வன உரிமை சட்டம்: வால்பாறை பழங்குடிகள் போராட்டம், 250 பேர் கைது
வால்பாறையில் மலைவாழ் மக்களின் வன உரிமை அங்கீகார சட்டப்படி பட்டா கேட்டு நடைபயணம் மேற்கொண்ட 250க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 16-க்கும் மேற்பட்டமலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வனநில உரிமை அங்கீகார சட்டம் 2006ன்படி ஆனைமலைத்தொடர் பூர்வகுடி மலைவாழ் மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் நில உரிமை வழங்க வலியுறுத்தி வால்பாறை முதல் கோவை ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயண போராட்டத்தை நடத்த காந்தி சிலை அருகே ஏராளமானோர் இன்று காலை கூடினர்.
நடைபயணம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்ததையடுத்து பழங்குடியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால், பழங்குடியின மக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்களையும், அவர்களது குழந்தைகளோடு கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆனமலைத் தொடர் அனைத்து ஆதிவாசி பழங்குடி மக்கள் அமைப்பச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'மக்கள்தொகையில் மத்திய அரசின் வனநிலை உரிமை அங்கீகார சட்டப்படி குடிமனை, பாரம்பரிய விவசாய நிலங்கள், சமுதாய வன உரிமைக்கான பட்டாவை உடனே வழங்கவும், கடந்தாண்டு ஏற்பட்ட கன மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நாகரூத்து, கல்லார் கிராமங்களுக்கு மாற்று இடம் மற்றும் நிலம் வழங்க கோரியும்.
மேலும், அனைத்து வன கிராமங்களையும் வருவாய் கிராமமாக மாற்றி வன உரிமைச்சட்டத்தின் படி மாற்றம் செய்து குடிநீர், சாலை வசதி, மின்சாரம், கழிப்பிடம், கல்வி சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.
பழங்குடியினர் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து வால்பாறையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.