1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:30 IST)

கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை ஜீப்பில் ஏற்றிய டிஎஸ்பி: கடும் எதிர்ப்பு

பரமக்குடி கோவிட் சிகிச்சை மையத்தில் வேலை செய்ய வந்த இரண்டு அரசு டாக்டர்களை விலை மதிப்பு மிக்க பைக் வைத்திருந்த காரணத்தைக் காட்டி ஜீப்பில் ஏற்றிச் சென்று அலைகழித்ததாக காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஒருவரை குற்றம்சாட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் (கோவிட் கேர் சென்டர்) பணிபுரிவதற்காக வந்திருந்த மணிகண்டன், விக்னேஷ்வரன் ஆகிய இரு மருத்துவர்கள் செவ்வாய் கிழமை இரவு உணவு மற்றும் பொருட்கள் வாங்க பரமக்குடி கடைத்தெருவுக்கு சென்றுள்ளனர்.
 
அப்போது அங்கிருந்த பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மருத்துவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள் மருத்துவர்கள்.
 
இச்சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் மணிகண்டன், 'நான் அரசு மருத்துவராக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். தற்போது கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் (கோவிட் கேர் சென்டர்) மருத்துவராக பணியாற்றி வருகிறேன்'.
 
'எனது நண்பர் விக்னேஷ்வரன் அவரும் பரமக்குடியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நாங்கள் இருவரும் செவ்வாய் கிழமை இரவு என்னுடைய இரு சக்கர வாகனத்தில் இரவு உணவு, குளியல் சோப்பு உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பரமக்குடி நகரில் ஒரு கடைக்கு சென்றிருந்தோம்'.
 
அப்போது பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் கொரோனா ஊரடங்கு காரணமாக 9 மணிக்குள் கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தி வந்தார். எனது இருசக்கர வாகனத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த எனது நண்பர் விக்னேஷ்வரனை அழைத்து போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு கூறினார்.
 
"டிஎஸ்பியிடம் நாங்கள் இருவரும் மருத்துவர்கள் என்றும், பரமக்குடி கோவிட் கேர் சென்டரில் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் கூறினேன். டிஎஸ்பி என்னிடம் இந்த YAMAHA R15 பைக் யாருடையது என கேட்டார். இது என்னுடையது என்றேன் அதற்கு டிஎஸ்பி 'நீ டாக்டரா இல்ல ரவுடியா? ரவுடிகள் ஓட்டும் பைக் வைச்சுருக்க? உன்ன பார்த்தா டாக்டர் மாதிரி இல்ல ரெண்டு பேரையும் வண்டியில ஏத்து' என போலீஸ் வாகன ஓட்டுநரிடம் கூறினார்.
 
நாங்கள் கோவிட் கேர் சென்டரில் பணியில் உள்ள மருத்துவர்கள். கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய நாங்கள் செல்ல வேண்டும் என டிஎஸ்பியிடம் கூறிய போது டிஎஸ்பி வாகன ஓட்டுநர் 'ஐயாவை எதிர்த்து பேசுறீய' என்று மிகவும் கடுமையாக பேசினார்.2
 
பின்னர் எங்கள் இருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது வாகனத்திற்குள் இருந்த முதியவர் ஒருவர் கையில் காயத்துடன் அமர்ந்திருந்தார். அவரிடம் கேட்ட போது போலீஸ் அடித்ததில் கையில் காயம் ஏற்பட்டதாக கூறினார். இதை கேட்டவுடன் எங்கள் இருவருக்கும் அச்சம் ஏற்பட்டது உடனடியாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் அகிலனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம்.
 
எங்களை ஒரு மணி நேரமாக போலீஸ் வாகனத்தில் வைத்து சுற்றினர். பின் பரமக்குடி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்று 'நீ டாக்டர்னா அத மருத்துவமனையில் வச்சுக்கனும், இது என் கோட்டை உன் மீது ஒரு எப்.ஐ.ஆர் போட்ட நீ டாக்டரா இருக்க முடியாது' என மிரட்டி அனுப்பினார்.
 
காலையில் இருந்து தொடர்ச்சியாக மருத்துவம் பார்த்து மிகவும் சோர்வாக இருந்த எனக்கு போலீசாரின் கடுமையான நடவடிக்கையால் உடல் படபடப்பு ஏற்பட்டது. பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின் மீண்டும் பரமக்குடி கோவிட் கேர் சென்டரில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்றேன்.
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கொரோனா சிகிச்சை மையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் நோய் தொற்றில் இருந்து நோயாளிகளை மீட்க மிகுந்த அர்பணிப்புடன் பணி செய்து வருகிறோம்.
 
மருத்துவர்கள் மன அழுத்தம் மற்றும் சோர்வுடன் பணி செய்து வரும் நிலையில் அதனை கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் பரமக்குடி டிஎஸ்பி மோசமாக நடந்து கொண்டார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் டாக்டர் மணிகண்டன்.
 
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் அகிலன் இச்சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "புதிதாக பணியில் சேர்ந்த மருத்துவர்களிடம் செவ்வாய்கிழமை இரவு பரமக்குடி டிஎஸ்பி கடுமையாக நடந்துள்ளார். இதனால் செய்வதறியாது மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர்.
 
இது குறித்து நான் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பரமக்குடியில் இரண்டு மருத்துவர்களை மது அருந்தியதாக பரமக்குடி டிஎஸ்பி கைது செய்து அழைத்துச் சென்றுள்ளார்.
 
அவர்கள் இருவரையும் உடனடியாக விசாரணை செய்து விடுதலை செய்ய வேண்டும் இல்லையெனில் புதன்கிழமை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என கூறியதின் அடிப்படையில் அன்று இரவே இருவரையும் திருப்பி அனுப்பினர்" என்றார் அகிலன்.
 
"தமிழ்நாட்டில் உள்ள கோவிட் கேர் சென்டர்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய தங்குமிடம், உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
 
'தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் அதிக நேரம் பணி செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் மருத்துவர்களுக்கு தமிழக அரசு தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. அதன் காரணமாக பணியில் இருந்த மருத்துவர்கள் இருவர் தங்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்று போலீஸ் நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
 
"அந்த மருத்துவர்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பைக்கை பயன்படுத்தியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் மருத்துவர்கள் பொது மக்கள் பயன்படுத்தும் வண்டியைத்தான் பயன்படுத்தியுள்ளனர் இதில் எந்த தவறும் இல்லை" என்று கூறிய அகிலன்,
 
"மருத்துவர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட டிஎஸ்பி மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் டிஎஸ்பியின் இந்த நடவடிக்கையை கண்டித்து பணி புறக்கணிப்பு செய்ய முடிவெடுத்துள்ளோம். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த வித விசாரணையும் டிஎஸ்பியிடம் நடத்தப்படவில்லை" என்றார் அகிலன்.
 
இச்சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், "நான் செவ்வாய்க்கிழமை இரவு பரமக்குடி பஜார் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தேன். அப்போது பரோட்டா கடைக்கு எதிரே YAMAHA R15 இரு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. வாகனம் யாருடையது என விசாரித்த போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் நாங்கள் மருத்துவர்கள் இந்த இரு சக்கர வாகனம் எங்களுடையது என்றனர்'.
 
இருவரும் டிசர்ட் மற்றும் சார்ட்ஸ் அணிந்து இளைஞர்களாக இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காரணம் போலீசில் இரவு நேரங்களில் ரேஸ் பைக்குகளுடன் சிக்கும் பெரும்பாலானோர் மருத்துவர்கள் என கூறி செல்வதால் நான் அவர்களிடம் மருத்துவர் அடையாள அட்டையை கேட்டேன்.
 
இருவரிடமும் அடையாள அட்டை இல்லாததால் அவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றோம். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மருத்துவத்துறையில் இருந்து தொலைபேசி வாயிலாக இவர்கள் மருத்துவர்கள் என தகவல் கூறியதையடுத்து காவல் நிலைய வாயிலில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டோம்.
 
பரமக்குடி பகுதியில் இவ்வாறான ரேஸ் பைக்குகளால் அதிக விபத்துகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதிக வேகத்துடன் செல்லும் இருசக்கர வாகனங்களை மக்கள் தவிர்க்கவேண்டும் என்று பரமக்குடி காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
 
இரவு நேரங்களில் அதிகமான இளைஞர்கள் போலீசாரிடம் மாட்டி கொள்கின்றனர் ஆனால் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்வது இல்லை.
 
மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், சாலைகளில் சட்ட ஓழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவர்களை மட்டும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்வோம். மற்றவர்களை எச்சரித்து அனுப்பிவிடுவோம்.
 
அதே போல் மருத்துவர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டி இருந்தால் அவர்களையும் அனுப்பி இருந்திருப்போம் ஆனால் அவர்களிடம் அடையாள அட்டை இல்லை.
 
மேலும் அந்த மருத்துவர்கள் இருவரும் கூறிய படி நான் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை" என்றார் வேல்முருகன்.