ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2019 (19:14 IST)

இம்ரான்கான் - 'திருப்பித் தாக்குவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இருந்திருக்காது'

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இது சோதனை காலம். கடந்த பிப்ரவரி மாதம், தமது நாட்டு பிராந்தியத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.
சரியாக கையாண்டிருக்காவிட்டால், இந்நேரம் அந்த விவகாரம், இரு அணுசக்தி நாடுகளிடையே கடுமையான மோதலை விளைவித்திருக்கும். ஆனால், அந்த நேரத்தில் நிலவிய கொந்தளிப்பை தணிக்க அவர் முற்பட்டார். பாகிஸ்தான் பிராந்தியத்துக்குள் நுழைந்து, தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் ஜெய்ஷ்-இ-மொஹம்மத் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை இலக்கு வைத்து அங்கு எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாக இந்தியா கோரியது.
 
பிபிசி செய்தியாளர் ஜான் சிம்ப்ஸன் உடனான பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் இதோ.
 
கேள்வி: ஒரு அணு ஆயுத பலமுள்ள நாடு பாகிஸ்தான் என்றபோதும், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா நடத்திய தாக்குதல், அபாயகர மோதலுக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனாலும், தமது எதிர்வினையை வெளிப்படுத்தும் விஷயத்தில் இம்ரான் கான் கடுமையான கட்டுப்பாட்டுடன் செயல்பட்டிருக்கிறாரே...
 
பதில்: ஒருமுறை பதிலடி கொடுக்கத் தொடங்கினால், அது எங்கு அழைத்துச் செல்லும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. ஏனென்றால் மீண்டும் அவர்கள் வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியிருந்தால், எங்களுக்கு திருப்பித் தாக்குவதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. அதனால், அத்தகைய சூழ்நிலையில், இரு அணு ஆயுத நாடுகளும் அப்படி நடந்து கொள்வது பொறுப்பற்றதாக இருக்கும் என நான் கருதினேன்.
 
 
கேள்வி: இந்த நேர்காணல் மூலம் இந்தியர்களுக்கும் இந்தியாவிவை ஆளும் நரேந்திர மோதி அரசுக்கும் நீங்கள் என்ன செய்தியை தெரிவிக்கவுள்ளீர்கள்?
 
பதில்: இரு தரப்பு அரசுகளுக்கும், வறுமையை ஒழிக்க வேண்டும் என்பது முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். வறுமையை ஒழிப்பதென்பது, நமக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாகும்.
 
 
ஒரேயொரு வேறுபாடு, காஷ்மீர் வடிவில் உள்ளது. அதுவும் தீர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் காஷ்மீர் விவகாரம் இந்த அளவுக்கு கொந்தளிப்புடன் இருக்கக் கூடாது. காஷ்மீரில் நடக்கும் எந்தவொரு எந்தவொரு செயலுக்கான எதிர்வினைக்கும் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
 
நாங்கள் குற்றம்சாட்டப்படுகிறோம். பதற்றங்கள் தீவிரமாகலாம். கடந்த காலங்களில் அவ்வாறு நடந்துள்ளது. எனவே, காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு காணலாம். துணைக் கண்டத்தில் சமாதானத்துக்கான பலன் மிகப்பெரியது.
 
கேள்வி:இந்திய அரசாங்கமோ நீங்கள் தீவிரவாதத் தடுப்பில் போதுமான அளவுக்கு எதுவும் செய்வதில்லை என்று கூறுகிறதே?
 
பதில்:நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களை முடக்குவதற்கான வேலை நடந்து வருகிறது.
 
கேள்வி:ஜெய்ஷ்-இ-மொஹம்மத் உள்படவா?
 
பதில்:ஜெய்ஷ்-இ-மொஹம்மத் உள்படத்தான். அவர்களின் மதரஸாக்களையும் பல அமைப்புகளையும் கையகப்படுத்தியிருக்கிறோம். தீவிரவாத குழுக்களை நிராயுதமாக்கும் முதலாவது கடுமையான முயற்சி இது.
 
 
 
 
கேள்வி:அதை தீவிரமாக்க ஈடுபாடு காட்டுவீர்களா?
 
பதில்:எங்களுக்கு மன உறுதி இருக்கிறது. ஏனெனில் அது பாகிஸ்தானின் எதிர்காலம் பற்றிய விஷயம். வெளியில் இருந்து அழுத்தங்கள் வருகிறதோ, இல்லையோ, இனிமேலும் இங்கே தீவிரவாத குழுக்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதில் எங்களின் நலன் இருக்கிறது.
 
நேர்காணல் முடிந்து இம்ரான் கான் புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்த அதிகாரி, ஒரு சிறிய பெட்டியை கொண்டு சென்றார். அதில் பாகிஸ்தானின் அணு ஆயுதத்தை இயக்கும் குறியீடு இருப்பதாக நம்மிடம் தெரிவிக்கப்பட்டது.