இந்திய - சீன எல்லை மோதல்: மூன்று இந்திய ராணுவத்தினர் பலி
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நேர்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் வீரர்கள் இருவரும், ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒருதலைபட்சமாக செயல்பட்டு பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் சீன வெளியுறவுத்துறை இந்திய ராணுவத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்தியா - சீனா இடையே நிலவி வரும் எல்லை பதற்றத்தைத் தணிக்க, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
எல்லையில் உள்ள இரு கண்காணிப்பு பகுதியில், ராணுவக்குவிப்பை குறைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
முன்னதாக ஜூன் ஆறாம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாய்ண்ட் 15, உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினரை 2 முதல் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அழைத்துக் கொண்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சுமார் ஐந்து வார காலமாக பூதாகரமாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.
அக்சாய் சீனாவின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது. ஆனால் சீனாவோ, கல்வான் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டியது.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.