1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : சனி, 18 ஜனவரி 2020 (12:17 IST)

"நிர்பயா குற்றவாளிகளை தூக்குலிட வேண்டாமா? எவ்வளவு தைரியமாக இதை கூறுகிறீர்கள்?" - தாய் ஆஷா தேவி

நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகளை பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், நிர்பயாவின் தாய் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இதற்கு நிர்பயாவின் தாய் கோபமடைந்துள்ளார்.
 
இந்திரா ஜெய்சிங் கூறியது என்ன?
 
நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தாமதமாவதாக நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய ஆஷா தேவி வருத்தம் தெரிவித்திருந்தார்.
 
அதனை தொடர்ந்து ட்வீட் செய்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், "ஆஷா தேவியின் வலி எனக்கு முழுமையாக புரிகிறது. எனினும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சோனியா காந்தி, குற்றவாளி நளினியை மன்னித்தது போன்று, ஆஷா தேவியும் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நாங்கள் உங்களுடன் இருக்கிறேன். ஆனால், மரண தண்டனை எதற்கும் தீர்வாகாது" என்று கூறியுள்ளார்.
 
அதற்கு பதிலளித்துள்ள ஆஷா தேவி, "குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று எனக்கு பரிந்துரை செய்ய இந்திரா ஜெய்சிங் யார்? நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இந்திய மக்கள் அனைவரும் கூறுகிறார்கள். இந்திரா ஜெய்சிங் போன்றவர்களால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "அவ்வளவு தைரியமாக இந்த கருத்தை இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் உச்சநீதிமன்றத்தில் அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். ஒரு முறை கூட என்னிடம் அவர் வந்து நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டதில்லை. அப்படி இருக்கையில் இன்று குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இது போன்றவர்களால்தான் பாலியல் குற்றங்கள் குறைவதில்லை" என்று ஆஷா தேவி கூறியுள்ளார்.
 
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட அதிகாரப்பூர்வ ஆணை முதலில் பிறப்பிக்கப்பட்டது.
 
பின்னர் குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டது.
 
அதற்கு முன்பு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, "நான் இதுவரை அரசியல் குறித்து ஏதும் பேசியதில்லை. நான் நீதியை மட்டுமே கேட்டு வந்தேன். ஆனால், 2012ஆம் ஆண்டு தேசியக் கொடி ஏந்தி என் மகளுக்காக நீதிக்கேட்டு போராடியவர்கள்தான், இன்று என் மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்," என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
 
இந்நிலையில் நேற்று மாலை, பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதிகளை டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.