வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (21:21 IST)

ஃபிட் இந்தியா மூமண்ட்: 'வெற்றிக்கும் உடற்பயிற்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது' - நரேந்திர மோதி

இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, விளையாட்டு மற்றும் உடல் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் 'ஃபிட் இந்தியா மூமண்ட்' (FIT INDIA MOVEMENT) எனும் பிரசாரத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார்.
இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
 
இதன் நோக்கம் என்ன?
 
இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
அதன் ஒரு பகுதியாக, நாட்டு மக்களின் தினசரி செயல்பாட்டில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை இணைப்பதற்கு ஊக்குவிக்கும் 'ஃபிட் இந்தியா மூமண்ட்' எனும் பிரசாரத்தின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
 
உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது?
 
ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்தும் உடற்பயிற்சி: யார், என்ன பயிற்சி செய்ய வேண்டும்?
இந்த பிரசாரத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோதி, அதுதொடர்பாக உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டார்.
 
அதன் பிறகு கூட்டத்தினரிடையே உரையாற்றிய மோதி, "உடற்பயிற்சி என்பது நமது கலாசாரத்துடன் இணைந்த ஒன்றாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஆனால், தற்போது மக்களிடையே உடற்பயிற்சி குறித்த அலட்சிய போக்கு நிலவுகிறது. சில தசாப்தங்களுக்கு முன்புவரை ஒரு சாதாரண நபர் ஒரு நாளைக்கு 8-10 கிலோமீட்டர் நடந்ததுடன், மிதிவண்டியும் ஓட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உடல் செயல்பாடுகளின் அளவு பெருமளவு குறைந்துவிட்டது. ஆனால், அதே தொழில்நுட்பம் நாம் குறைந்தளவு நடக்கிறோம் என்று கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது" என்று கூறினார்.
 
"குத்துச்சண்டை, பேட்மிண்டன், டென்னிஸ் அல்லது வேறெந்த விளையாட்டாக இருந்தாலும், நமது லட்சியத்துக்கு வீரர்கள் புதிய சிறகுகளை அளிக்கிறார்கள். இந்திய வீரர்களின் வெற்றி பதக்கங்கள் அவர்களது கடின உழைப்பை மட்டும் பறைசாற்றவில்லை, புதிய இந்தியாவின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
 
வெற்றிபெறுவதற்கு மின்தூக்கி கிடையாது; படிக்கட்டைதான் பயன்படுத்த வேண்டும். வெற்றிக்கும் உடற்பயிற்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது உண்மையே. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலமாக இருந்தால்தான் எதிலும் சாதிக்க முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.
 
'ஃபிட் இந்தியா மூமண்ட்' அரசின் பிரசாரம் இல்லை என்றும், இதில் அரசு ஒரு ஊக்கியாக மட்டுமே செயல்பட விரும்புவதாகவும் கூறினார்.
 
முன்னதாக, கடந்த 25ஆம் தேதி தனது மாதாந்திர வானொலி உரையான "மன்-கி-பாத்" மூலம் இந்த பிரசாரம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோதி, இதில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
 
பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்துள்ள இந்த பிரசாரத்துக்கு சக அமைச்சர்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.