1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. India qualify for the final without playing in the semi-finals

#INDvENG பெண்கள் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்: அரை இறுதியில் விளையாடாமலே இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

BBC Tamil
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.

சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவேண்டிய அரையிறுதி போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், லீக் சுற்றில்  அனைத்து போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்ததால் அதன் அடிப்படையில் இறுதியாட்டத்தில் விளையாட இந்தியா தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் முதல்முறையாக விளையாடவுள்ளது இந்தியா.

இன்று மாலையில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெல்லும் அணியை இறுதியாட்டத்தில் இந்தியா சந்திக்கும்.

பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் பிரிவில், ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா லீக் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

சர்வதேச பெண்கள் தினமான வரும் மார்ச் 8-ஆம் தேதியன்று, டி20 மகளிர் உலகக்கோப்பை இறுதியாட்டம் நடக்கவுள்ள நிலையில், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என் இரண்டிலும் சிறப்பாக விளையாடிவரும் இந்தியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.