1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (21:16 IST)

”எல்லை தாண்டி மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி கிடையாது”

இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

 
இது தொடர்பிலான கூட்டம் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 
எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை, அவர்களது படகுகளுடன் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவராகிய மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
அண்மையில் இலங்கை-இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது, ஆண்டொன்றுக்கு 83 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பினுள்ளே வந்து மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரியிருந்தனர்.
 

 
எனினும் தடைசெய்யப்படாத தொழில் உபகரணங்களைக் கொண்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பார்களானால், அதை இலங்கை மீனவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள் எனவும் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார்.
 
இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வடமாகாண மாவட்டங்களின் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.