விவசாயிகள் போராட்டம்: செல்ஃபோன் டவர்கள் சேதம்; கோரிக்கை விடுக்கும் பஞ்சாப் முதல்வர்
இன்று (28 டிசம்பர் 2020, திங்கட்கிழமை) சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையதளங்களிள் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து 1,400 செல்போன் கோபுரங்களை சேதப்படுத்திய பஞ்சாப் விவசாயிகள்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை 1 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் போன்ற சவால்களையும் மீறி இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இதுவரை 1,400 செல்போன் கோபுரங்களை பஞ்சாப் விவசாயிகள் சேதப்படுத்தி இருக்கிறார்கள் என தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.
பஞ்சாப்பில் தொழிலதிபர்களான அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்போன் கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக பஞ்சாப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினமும், நேற்றுமாக மாநிலத்தில் ஏறக்குறைய 176 செல்போன் கோபுரங்களை அவர்கள் சூறையாடி சேதப்படுத்தி உள்ளனர். அங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் இருந்த ஊழியர்களையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இந்த 176 கோபுரங்களையும் சேர்த்து இதுவரை 1,411 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதனால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் ஜியோ போன்ற செல்போன் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.
விவசாயிகள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த 25-ந்தேதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது வேண்டுகோளையும் ஏற்காமல் விவசாயிகள் தொடர்ந்து வன்முறையில் இறங்கி வருகிறார்கள் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.