1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (14:46 IST)

முன்னாள் உளவுத்துறை அதிகாரியை கொல்ல கனடாவிற்கு கொலை கும்பலை அனுப்பினாரா சௌதி இளவரசர்? - புதிய குற்றச்சாட்டு

"என்னை கொள்வதற்காக செளதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலை அனுப்பினார்" என்று செளதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

துருக்கியில் சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரியை கனடாவில் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செளதி அரேபிய அரசின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ஜாப்ரி, மூன்று ஆண்டுகளாக தனியார் பாதுகாப்பு படை ஒன்றின் பாதுகாப்புடன் கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், டொரண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் வாயிலாக சந்தேகத்திற்குரிய கும்பல் ஒன்று கனடாவிற்குள் நுழைய முயற்சித்தது என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத் அல் ஜாப்ரியின் குடும்பத்தினர் அனைவரும் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

''தன்னை கொலை செய்ய ஒரு கும்பல் கனடா வந்ததாக கூறப்படும் தகவல் மிகவும் மோசமானது'' என ஜாப்ரி கூறுகிறார்.

2018ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்த கும்பலை சேர்ந்த நபர்கள்தான் ஜாப்ரியை கொல்ல முயற்சித்ததாக வாஷிங்டனில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேர், ''கனடாவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது, யார் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலும் சட்டபடி புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.''
 

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு பதவி விலகல்: பின்னணி காரணம் என்ன?

இந்திய அரசியலமைப்பின் 370-வது விதியை, ஆளும் மத்திய அரசு ரத்து செய்த ஓராண்டு நிறைவுநாளில், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து அதன் முதலாவது துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்மு விலகியுள்ளார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை இந்திய குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக அவரது மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் கடனை திருப்பி செலுத்த அவகாசம் நீட்டிப்பா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

வங்கிகளில் வேளாண் அல்லாத தேவைக்கு தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவோருக்கு ஆபரண தங்கத்தின் 75% மதிப்புக்கு பதிலாக 90% வரை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதிவரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வங்கிகளுக்கான கடன் வட்டி வீதம், எந்த மாற்றமும் இல்லாமல் 4% ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் செலாவணி கொள்கைக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கினார்.