வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (22:02 IST)

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் நடந்தவற்றை போலீசில் கூறினேன்: கமல்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் நடந்தவற்றை போலீசில் கூறினேன்: கமல்
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஆஜராகிய நடிகர் கமல்ஹாசன், விபத்து நேரத்தில் என்ன நடந்தது என விளக்கம் தந்ததாக தெரிவித்துள்ளார்.
 
இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கமல் எந்த வகையில் விசாரணையில் பதில் அளிக்கப்பட்டது என விவரிக்கவில்லை. ஆனால் தமிழ் சினிமா துறையில் இனி இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முதல்படியாக இந்த விசாரணையை எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
 
சென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கடந்த பிப்22-ம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு பதிவானது.
 
படப்பிடிப்பின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் இருந்தன என்பது தொடர்பாக வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே, விபத்து குறித்து இயக்குநர் சங்கரிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
தற்போது நடிகர் கமல் ஹாசனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அவர் இன்று வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணை நடைபெற்றதை அடுத்து, தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்தவார்களிடம் ஆலோசனை செய்து, விபத்துகளை தவிர்க்க என்ன முன்னெச்சரிக்கைகள் தேவை என்பதை விரைவில் பேசப்போவதாக கமல் தெரிவித்தார்.