வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (13:12 IST)

உத்வேகம் தரும் வீராங்கனை அமுதா: செயற்கை காலுடன் பாரா பேட்மின்டன் விளையாட்டில் சாதிக்கும் பெண்

BBC
தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா இன்று பாரா பாட்மின்டன் போட்டி உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் ஒரு சர்வதேச வீராங்கனையாக இவர் மாறியது எப்படி?

5 வயதில் விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் அமுதா. இவரது 5 வயதில், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, எதிர்பாராத விதமாக பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

"சாலையில் வேகமாக விழுந்ததால் பின்னந்தலையில் ஜல்லிக்கற்கள் மோதி தலைக்கு உள்ளே சென்றிருந்தது. என்னுடைய கால் மீது, பேருந்து ஏறியதால், ஒரு சிறிய சதையின் பிணைப்பில் கால் தொங்கிக் கொண்டிருந்தது" அந்த சம்பவத்தை நினைவு கூர்கிறார் அமுதா.

"மருத்துவர்கள் நான் பிழைப்பேன் என்று என் அம்மாவிடம் உறுதி கொடுக்கவில்லை. அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதால் உடனடியாக ரத்தம் கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு என் ஒரு காலை அகற்றினர்" என்றும் அவர் தெரிவித்தார்.

'கால் இழந்த பெண் குழந்தை வேண்டாம்'

மேலும், "ஒரு காலை இழந்த பெண் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாய் ? இந்த குழந்தை உனக்கு வேண்டாம் என்று என் அம்மாவிடம் பலர் அறிவுரை சொன்னார்களாம். ஆனால், 2 கால்கள் இல்லை என்றாலும் என் குழந்தையை கஷ்டப்பட்டு எப்படியாவது நானே வளர்த்துக் கொள்கிறேன் என்று என்னை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள் என்றும் தன் கதை விவரித்தார்.

பின்னர் ஓராண்டு காலம் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்த பிறகு சாதாரணமாக ஒரு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. ஓரளவிற்கு விடுதலை கிடைத்தது என்றாலும் மொத்தத்தில் அவருக்கு ஒரு கடினமான காலமாகவே இருந்தது.

அடுத்து என்ன செய்ய போகிறோம்? எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என கவலைகள் ஒரு புறம் என் அம்மாவை அழுத்த, அவர் எடுத்த கடைசி ஆயுதம் கல்வி.

கல்வி ஒன்றே வழி

கல்வி மட்டுமே வாழ்வை வலிமையாக்கும் என்பதை உணர்ந்த அமுதாவின் தாய், அவரை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் சேர்த்தார். அங்கு 12 அம் வகுப்பு வரை படித்து முடித்ததும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்தார். ஆனால், அதற்கு பிறகு படிக்க குடும்ப பொருளாதார சூழல் இடம் கொடுக்க வில்லை.
BBC

பிறகு வசதியின்மை காரணமாக மாதம் 4000 ரூபாய் சம்பளத்தில் அருகில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த பணம் குடும்ப செலவுக்கு கொஞ்சம் உதவியாக இருந்துள்ளது. குறிப்பாக, வீட்டு வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்த அம்மாவுக்கு இது ஆறுதலாக இருந்தது. இப்படியான குடும்ப சூழல் காரணமாக இவரது தம்பிகளும் பெரிதாக படிக்கவில்லை.

இப்படியே நாள் சென்று கொண்டிருக்க, வாழ்வின் திருப்புமுனை நாள் வந்தது.

பேட்மின்டன் தொடக்கம்

அமுதாவின் ஆசிரியையிடம் பயிற்சியாளர் இர்பான், பாரா பேட்மிண்டன் விளையாட்டு பற்றி சொல்ல, அதனை அமுதாவின் அம்மாவிடம் சொல்லி, இர்பானிடம் அழைத்தும் சென்றுள்ளார் அந்த ஆசிரியை. அங்குதான் இந்த விளையாட்டு குறித்து அமுதாவிடம், அமுதாவின் அம்மாவிடமும் முதல்முறையாக விளக்கப்பட்டது.

" எனக்கு ஏற்கனவே விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது.ஆனால் ஒரு கால் இல்லாததால் என்னால் தன்னம்பிக்கையோடு விளையாட முடியவில்லை. என்னை பார்ப்பவர்களும் உன்னால் விளையாட முடியாது என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் விளையாடுவது என்பதையே நான் மறந்துவிட்டேன்" என்று கூறும் அமுதா, பயிற்சியாளர் இர்பான் தான், தன்னுடைய தயக்கத்தை உடைத்து நம்பிக்கை அளித்தார் என்றும் தெரிவிக்கிறார்.

"நான் பாராபேட்மின்டன் விளையாட தொடங்கியதும் பலரும் உனக்கு இந்த வயதில் ஏன் இந்த வேண்டாத வேலை என்று சொன்னார்கள். இந்த அவமானங்களையும் கேலிகளையும் எனக்குள்ளே புதைத்து என் உழைப்பிற்கு அதையே உரமாக்கினேன்"

சர்வதேச பதக்கங்கள்

ஏற்கனவே இருந்த செயற்கைகால்கள் அகற்றப்பட்டு பேட்மின்ட்ன் விளையாடுவதற்கு ஏதுவாக புது செயற்கை கால்களை பொருத்தப்பட்டது. தற்போது இவர், ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் பயிற்சி எடுத்து வருகிறார்.

" பயிற்சி ஆரம்பித்த சில நாட்களில் எனக்கு கால்களில் நடுக்கம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. தொடக்க நாட்களில் பயிற்சி எடுக்கும் போது அடிக்கடி கீழே விழுந்துவிடுவேன். பிறகு மெதுவாக பயிற்சியை தொடங்குவேன்" என்கிறார் அமுதா.

தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி. பின்னர் பேட்மின்டன் பயிற்சி.சிறிது நேரம் ஓய்வு, பிறகு மீண்டும் பயிற்சி என கடந்த 2 வருடங்களாக கடின பயிற்சிகளை பயிற்சியாளர் இர்பான் உதவியுடன் மேற்கொள்கிறார் அமுதா.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தன் 25 வயது வரை பேட்மின்டன் விளையாட தெரியாத அமுதா தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

அமுதாவின் இந்த கடும் உழைப்பிற்கு பிறகு பயிற்சியாளர் இர்பானின் பங்கு மிகப்பெரியது. அவருடைய கண்காணிப்பின் கீழ் பயிற்சியை மேற்கொண்ட அமுதாவிற்கு, தொடக்கத்தில் மனநலப்பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

சமீபத்தில் 2022 இல் Spanish para Badminton சர்வதேச ஒற்றையர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இப்போது பாரா பேட்மின்டன் ஒற்றையர் உலகத்தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ளார். அமுதாவின் கனவு 2024 இல் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான்.