ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 27 ஆகஸ்ட் 2016 (16:03 IST)
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது காவல்துறையில் புகார் அளித்த, தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவரை நீக்க வேண்டுமென அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
 
கடந்த 23ஆம் தேதியன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கித்தர வேண்டுமெனக் கோரி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஜய் இளஞ்செழியன் என்பவர் அங்கிருந்த நிர்வாகிகளிடம் கோரினார்.
 
இது தொடர்பான சச்சரவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அண்ணா சாலை காவல் நிலையத்தில் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர். கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக 41 மாவட்டச் செயலாளர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரை நீக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
 
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட 41 இடங்களில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
 
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்தார். இருந்தபோதும், புதிய தலைவராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :