வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (11:32 IST)

மனித உரிமை ஆர்வலர் மஹிந்த: ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை!

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் இரண்டாம் பாகம் இது.
 
பெலியத்த தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் தனது தொகுதியில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ. அந்தத் தருணத்தில் அவரது தாயார் மிகக் கவனமாக மஹிந்தவை வழிநடத்தினார்.
 
1970ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து மஹிந்தவும் தனது பணிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார். எதிர்பார்த்ததைப் போலவே பெலியத்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது மஹிந்தவுக்கு. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ரஞ்சித் அட்டபட்டுவை எளிதில் தோற்கடித்தார் மஹிந்த.
இந்த காலகட்டத்தில்தான் அவருடன் இணைந்துகொண்டார் அவருடைய சகோதரரான பஷில் ரோஹண ராஜபக்ஷ. மஹிந்த இல்லாத நேரங்களில் பெலியத்த தொகுதியில் பஷிலைத்தான் அப்பகுதியினர் தொடர்புகொள்ள வேண்டும்.
 
1977ல் நடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த சார்ந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிகப் பெரிய தோல்வியை எதிர்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெ.ஆர். ஜெயவர்த்தன மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.
 
முந்தைய பாகம்: இலங்கை அரசியலில் ராஜபக்ஷேக்கள் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி?
 
இந்தத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த, ரஞ்சித் அட்டபட்டுவிடம் தோற்றுப் போனார். சகோதரர் பஷிலும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். இந்த காலகட்டத்தில் சட்டப்படிப்பில் கவனம் செலுத்தினார் மஹிந்த.
 
1972ல் இலங்கையில் புதிதாக அரசியல் சாஸனம் எழுதப்பட்ட பிறகு, இலங்கையின் சட்ட விவகாரங்களை இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, 1973ல் ஃபெலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்படி, 30 வயதுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். இந்த விதியைப் பயன்படுத்திய மஹிந்த தனது சட்டப்படிப்பை முடித்தார். 1981ல் வழக்கறிஞராக பணியாற்றிய்மஹிந்த, எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை நீதிமன்றங்களில் செயல்பட்டுவந்தார்.
இந்த காலகட்டத்தில், சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் அவருடைய மகன் அனுர பண்டாரநாயகவிற்கும் எழுந்த மோதலில், அனுர கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். அந்தத் தருணத்தில் பஷில் ராஜபக்ஷ அனுர பண்டாரநாயகவுக்கு நெருக்கமானவராக அடையாளம் காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அனுர திரும்பவும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், அவருடன் வெளியேறியவர்களுக்கு பெரிதாக பொறுப்பு கிடைக்கவில்லை. ஆனால், மஹிந்த தொடர்ந்து பெலியத்த தொகுதியின் பொறுப்பாளராக நீடித்தார்.
 
இந்த காலகட்டத்தில், காவல்துறையில் பணியாற்றிவந்த சாமல் ராஜபக்ஷ என்ன செய்துகொண்டிருந்தார்? 1970ல் சிறிமாவோ பிரதமரானபோது, சாமல் ராஜபக்ஷ பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் ஒரு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1977ல் சிறிமாவோ பதவிவிலகும்வரை, அந்தப் பிரிவில் பணியாற்றிவந்தார் சாமல்.
 
1977ல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தபிறகு, சாமல் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இனியும் காவல்துறையில் இருப்பது பெரிய பலனளிக்காது என்பதைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, அந்தப் பணியிலிருந்து ராஜினாமா செய்தார் சாமல்.
 
1970களின் பிற்பகுதியில், சிறிமாவோவின் மகளான சந்திரிகாவும் அரசியலில் ஆர்வம்காட்ட ஆரம்பித்திருந்தார். இதற்கு நடுவில் இலங்கையின் அரசியல் சாஸனம் திருத்தப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டிருந்தது. 1982ல் நடந்த பொதுத் தேர்தலிலும் ஜெயவர்தனவே மீண்டும் வெற்றிபெற்றார்.
 
தனது பெலியத்த தொகுதியில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தார் மஹிந்த. 1983ல் நடந்த இடைத் தேர்தலிலும் மஹிந்தவுக்குத் தோல்வியே கிடைத்தது. இதற்குப் பிறகு அரசியல் ரீதியாக அமைதியாக இருந்தார் மஹிந்த.
 
இந்த நேரத்தில்தான் ஜனதா விமுக்தி பெரமுனவின் கலகங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. அதனை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், கடும் விமர்சனத்திற்கு உள்ளாயின. பலர் காணாமலாக்கப்பட்டனர். பலர் கைதுசெய்யப்பட்டார்கள். ஆனால், அதற்குப் பிறகு அவர்களைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.
 
பல மனித உரிமை அமைப்புகள், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. இந்தத் தருணத்தில் பத்திரிகையாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான குஷால் பெரேரா மஹிந்தவைத் தொடர்புகொண்டு, தென்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிறகு, மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் இருவரும் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தனர்.
 
"மஹிந்தவுடன் சேர்ந்து செயல்படுவது மிக எளிது. அரசியல் ரீதியாக அவரை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடலாம். ஆனால், மிகத் துல்லியமான செயல்பாட்டு அறிவைக் கொண்டவர்" என நினைவுகூர்கிறார் குஷால் பெரேரா.
 
1989 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதற்குப் பிறகும் அவரது மனித உரிமைச் செயல்பாடுகள் தொடர்ந்தன. மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து சர்வதேச கவனத்திற்குக் கொண்டுவந்தபடி இருந்தார் மஹிந்த. ஐநா மனித உரிமை செயற்பாட்டுக் குழுவின் பிரச்சாரகராகவும் அங்கீகரிக்கப்பட்டார் மஹிந்த.
 
1991-92 காலகட்டத்தில் மஹிந்தவின் செல்வாக்கு வளர ஆரம்பித்தது. ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிரான அவரது குரல்கள் கவனிக்கப்பட்டன. அதேபோல, தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடத்திய சிலர் காணாமல்போனபோது அவர்களுக்காகவும் பேச ஆரம்பித்தார் மஹிந்த.