ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (11:14 IST)

கொரோனா வைரஸ் சிகிச்சை: ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து மீண்டும் டிரம்ப் சர்ச்சை

கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்காவின் மூத்த சுகாதார அதிகாரிகளை தெரிவித்த பின்னரும், அந்த மருந்து கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பயன்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் பயன்பாட்டை தாம் பரிந்துரைத்தால்தான் கொரோனா வைரஸ்  சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் இருந்து இது நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
"எதையாவது பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறினால், அது வேண்டாம் என்று சொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள்," என்று செய்தியாளர்களிடம் அவர்  தெரிவித்தார்.
 
இந்த மருந்தை பயன்படுத்துவதால் தீவிர உடல்நல கோளாறுகள் உண்டாகும் என்பதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
கோவிட்-19 சிகிச்சைக்காக அவசரமான சூழ்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் அந்த அமைப்பு ரத்து செய்தது.
 
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் பலனளிக்கிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.