ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2016 (15:42 IST)

அரசியல் நோக்கத்துடன் அவதூறு வழக்குகள்: ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

தமிழ்நாட்டில்தான் அரசியல் நோக்கத்துடன் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

 
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
 
"அரசியல் விமர்சனங்களை நீங்கள் அரசியல் ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும். அரசியல் எதிர்ப்புக்களை அவதூறு வழக்குகள் மூலம் ஒடுக்க முடியாது'' என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் கருத்துத் தெரிவித்தது.
 
அவதூறு வழக்குகள் சட்டம், தமிழகத்தில்தான் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், யார் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தாலும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தனிப்பட்ட முறையில் அந்த வழக்குகளைச் சந்திக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
 
அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கை கொடுத்தாலும் கூட, அதற்கும் அவதூறு வழக்குத் தொடரப்படுவதாகவும், அரசியல் எதிரிகள் பழிவாங்கப்படுவதாகவும் கூறி, விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
 

 
அதுதொடர்பாக, பதிலளிக்க கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதுதொடர்பான நோட்டீஸ் ஜெயலலிதாவுக்கு இதுவரை வழங்கப்படாத நிலையில், மீண்டும் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர்.
 
செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் ஜெயலலிதா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
213 அவதூறு வழக்குகள்:
 
ஏற்கெனவே, கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த போது, அவதூறு வழக்குகள் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை, 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மீதும் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.