1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj

"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய அதிகாரி

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 45ஆவது கூட்டத்தில் பாகிஸ்தானின் இந்தியா விரோத செயல்பாடுகளை பட்டியலிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான செந்தில்குமார்.

கடந்த 14ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை மனித உரிமைகள் கவுன்சில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய மனித உரிமைகள், அரசியல் சூழ்நிலைகள், பொருளாதாரம், கலாதார உரிமைகள், வியன்னா பிரகடனத்தின் அமலாக்கம், நிற, இன பாகுபாடு, சகிப்புத்தன்மையற்ற நிலையை ஒழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து உறுப்பு நாடுகள் விவாதித்து வருகின்றன.

இந்த கவுன்சிலில் ஆப்கானிஸ்தான், அங்கோலா, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹாமாஸ், பஹ்ரைன், வங்கதேசம், பிரேஸில், பல்கேரியா, புர்கினா ஃபாஸோ, கேமரூன், சிலி, ச்செஸியா, காங்கோ, டென்மார்க், எரிட்ரியா, ஃபிஜி, ஜெர்மனி, இந்தியா, இந்தோனீசியா, இத்தாலி, ஜப்பான், லிபியா, மார்ஷல் தீவுகள், மோரிடானியா, மெக்ஸிகோ, நமிபியா, நேபாளம், நெதர்லாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, ஃபிலிப்பைன்ஸ், போலாந்து, கத்தார், தென் கொரியா, செனகல், ஸ்லோவாகியா, சோமாலியா, ஸ்பெயின், சூடான், டோகோ, யுக்ரேன், உருகுவே, வெனிஸ்வேலா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த கூட்டத்தில் இந்திய அரசின் சார்பில் அதன் வெளியுறவு அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான செந்தில்குமார், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய செயல்பாடுகள், இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் பிரசாரங்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டி தமது உரையை பதிவு செய்தார்.

அப்போது அவர், சர்வதேச அரங்கில், மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு பாகிஸ்தான் முதலில் தனது சொந்த நாட்டை கவனிப்பது நல்லது என்றார்.

பாகிஸ்தானின் செயல்பாடுகள், எங்களை ஆச்சரியப்படுத்தாவிட்டாலும், இந்தியாவின் உள் விஷயங்களைப் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் பொறுப்பற்ற குறிப்புகளுடன் கூடிய மோசமான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து, இந்த கவுன்சிலின் கவனத்தை பாகிஸ்தான் இரண்டு முறை திசை திருப்ப முயன்றிருக்கிறது.

ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த ஓசிஹெச்ஆர்சி கூட்டத்தில் கூட பாகிஸ்தானில் திடீரென மாயமாகும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் சம்பவங்கள் தொடர்பாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டு பாகிஸ்தானிடம் விளக்கம் கோரப்பட்டதை இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.

இத்ரிஸ் கட்டக் என்ற பாகிஸ்தானிய மனித உரிமை செயல்பாட்டாளர் காணாமல் போய் 9 மாதங்கள் ஆகின்றன. அவரது 20 வயது மகள் தாலியா, இப்போதும் தனது தந்தைக்கு எதிரான விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். இதே அறையில் கடந்த வாரம் பாகிஸ்தானில் நடக்கும் கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களுக்கு ஆழமான வகையில் கவலை தெரிவிக்கப்பட்டதையும் நான் நினைவுகூர விரும்புகிறேன்.

வெகு சமீபத்தில் பெண் பத்திரிகையாளரும் மனித உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவருமான மர்வேய்ஸ் சர்மா, சமூக ஊடகத்தில் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலான விமர்சனங்களை எதிர்கொண்டார். பத்திரிகையாளர்கள் அகமது நூரானி, குல் புக்காரி ஆகியோரும் அவர்களின் குடும்பங்களும் தினமும் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டு தொடர்ச்சியான அச்சுறுத்தலில் வாழ்கிறார்கள்.

பத்திரிகையாளர்கள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மட்டுமின்றி அடிக்கடி குறைந்த வயதுடைய இந்து, கிறிஸ்துவ சிறுமிகள் கடத்தப்படுவது தொடர்கிறது. பலூசிஸ்தான், கைபர்பக்தூங்வா, சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள சட்ட அமலாக்கத்துறையினர் தங்குதடையின்றி அதிகாரத்தை செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு குறைவானவர்கள் கூட அங்கு தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கட்டாயப்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்ட தனது சகோதரர்கள் ஹஸ்ஸன், ஹிஸ்புல்லா கம்ரானி ஆகியோருக்காக அவர்களின் சகோதரி ஹசீபா கம்ரானி வெளிப்படுத்தும் அழுகை கேட்பாரற்றுப்போனது. இதுதான் பாகிஸ்தானில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் துயர நிலை. இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானில் நீங்கள் வீடு திரும்ப முடியாது என்று அங்குள்ளவர்கள் பேசுகிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பற்றி பேசுகிறேன். கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போனவர்கள், தடுத்து வைக்கப்படுவோர், காவலில் நடக்கும் மரணங்கள், சிவில் உரிமை செயல்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தல் போன்றவை கில்கிட் பலூசிஸ்தானில் பொதுவாக நடக்கும் விஷயங்களாகி விட்டன. தடுத்து வைக்கப்பட்டிருந்த பல காஷ்மீரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று செந்தில்குமார் பேசினார்.