செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : புதன், 2 டிசம்பர் 2015 (00:19 IST)

இலங்கையில் எச்ஐவி தொற்று தொடர்ந்து அதிகரிக்கிறது

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் பாலியல் தொற்றுநோய்த் தடுப்பு திட்ட இயக்குனர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.


 
 
இன்று செவ்வாய்க்கிழமை அனைத்துலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு வாரமும் எச். ஐ. வி தொற்றுக்குள்ளான 4 பேர் ரத்தப்பரிசோதனைகளின் மூலம் புதிதாக அடையாளம் காணப்படுவதாகவும் ஆனால் வாரமொன்றுக்கு மேலும் 5 பேர் பரிசோதனைகள் மூலம் தம் நோய்த்தாக்குதலை இனம் காண முன்வருவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
இலங்கையில் 3600 பேர் வரை எச். ஐ. வி தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாகவும், ஆனால் அவர்களில் 2241 பேர் மட்டுமே உரிய மருத்துவ பரிசோதனைகள் மூலம் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் எச் ஐ வி தொற்றுக்குள்ளனவர்களில் பலரும் ரத்தப்பரிசோதனை செய்வதற்கு தயக்கம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
 
1986 முதல் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 587 எயிட்ஸ் நோயாளர்களில் 357 பேர் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார அமைச்சின் பாலியல் தொற்றுநோய்த் தடுப்புதிட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
மாவட்டரீதியாக கொழும்பு மாவட்டத்தில் கூடுதலான எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த டாக்டர் சிசிர லியனகே, தற்போதைய சுமூகநிலை காரணமாக வடகிழக்கு மாகாணங்களிலிருந்தும் எச் ஐ வி தொற்று தொடர்பான விவரங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
மக்களை பாதுகாப்பதற்காக இலவச ரத்தப்பரிசோதனை, மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இலங்கையில் 1986ஆம் ஆண்டு முதலாவது எயிட்ஸ் நோயாளியாக வெளிநாட்டவரொருவர் அடையாளம் காணப்பட்டார். 1987ஆம் ஆண்டு இலங்கையரொருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.