1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (20:14 IST)

தொடங்கியது எல் நினோ: தமிழகத்தில் எத்தகைய பாதிப்புகளை இது ஏற்படுத்தக்கூடும்?

el nino
எல் நினோ ஏற்கனவே பூமியை பாதிக்கக் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த வியாழனன்று உறுதி செய்துள்ளது.
 
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.
 
அமெரிக்காவின் கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தேசிய அலுவலகத்தின் (NOAA) நிபுணர்களின் அறிக்கையின்படி , பசிபிக் பெருங்கடலில் நடைபெறும் இந்த காலநிலை நிகழ்வு உலகின் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும் காலநிலை மாற்றத்தின் விளைவாக இது சமீப ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். புவியின் சராசரி வெப்பநிலை அளவை, தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயரவிடாமல் தடுப்பதற்காக பாரிஸ் உடன்படிக்கையில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. ஆனாலும், தற்போது அந்த அளவை எட்டும் நிலையில் பூமி உள்ளது. இது நிகழ்ந்தால், 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்த புவி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலையை பூமி அடையக்கூடும்.
 
 
'எல் நினோ இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை எட்டும்'
 
எல் நினோ 2024ஆம் ஆண்டு இளவேனிற்காலம் வரை இருக்கக்கூடும் என கருதப்படுவதால், அடுத்த ஆண்டு மிகவும் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகவும் வாய்ப்பு உள்ளது.
 
ஒரு மாதத்திற்கு கடல் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் போது அந்த வெப்பத்திற்கு வளிமண்டலம் பதிலளிக்கும் போது எல் நினோ தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தீர்மானிக்கிறார்கள். எல் நினோ இருப்பதைக் காட்டும் இந்த சமிக்ஞைகள் மே மாதத்தில் நிகழ்ந்துள்ளன.
 
"தற்போதைய நிலையில் இவை குறைவாகவே உள்ளன. ஆனால் இந்த நிலைமைகள் உருவாகத் தொடங்கியிருப்பதாகவும் தொடர்ந்து தீவிரமடையும் என்றும் நாங்கள் நினைக்கிறோம்," என்று NOAA விஞ்ஞானி மிட்செல் எல் ஹியுரோ கூறினார். "கடந்த வாரத்திற்கான எங்கள் அறிக்கையில் 0.8 டிகிரி எனத் தெரியவந்துள்ளது, இது மிகவும் அழுத்தமானது," என்றும் அவர் கூறினார்.
 
"பல மாதங்களாக எங்கள் கணிப்புகளில் அறிகுறிகள் தெரிந்தன. ஆனால் தீவிரத்தின் அடிப்படையை வைத்து பார்க்கும்போது எல் நினோ இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை எட்டும் என்று தெரிகிறது," என்று இங்கிலாந்து வானிலை அலுவலகத்தின் தொலைதூர வானிலை முன்னறிவிப்பின் தலைவர் ஆடம் ஸ்கேஃப் கூறினார்.
 
"பூமியில் அடுத்த ஆண்டு நிச்சயம் புதிய அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு. இது, எல் நினோ எந்தளவு பெரிதாக மாறும் என்பதை பொறுத்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் எல் நினோ தனது முழு அளவை எட்டினால், 2024ல் புதிய அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக் கூடும்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த இயற்கை நிகழ்வுதான் பூமியின் வானிலை அமைப்பில் மிகவும் சக்திவாய்ந்த ஏற்ற இறக்கமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு எல் நினோ உருவானது. அதன் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டன.
 
அதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை பதிவானது, காடுகளின் இழப்பு, பவளப்பாறைகள் வெளுத்தல், காட்டுத் தீ, பனிப்பாறை உருகுதல் போன்றவற்றுக்கு 2016ல் உருவான எல் நினோ காரணமாக அமைந்தது.
 
பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.
 
இந்த வெப்பம் மிகுந்த நீரின் நகர்வு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் வெப்பநிலை உயர்வதற்கு வழி வகுக்கும்.
 
"அதிக கடல் வெப்பநிலையானது கனமழை மற்றும் வெள்ளத்திற்கு மிகவும் உகந்தது. மேலும் இது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில், குறிப்பாக பெரு மற்றும் ஈக்வடாரில் உள்ள நீர்நிலை சுழற்சிக்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் வானிலை மாற்றங்கள், காலநிலை மாற்றங்களில் மாறுதல்களை ஏற்படுத்தும் வளிமண்டல சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன," என விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல அறிவியல் பேராசிரியரான ஏஞ்சல் ஆடம்ஸ் கொராலிசா பிபிசி முண்டோ சேவையிடம் தெரிவித்திருந்தார்.
 
"எல் நினோ, அடிப்படையில் காலநிலையை மாற்றுவதால், பிராந்தியங்களில் வழக்கத்திற்கு மாறான விஷயங்களை நாங்கள் காண்கிறோம். இது கவலைப்படுவதற்குரியது," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
 
இந்த வானிலை நிகழ்வானது, உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதி போன்ற பொதுவாக மிகவும் மழை பெய்யும் பகுதிகளில், வறட்சியை ஏற்படுகிறது, அதே நேரத்தில் வறண்ட காலநிலை மற்றும் பாலைவனங்களுக்குப் பெயர் பெற்ற தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை போன்ற இடங்களில் கனமழையைப் பெய்யச் செய்யும்.
 
எல் நினோவின் வளர்ச்சி, குறிப்பாக கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால், பெரும்பாலும் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பகுதிகளில் அதிக சூறாவளி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஆடம்ஸ் விளக்கினார்.
 
மனிதனால் ஏற்படும் புவி வெப்பமடைதலுடன் எல் நினோவுக்கு தொடர்பு இல்லை என்றாலும், அது பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது. இந்த காலநிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் இருந்து வளிமண்டலத்தில் வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது
 
எல் நினோ ஆண்டின் இரண்டாம் பகுதி (2024ஆம் ஆண்டு) அதிக வெப்ப அலைகளுடன் கூடிய வெப்பமான காலகட்டமாக இருக்கும். ஏனென்றால், மனிதனால் ஏற்படும் வெப்பமயமாதலுடன் எல் நினோ ஏற்படும் வெப்பமயமாதலும் சேர்கிறது. எனவே, 2024ஆம் ஆண்டு அல்லது இந்த ஆண்டின் இறுதியில், அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது," என்று ஆடம்ஸ் குறிப்பிடுகிறார்.
 
எல் நினோ தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில் இதனால் தமிழகத்தில் எம்மாதிரியான மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சூழலியல் பொறியாளர் பிரபாகரன் வீர அரசுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
 
"எல் நினோ காரணமாகப் பருவ மழையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. வெப்பநிலைதான் அதிகரிக்கும். அதேநேரத்தில் இன்னொரு தரவுகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 1950ல் இருந்து தமிழகத்தில் இதுவரை 11 முறை வறட்சி வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 8 அல்லது 9 முறைகள் எல் நினோ காலத்தில்தான் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே, வறட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
 
"வெயிலைப் பொறுத்தவரை, மே மாதத்தில் இருக்கும் கத்திரி வெயில் என்பது ஜூன் வரை நீடித்துள்ளது. எனவே, அடுத்த ஒரு மாதத்திற்கு வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது," என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "வெட் பல்ப் என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் கொண்டு இந்த வெட் பல்ப் வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. இந்த வெட் பல்ப் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் சென்றால் அது மனிதர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், சென்னையில் தற்போது 32 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. 35 டிகிரிக்கு மேல் இந்த வெப்பநிலை செல்லும்போது மனிதர்களின் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். வறண்ட காற்றின் காரணமாக வியர்வை ஏதும் வராது. குளிர்சாதன வசதி இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாத நிலை உருவாகும்," என்று அவர் தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி வெப்ப அலையை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இல்லை என்று கூறும் பிரபாகரன் வீரஅரசு, "பாகிஸ்தானில் 2015ல் கராச்சி வெப்ப அலையில் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். அதன்பின்னர் பாகிஸ்தான் விழிப்படைந்து நடவடிக்கைகளை எடுத்தது. தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க என்பதற்கே தனி வார்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் அப்படி ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்படும் என்ற குறிப்புகள் நம்மிடம் இல்லை. எனவே, இது தொடர்பான ஆய்வுகள் தேவை," என்றார்.