1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: வியாழன், 6 நவம்பர் 2014 (14:43 IST)

ஐரோப்பிய நாடுகளின் குடியேறிகளால் பிரிட்டனுக்கு லாபம்

பிரிட்டனில் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வொன்று, வெளிநாட்டுக் குடியேறிகள் தொடர்பான விவாதம் ஒன்றை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
 
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிட்டனில் வந்து குடியேறியவர்கள், அரசிடமிருந்து தாங்கள் பெறும் நன்மைகளிலும் பார்க்க கூடுதலாகவே அரச நிதிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாக இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
 
அதாவது ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் பெற்றுள்ள கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் அரச பண உதவிகளுடன் ஒப்பிடும்போது, அவர்கள் கூடுதலாகவே அரசுக்கு வரிப் பணம் செலுத்தியுள்ளதாக யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
2000 ஆம் ஆண்டு முதலான காலப்பகுதியில், ஐரோப்பிய குடியேறிகள் 30 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிகர பங்களிப்பை பிரிட்டிஷ் பொருளாதாரத்துக்கு செய்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.
 
இதேவேளை, 1995 ஆம் ஆண்டு முதலான 17 ஆண்டு காலப்பகுதியில், வெளிநாட்டுக் குடியேறிகள் அரசுக்கு செலுத்திய தொகையிலும் பார்க்க, 180 பில்லியன் டாலர்கள் அரசினால் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
 
பெரும்பாலும் பெரிய குடும்பங்களைக் கொண்ட, ஐரோப்பியர்கள் அல்லாத வெளிநாட்டுக் குடியேறிகளாலும் வேலையில்லாப் பிரச்சனை அதிகரித்திருந்த நிலையிலுமே இந்தளவு தொகையை அரசு செலவிட நேர்ந்துள்ளது.
 
பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்டவர்களினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவு இன்னும் அதிகம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
ஆனால், வெளிநாட்டுக் குடியேறிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்துவரும் மைக்ரேஷன் வாட்ச் அமைப்பு இந்த புள்ளிவிபரங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
 
வெளிநாட்டுக் குடியேறிகளின் நிகர நிதிப் பங்களிப்பு, அவர்களினால் பொதுச் சேவைகளில் ஏற்படுகின்ற பாதிப்பை விட அதிகமானதா என்று அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.