
இந்த விவகாரத்தில் இரான் ஹமாஸ் உடன் நிற்பதை குறிக்கிறது. ஹமாஸ்-ன் பல தலைவர்கள் தங்களுக்கு இரான் உதவி வருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
 
ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் மொராக்காவுக்கும் இடையிலான ராஜாங்க உறவுகள் மறுசீரமைக்கப்பட்ட பிறகு, அமெரிக்க மத்தியஸம் செய்த சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
 
ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பே, இரான் தலைவர் அயதுல்லா அலி கமனெய் இந்த பேச்சுவார்த்தை குறித்து சவுதி அரேபியாவை எச்சரித்தார். ஹமாஸ் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலுக்கு பிறகு, சவுதி அரேபியா பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
 
காஸா மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்திய பிறகு, பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நிகழந்தன.
 
இந்த சூழ்நிலையில், இரான் இஸ்லாமிய உலகின் தலைவராக விரும்புகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர் மத்திய கிழக்கு நாடுகள் குறித்த நிபுணத்துவம் பெற்ற, டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழகத்தின் பேராசிரியர் கமல் பாஷா, “பாலத்தீன விவகாரத்தை தான் வேகமாக கையில் எடுப்பதை நிரூபிக்க நினைக்கிறது இரான். பாலத்தீன விவகாரம் இஸ்லாமிய விவகாரம் ஆகும். ஹமாஸ்-க்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதன் மூலம், அரபு உலகின் மற்ற நாடுகள் அமெரிக்காவை பின்பற்றுகின்றன, ஆனால் அவர்களால் எதுவும் செய்ய இயலாது, பாலத்தீனர்களுடன் நிற்கும் ஒரே பெரிய நாடு இரான் தான் என்ற செய்தியை உரக்க சொல்கிறது” என்றார்.
 
கடந்த ஒன்பது நாட்களாக இஸ்ரேல் வான் படைகள் தொடர்ந்து காஸா மீது குண்டுகள் செலுத்தி வருகின்றன. காஸாவின் பெரும்பகுதி முழுவதும் தரைமட்டமாகியுள்ளது. காஸாவுக்கு மின்சாரம், உணவுப்பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியதுடன், தண்ணீர் தருவதையும் நிறுத்தி விட்டது இஸ்ரேல். காஸாவில் உள்ள பல மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை . குண்டுகளிலிருந்து தப்பிக்க பலர் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 
இந்நிலையில், காஸாவில் உள்ள பல லட்சம் பேரை எகிப்து எல்லை நோக்கி நகர இஸ்ரேல் கூறியுள்ளது. பேராசிரியர் பாஷா, “அரபு உலகின் நாடுகள் வெளிப்படையாக பாலத்தீனத்துக்கு ஆதரவு அளிக்க தயங்கும் போது, ஹிஸ்புல்லா அல்லது ஹமாஸை உயிர்ப்பித்து இஸ்ரேலை கட்டுப்படுத்தும் ஒரே நாடு இரான் தான் என்ற செய்தியை கூற இரான் விரும்புகிறது.
 
காஸாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தால் இரான் இந்த மோதலில் ஈடுபடும் என்று இரான் ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதே போல், இஸ்ரேல் சார்பாக போரிட அமெரிக்காவை அழைத்துள்ளது இரான்.
 
அமெரிக்காவின் பெரிய போர் படைகள், இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் தற்போது மத்திய கிழக்கில் உள்ளன. இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்கா முழுவதும் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளது.
 
 
இந்த நிலையில், இரான் நேரடியாக இஸ்ரேலுடன் போரில் இறங்குமா என்ற கேள்வி எழுகிறது. இரான் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டல் ஒழிய இரான் இந்த போரில் நேரடியாக ஈடுபடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவரை ஹிஸ்புல்லா அல்லது சிரியாவில் உள்ள குழுக்கள் மூலம் இரானின் தலையீடு இருக்கும்.
 
ஹமாஸை அவ்வளவு எளிதாக இஸ்ரேலால் ஒழித்து விட முடியாது என்ற எண்ணத்தில் இரான் இருக்கிறது என பேராசிரியர் பாஷா தெரிவிக்கிறார். “ஹமாஸிடம் இன்னும் பல ராக்கெட்டுகள் உள்ளன. ஹிஸ்புல்லாவிடமும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் உள்ளன. இது மட்டுமல்ல, சிரியாவில் பல குழுக்கள் இயங்கி வருகின்றன. சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளுடன் கூட்டு சேர்ந்தால் கூட அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது, தனக்கே நிலைமைகள் சாதகமாக இருப்பதாக இரான் நினைக்கிறது” என்றார் அவர்.
 
ஆனால் இரான் மீது நேரடி தாக்குதல் நடைபெறாமல் இரான் நேரடியாக களத்தில் இறங்காது என்கிறார் பேராசிரியர் பாஷா. “தனது செல்வாக்கின் கீழ் உள்ள குழுக்கள் மூலம் இஸ்ரேல் எல்லையில் பெரும் கொந்தளிப்பை இரானால் ஏற்படுத்த முடியும். எனவே இரான் நேரடியாக ஈடுபடாது” என்றார்.
 
மத்திய கிழக்கில் நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன. காஸாவில் அமைதி நிலவுதற்கான முயற்சிகளை வேகமாக முன்னெடுத்துள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. காஸா விவகாரம் குறித்து ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை கூட்டவுள்ளது சவுதி அரேபியா.
 
இந்த சூழலுக்கு மத்தியில் இரான் தனது காய்களை கவனமாக நகர்த்துகிறது.
 
லெபனான் இஸ்ரேல் எல்லையில் நிலைமை தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே மூன்று ஏவுகணை தாக்குதல்களை ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. அடுத்து என்ன நடந்தாலும் அதில் இரானின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.