வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (23:11 IST)

உடல்நலம்: கருப்பு மரணம் 700 வருடங்களுக்குப் பிறகும் எப்படி மனிதர்களை பாதிக்கிறது?

பிளேக் தொற்றின் பேரழிவு மனிதகுலத்தின் மீது நம்பமுடியாத மரபணு அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அது சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

 
1300களின் மத்திய பகுதியில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் பரவிய போது, பாதியளவு மக்கள் உயிரிழந்தனர்.

 
பல நூற்றாண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளின் மரபணுவை (டிஎன்ஏ) பகுப்பாய்வு செய்யும் முன்னோடியான ஒரு ஆய்வில், மக்கள் பிளேக் நோயிலிருந்து தப்பிக்க உதவும் திரிபுகள் கண்டறியப்பட்டன.

 
ஆனால் அதே திரிபுகள் இன்று மக்களைத் தாக்கும் தன்னெதிர்ப்பு நோய்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.

 
'பிளாக் டெத்' எனப்படும் கருப்பு மரணத்தால், மனித வரலாற்றில் மிக முக்கியமான, கொடிய மற்றும் இருண்ட தருணங்களில் ஒன்றாகும். அதனால் இரண்டு கோடி மக்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது

 
இத்தகைய மகத்தான நிகழ்வு மனித பரிணாமத்தை வடிவமைத்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் 206 பழங்கால எலும்புக்கூடுகளின் பற்களில் இருந்து எடுக்கப்பட்ட மரபணுவை ஆய்வு செய்தனர். அதன் மூலம் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் கருப்பு மரணத்திற்கு முன்பானவையா, சம்பவ காலத்தைச் சேர்ந்தவையா அல்லது அதற்குப் பிந்தையவையா என்பதை அவர்கலால் துல்லியமாக கணக்கிட முடிந்தது.
 
இந்த பகுப்பாய்வில் கிழக்கு ஸ்மித்ஃபீல்ட் பிளேக் குழிகளில் இருந்த எலும்புகளும் அடங்கும். அவை லண்டனில் வெகுஜன புதைகுழிகளாகப் பயன்படுத்தப்பட்டன. டென்மார்க்கிலிருந்தும் இது தொடர்பாக மேலதிக மாதிரிகள் வருகின்றன.
 
 
13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிளேக் தொற்று நோய் ஐரோப்பாவை புரட்டிப் போட்டது. ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொடூர தொற்று நோயாகவே அது பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வந்தது.
 
1347-ஆம் ஆண்டு முதல் 1351-ஆம் ஆண்டு வரை தீவிரமாக பரவிய இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அதுவரை உலகில் எந்த போரிலும் ஏற்படுத்திராத உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என பிரிட்டானிக்கா இணையதளம் குறிப்பிடுகிறது.

 
மத்திய ஆசியா மற்றும் சீனாவில் உருவானதாக நம்பப்படும் இந்த பிளேக் தொற்று, வர்த்தக கப்பல்கள் மூலமாக இத்தாலிக்கும் அங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாக குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதள செய்தி கூறுகிறது.
 
லண்டனையையும் விட்டுவைக்காத இந்த நோய், அந்நகர மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரை கொன்று குவித்தது. 13-ஆம் நூற்றாண்டு மட்டுமல்லாமல் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும், சீனாவிலும் மீண்டும் பரவிய இந்த நோய்க்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பரவியவர்களில் 80 சதவீதம் பேர் மரணமடையும் அளவுக்கு அதன் தீவிரம் இருந்தது.
 
 
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட தனித்துவமான கண்டுபிடிப்பு, ERAP2 எனப்படும் மரபணுவில் உள்ள திரிபுகளைச் சுற்றி உள்ளது. உங்கள் உடலில் இந்த திரிபுகள் சரியான முறையாக இருந்தால் பிளேக் நோயிலிருந்து நீங்கள் தப்பிக்க 40% வாய்ப்புண்டு.

 
"இது பெரியது. மிகப்பெரிய விளைவு. மனித மரபணுத் தொகுதியில் இப்படி ஒன்றை கண்டுபிடிப்பது ஆச்சரியம்" என்கிறார் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் லூயி பரெய்ரோ.
 
 
மரபணுவின் பணி, ஊடுருவும் மைக்ரோப்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகளை வெட்டும் புரதங்களை உருவாக்கி, நோய் எதிர்ப்பு அமைப்புக்கு துண்டுகளை காட்டி எதிரியை அடையாளம் கண்டு அழிப்பதாகும்.
 
 
மரபணு பல வகைகளில் வரும். சில வகை மிகச்சிறப்பாக வேலை செய்யும். சில எதுவுமே செய்யாது. ஒவ்வொரு மரபணுவில் இருந்தும் ஒரு ஜீன் கிடைக்கும்.

 
எனவே, உயிர் பிழைத்திருக்க அதிக வாய்ப்புள்ள அதிஷ்டசாலிகள், தனது தாய் தந்தையிடமிருந்து சிறந்த வகை மரபணுவை பெற்றிருப்பர்.

 
அப்படி பிழைத்தவர்களுக்கு குழந்தைகள் இருந்தனர். அதன் மூலம் பயனுள்ள திரிபுகள் வழி, வழியாக வந்து திடீரென்று அவை பொதுவானதாகிவிட்டன.

 
"இரண்டு முதல் மூன்று தலைமுறைகளில் 10% மாற்றத்தை நாங்கள் பார்க்கிறோம். இது இன்றுவரை மனிதர்களில் காணப்படும் வலுவான தேர்வு நிகழ்வு" என்று மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் பரிணாம மரபியலாளரும் பேராசிரியருமான ஹென்ட்ரிக் பாய்னார் என்னிடம் கூறினார்.
 
 
பிளேக் பாக்டீரியவான யெர்சினியா பெஸ்டிஸை பயன்படுத்தி நவீன கால சோதனைகளில் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பயனுள்ள திரிபுகள் கொண்ட மக்களின் ரத்த மாதிரிகளால், நோய்த்தொற்றை அதிகமாகவே எதிர்க்க முடிந்தது.
 
 
அன்று காப்பாற்றியவை இன்று பாதிக்கும் இன்றும் அந்த பிளேக்-எதிர்ப்பு திரிபுகள், கருப்பு மரணத்திற்கு முன்பு இருந்ததை விட மிகவும் பொதுவானவை.
 
 
பிரச்னை என்னவென்றால், அவை குடல் அழற்சி நோய் க்ரோன் போன்ற தன்னுடல் எதிர்ப்பு நோய்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன - இது 700 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் முன்னோர்களை உயிருடன் வைத்திருக்க உதவியது, ஆனால் இன்று உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.

 
நமது டிஎன்ஏவில் உள்ள மற்ற வரலாற்று சக்திகளுக்கு, நாம் உணரக்கூடிய மரபு உள்ளது. நவீன கால மனித டிஎன்ஏவில் சுமார் 1-4 சதவீதம், நம் முன்னோர்கள் நியண்டர்தால்களுடன் இனச்சேர்க்கை செய்ததிலிருந்து வருகிறது. மேலும் இந்த பரம்பரை வழி, கோவிட் உள்ளிட்ட நோய்களுக்கு எதிர்வினையாற்றும் நமது திறனை பாதிக்கிறது.

 
"எனவே கடந்த காலத்தின் அந்த தழும்புகள், இன்றும் நோய்க்கான நமது பாதிப்பை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கின்றன" என்கிறார் பேராசிரியர் பரெய்ரோ.
 
 
40% உயிர்வாழும் சாதகம், "மனிதர்களில் இதுவரை மதிப்பிடப்பட்ட வலிமையான தேர்ந்தெடுக்கப்பட்ட உடற்தகுதியின் விளைவு" என்று பேராசிரியர் பரெய்ரோ கூறினார். ஹெச்ஐவி-எதிர்ப்பு திரிபுகள் அல்லது பாலை ஜீரணிக்க உதவும் நன்மைகளை இது சுருக்குகிறது. இருப்பினும் இதை நேரடியாக ஒப்பீடு செய்வது தந்திரமானது என்று அவர் எச்சரிக்கிறார்.
 
கோவிட் பெருந்தொற்று இதுபோன்ற ஒரு மரபை விட்டுச் செல்லாது.
 
இனப்பெருக்கம் செய்து உங்களுடைய மரபணுக்களை அடுத்தடுத்து கொண்டு செல்லும் திறன் மூலம் 'பரிணாமம்' செயல்படுகிறது. ஏற்கெனவே குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நிலையைத் தாண்டிய முதியவர்களைக் கோவிட் அதிகமாகவே உயிரிழக்கச் செய்திருக்கிறது.
 
எல்லா வயதுடையவர்களையும் கொல்லும் திறனை பிளேக் கொண்டிருந்தது. அத்தகைய அதிக உயிரிழப்புகள் நடந்தது என்றால், அது நீடித்த விளைவையும் கொண்டிருந்தது என்றே அர்த்தம்.