திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (16:13 IST)

எண்ணெய் உற்பத்தி குறித்து செளதி அரேபியா சொன்ன கருத்தால் எரிச்சலுற்ற இந்தியா

கச்சா எண்ணெய் விலை தொடர்பாக இந்தியாவுக்கும் செளதி அரேபியாவிற்கும் இடையிலான உறவில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் மனக்கசப்பு இப்போதும் குறையாதது போலவே தோன்றுகிறது.
 

அண்மையில், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செளதி அரேபியாவின் எண்ணெய் அமைச்சர் அப்துல் அஜீஸ் பின்  சல்மான் அல் சவுத் தெரிவித்த கூற்றுக்கு ஆட்சேபம் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த வேண்டுகோளுக்கு  பதிலளித்த செளதி அமைச்சர், கடந்த ஆண்டு எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு மத்தியில் இந்தியா வாங்கிக்குவித்த எண்ணெய் இருப்பை பயன்படுத்துமாறு கூறினார்.
 
இது ராஜீய அடிப்படையில் ரீதியில் சரியானதல்ல என்று செளதி அரேபிய எண்ணெய் அமைச்சரின் அறிக்கை குறித்து தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்தார்.  "அத்தகைய அணுகுமுறையை நான் ஏற்கவில்லை. நிச்சயமாக கையிருப்பில் உள்ள எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவுக்கு அதன் சொந்த திட்டமிடல்  உள்ளது. நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
இந்தியா-செளதி அரேபியா உறவுகளில் இந்த மனக்கசப்பின் தாக்கம் என்ன என்பதை பிறகு பார்ப்போம். இந்தியாவிடம் எவ்வளவு எண்ணெய் இருப்பு உள்ளது,  எப்போது இந்த இருப்பை பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
 
இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் (பெருந்தொற்று மற்றும் பொதுமுடக்கம் தொடங்கிய பின்னர்) பெட்ரோலிய  இருப்பின் முழு கொள்ளளவையும் இந்திய அரசு முழுமையாக நிரப்பிக்கொண்டுள்ளது என்றும் இதன் காரணமாக சுமார் 5,000 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கடந்த மாதம் மாநிலங்களவையில் தர்மேந்திர பிரதான் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
 
உண்மையில், இந்திய அரசின் ஒரு துறையான இண்டியன் ஸ்டாடெர்ஜிக் பெட்ரோலியம் ரிசர்வ் லிமிடெட் (ஐ.எஸ்.பி.ஆர்.எல்) இன் பொறுப்பு எண்ணெய் இருப்புக்களை அதிகரிப்பதாகும். இந்தத் துறை இதுவரை மூன்று இடங்களில் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் இருப்புகளை உருவாக்கியுள்ளது. இது திட்டமிட்ட  பெட்ரோலியம் ரிசர்வின் கீழ் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அன்றாட நுகர்வுக்கு ஏற்ப இந்த இருப்பு சுமார் 10 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்.  இந்த சேமிப்பு கிடங்குகள் விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பதூர் ஆகிய இடங்களில் உள்ளன.
 
தனியார் நிறுவனங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய், நாட்டின் தேவையை பார்க்கும்போது அது 64.5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அமைச்சர்  தனது பதிலில் தெரிவித்துள்ளார். அதாவது சில காரணங்களால் இந்தியாவால், எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால், அதன் மொத்த கையிருப்பு 74 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்.
 
இரண்டாம் கட்டத்தில், ஒடிஷாவின் சண்டிகோலில் 4 மில்லியன் மெட்ரிக் டன் மற்றும் கர்நாடகாவின் பதூரில் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் இருப்பை  வைக்கக்கூடிய கிடங்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது 12 நாட்களுக்கு எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் மேலும்  கூறினார்.
 
உச்சத்தில் போகும் எண்ணை விலை
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை வேகமாக வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு மார்ச் முதல் உற்பத்தியைக் குறைத்தது. செளதி அரேபியாவும் தனது உற்பத்தியை சுருக்கிக்கொண்டது. இதன் காரணமாக, பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
 
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்து வருவது, பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாட்டிலேயே மிகவும் அதிக விலையாக, புதன்கிழமை,  ஜபல்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 98 ரூபாய் 57 காசுகளாக இருந்தது.
 
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச சந்தை விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால்,சர்வதேச சந்தையில்  எண்ணெய் விலை குறைகிறது அல்லது அதிகரிக்கிறது என்றால், இதேபோன்ற ஏற்ற இறக்கங்கள் இந்தியாவில் காணப்பட வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு  எண்ணெய் விலை வீழ்ச்சியால் சாதாரண நுகர்வோர் பயனடையவில்லை.
 
ஏனெனில் மோதி அரசு கலால் வரியை இரண்டு முறை அதிகரித்தது.
 
"2014இல் இந்த அரசு ஆட்சிக்கு வந்தபோது, எண்ணெய் விலை பீப்பாய்க்கு 106 டாலராக இருந்தது. அதன் பின்னர் விலைகள் குறையத்தொடங்கின. 'நான்  அதிருஷ்டசாலி, நான்ஆட்சிக்கு வந்ததிலிருந்து எண்ணெய் விலைகள் குறைந்து வருகின்றன' என்று நமது பிரதமரும் நகைச்சுவையாக கூறினார். அந்த நேரத்தில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு 72 ரூபாயாக இருந்தது. இந்தியாவில் விலை குறைய அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக அரசு கலால் வரியை  அதிகரித்தது," என்று ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி) இன் முன்னாள் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா குறிப்பிட்டார்.
 
எண்ணெய் உங்களை வந்தடையும் விதம்
 
1.சுத்தீகரிப்பு ஆலை - இங்கு கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலிய பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
 
2.கம்பெனிகள் - இவை லாபம் பெறுகின்றன. பெட்ரோல் பம்புகளுக்கு எண்ணெயை கொண்டுசேர்க்கின்றன.
 
3.பெட்ரோல் பம்புகள் - இங்கு பெட்ரோல் பம்ப் உரிமையாளர் நிர்ணயிக்கப்பட்ட கமிஷனை பெறுகிறார்.
 
4.நுகர்வோர் - இவர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு கலால் வரி மற்றும் வேட் தொகையை செலுத்தி, எண்ணெயை வாங்குகின்றனர்.
 
இந்த ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 71 டாலராக அதிகரித்தது. இப்போது அது பீப்பாய்க்கு சுமார் 64.5 டாலராக உள்ளது.  செளதி அரேபியாவின் முக்கியமான வாடிக்கையாளராக இருக்கும் இந்தியா உற்பத்தியை அதிகரிக்குமாறு ஜனவரி மாதம் கோரியது. ஆனால் இது செளதி அரேபியாவின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
 
அந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே மனக்கசப்பு சூழல் நிலவியது. மார்ச் மாதத்தில், ஒபெக் நாடுகள் மற்றும் செளதி அரேபியாவிடமும், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்தியா மீண்டும் கோரியது. ஆனால் இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படவில்லை. இது குறித்து இந்தியா  தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியபோது செளதி அரேபிய அமைச்சர், மலிவான விலையில் வாங்கிய கச்சா எண்ணெயின் இருப்பை இந்தியா பயன்படுத்த  வேண்டும் என்று கூறினார்.
 
செளதி அமைச்சரின் அறிக்கையால் இந்தியா ஏமாற்றம் அடைந்தால் அது சரியானது. ஏனெனில் எந்த ஒரு நாடும் தனது எண்ணெய் இருப்புக்களை எப்போது, எப்படிப் பயன்படுத்துகிறது என்பது அதன் உள் விவகாரம். இரண்டாவதாக, கையிருப்பை பயன்படுத்துவதில் சர்வதேச ஒப்பந்தம் உள்ளது. அதில் இந்தியாவும் ஒரு  உறுப்பினர்.
 
உறுப்பு நாடுகள் இந்த அமைப்பின் விதிகளின்படி இதுதொடர்பான முடிவுகளை எடுக்கின்றன என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் நிலவாயு தேவையை ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவில்தான் இவை கிடைக்கின்றன. எனவே அவற்றை இறக்குமதி  செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. நாடு கடந்த ஆண்டு தனது செலவில் 85 சதவிகிதத்தை வெளிநாட்டிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்த வேண்டியிருந்தது. இது சுமார் 120 பில்லியன் டாலர்.
 
இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கச்சா எண்ணெயின் அதிகத்தேவை உள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணெய், ஒரு  உந்துசக்தியாக செயல்படுகிறது. தற்போது இந்தியா தனது கச்சா எண்ணெயின் 25 சதவிகிதத்தை உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான செளதி அரேபியா  உள்ளிட்ட பிற அரபு நாடுகளிலிருந்து வாங்குகிறது.
 
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் பெரிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் ரஷ்யாவும்கூட உள்ளன.
 
எரிசச்தி கொள்கை
 
இந்தியா, வளைகுடா நாடுகளை நம்பியிருப்பதைக் குறைத்து ஈரான் மற்றும் வெனிசுயலாவிலிருந்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நேரம்  வந்துவிட்டது. அமெரிக்கா தடை விதித்ததால் இந்த இரு நாடுகளிலிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இந்த  நாடுகள் இந்தியாவுக்கு அதிக அளவு எண்ணெய் விற்பனை செய்து வந்தன என்று ஆளும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ண அகர்வால்  கூறுகிறார்.
 
இந்தியா நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்துவதோடு, தூய்மையான எரியாற்றல் மற்றும் எரியாற்றலின் பல வகைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்  என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளி எரிசக்தி விவகார நிபுணர் வந்தனா ஹரி, அறிவுறுத்துகிறார்.
 
மோதி அரசு நீண்டகால தீர்வுக்காக பல திட்டங்களை தொடங்க விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோதி, பிப்ரவரி 17 அன்று தமிழ்நாட்டில் ஆற்றிய உரையில்,மாற்று எரியாற்றல் வளங்கள் மற்றும் எண்ணெய்யை சார்ந்திருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
 
இந்தியா தனது எண்ணெய் கையிருப்பை அதிகரிக்கவேண்டும் என்று சில வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர் . அதாவது கையிருப்பை 74 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்க வேண்டும். திட்டமிட்டு சேகரிக்கப்படும் கையிருப்பு அவசர காலத்திற்கானது என்றாலும், பேரழிவு அல்லது போர் காரணமாக சர்வதேச  சந்தையில் எண்ணெய் விலை உயரத் தொடங்கினால், சேமிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த நேரத்தில், அமெரிக்கா இதுபோன்ற மிகப்பெரிய  இருப்பை உருவாக்கியுள்ளது.
 
எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடு இந்தியா
 
அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு, இந்தியா அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது. எனவே, இருப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள்  வலியுறுத்துகின்றனர்.
 
பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக இருப்பதால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் செளதி அரேபியா இந்தியாவின்  கோரிக்கைக்கு சிறிதும் செவிசாய்க்கவில்லை என்றால் இது , இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் உருவான நெருங்கிய உறவின் மீது தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
கடந்த ஆறு ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோதி இரண்டு முறை செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் இந்தியாவின் பார்வையில்  செளதியின் அந்தஸ்து எண்ணெய் விற்பனை செய்யும் ஒரு நாடாக மட்டுமே இல்லை.
 
தனது பொருளதார வளர்ச்சிக்காக, எண்ணெய் ஏற்றுமதி மீதான சார்பை குறைக்க செளதி அரேபியா, இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய விரும்புகிறது.  இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அது திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தனது முதலீட்டுத் திட்டங்கள் சரியான திசையில்  சென்றுகொண்டிருப்பதாக, டிசம்பரில் செளதி அரேபியா,இந்தியாவுக்கு உறுதியளித்தது. இது தவிர, ராணுவ மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளுக்கும்  இடையிலான உறவு ஆழமடைந்துள்ளது.
 
இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மிகவும் தேவைப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். சீனாவுக்குப் பிறகு செளதி எண்ணெயை அதிகம் வாங்கும் நாடு இந்தியா.  இராக்கிற்குப் பிறகு இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் மிகப்பெரிய நாடு செளதி அரேபியா. இது தவிர, எரிசக்தி தொழில்துறையில் செளதி அரேபியாவின் முதலீடும், இந்தியாவின் தொழில்நுட்பமும், வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு இரு நாடுகளையும் வலுவான நிலையில் பிணைத்திருக்கும்.