புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (18:27 IST)

சிதம்பரம் நடராஜர் கோயில் திருமண சர்ச்சை: நடந்தது என்ன?

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கத்தை மீறி திருமணம் நடக்க அனுமதி அளித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கோயிலை மீண்டும் இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபம் அந்தக் கோயிலுக்குள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மண்டபமாகக் கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள் நடந்ததாகக் கூறப்படும் இந்த மண்டபத்தில்தான் ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் உற்சவங்களின்போது உமையாம்பிகையுடன் நடராஜர் எழுந்தருளுவது வழக்கம். பிற நாட்களில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு வந்ததது.

இந்த நிலையில், சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் பார்ட்னரான ராஜரத்தினம் - பத்மா தம்பதியின் மகள் சிவகாமிக்கும் சென்னை ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் - வாசுகி தம்பதியின் மகன் சித்தார்த்தனுக்கும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று இந்த ஆயிரம்கால் மண்டபத்தில் கல்யாணம் நடைபெற்றது.

இந்தக் கல்யாணத்திற்காக அந்த மண்டபம் மிக பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டது. அலங்காரம் செய்யவந்த ஊழியர்கள் கோயிலின் பொற்கூரையின் மீது ஏறி அலங்காரம் செய்த படங்களும் சமூக வலைதளங்களின் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி அளித்த பட்டு தீட்சிதர் உள்பட ஆறு தீட்சிதர்களிடம் சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். அப்போது தீட்சிதர்கள் தரப்பில் இவ்வாறு திருமணம் நடைபெற்றது தவறுதான் என்றும் எந்த சூழ்நிலையில் இவ்வாறு நடைபெற்றது என்பது குறித்தும் எழுத்து மூலமாக விளக்கமளிக்கப்பட்டது. மீண்டும் 23ஆம் தேதி விசாரணை நடக்குமென கூறப்பட்டுள்ளது.

"இந்த மண்டபத்தில்தான் சேக்கிழார் பெரிய புராணம் இயற்றினார். வருடத்திற்கு நான்கு நாட்கள் நடராஜர் அங்கே எழுந்தருளுவார். ஆன்மீகப் பேச்சாளர்கள் யாராவது பேசினால்கூட, மேடையில் அவரைத் தவிர வேறு யாரும் அமர அனுமதிக்க மாட்டார்கள். அவ்வளவு கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். ஆனால், இந்தத் திருமணத்திற்காக பொற்கூரையின் மேலேயே ஏறி நின்று அலங்காரங்கள் செய்ய அனுமதித்திருக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டுகிறார் சிதம்பரம் ஆலய பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த செங்குட்டுவன்.
இம்மாதிரி ஒரு திருமணம் நடக்க எப்படி அனுமதிக்கப்பட்டது என சிதம்பரம் நடராஜர் கோவிலின் அறக்கட்டளையின் செயலரான பால கணேஷ் தீட்சிதரிடம் பேசியபோது, "அவர்கள் நடராஜர் முன்பு திருமணம் செய்யத்தான் அனுமதி வாங்கினார்கள். பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்திவிட்டார்கள். மழை பெய்கிறது; கொஞ்ச நேரம் வீட்டில் ஒதுங்கிக் கொள்கிறேன் என வருபவர்கள், பிறகு வீட்டில் வேறொரு இடத்திற்குச் சென்றால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இது நடந்தது" என்றார்.

ஆனால், இரவு நேரத்தில் பொற்கூரையின் மீது ஏறி அலங்காரம் செய்ய அனுமதிக்கப்பட்டது எப்படி எனக் கேட்டபோது, "நாங்கள் இல்லாத நேரமாகப் பார்த்து அது நடந்துவிட்டது. கோயிலுக்குள்ளேயே இருந்த சிறு சிறு கோயில்களுக்கு அன்று கும்பாபிஷேகம் நடந்தது. அதில் நாங்கள் கவனமாக இருந்தோம். அப்போதுதான் இப்படிச் செய்துவிட்டார்கள்" என்றார் அவர்.

இந்த விவகாரத்தில் திருமணத்திற்கு அனுமதி கொடுத்ததாக அனைவரும் குற்றம்சாட்டுவது பட்டு தீட்சிதர் என்பவரைத்தான். "கல்யாணம் நடராஜர் சன்னதியில்தான் நடப்பதாக இருந்தது.

ஆனால், அன்று கும்பாபிஷேகம் இருந்ததால், கூட்டம் வரும் என்பதற்காக ஆயிரங்கால் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. நீங்கள் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். ஆயிரங்கால் மண்டபத்தில் கல்யாணம் நடக்க முன்பே அனுமதி கொடுத்திருந்தால் பத்திரிகையில் திருமணம் அங்கே நடப்பதாக போட்டிருக்க மாட்டார்களா? இது தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனி இப்படி நடக்காது" என பிபிசியிடம் கூறினார் பட்டு தீட்சிதர்.

மலர் அலங்காரங்களைச் செய்யவந்தவர்கள் விமானத்தின் மீது ஏறியது எப்படி எனக் கேட்டபோது, "அது தொடர்பாக வந்த வீடியோக்கள் எல்லாம் பொய். ஓரிருவர் தெரியாமல் ஏறியிருக்கலாம். பிறகு அவர்கள் இறக்கிவிடப்பட்டனர்" என்றார் பட்டு தீட்சிதர்.

இந்தத் திருமணத்தை புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்த பெரும்தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தீட்சிதர் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர்.

"பணமெல்லாம் யாரும் வாங்கவில்லை. இப்போது பட்டு தீட்சிதரை கோயிலைவிட்டு 6 மாதத்திற்கு சஸ்பென்ட் செய்திருக்கிறோம். பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் பால கணேஷ் தீட்சிதர்.

திருமணம் நடத்திய ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸின் ராஜரத்தினத்திடம் கேட்டபோது, "நாங்கள் நடராஜர் சன்னிதியில்தான் நடத்துவதாக இருந்தோம். அன்று கும்பாபிஷேகம் இருந்ததால் ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்தும்படி அவர்கள்தான் சொன்னார்கள். அவர்கள் அனுமதியோடுதான் எல்லாமே செய்யப்பட்டது. அங்கிருப்பவர்கள் அனுமதியில்லாமல் இவ்வளவு பெரிய நிகழ்வை செய்துவிட முடியுமா?" என்று பதிலளித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்திருக்கும் இந்த நடராஜர் கோவில் தமிழ் சைவத் தலங்களில் மிக முக்கியமான ஒரு திருத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என சமயக்குரவர்கள் நால்வராலும் பாடப்பட்டது இந்தக் கோவில். சைவ இலக்கியங்களில் கோவில் என்பது இந்தக் கோயிலையே குறிக்கிறது.

இந்தக் கோயிலுக்குள் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் அமைந்திருக்கின்றன. கோயிலுள்ள ஆயிரங்கால் மண்டபமே, இதில் ராஜசபை என அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலின் நிர்வாகம் சோழவம்சத்தில் வந்ததாகச் சொல்லப்படும் பிச்சாவரம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்களே இந்தக் கோவிலைத் தற்போது கட்டுப்படுத்திவருகின்றன. 1987ல் எம். ஜி. ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தபோது, சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5-8-1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இதனை தீட்சிதர்கள் ஏற்கவில்லை. தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்று இந்த அரசாணையை நீக்கச் செய்தனர். இதற்குப் பிறகு, தி.மு.க. ஆட்சியின்போது 2008 பிப்ரவரியில் இந்தக் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தியது.

இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

"கம்பர், வள்ளலார், கிருபானந்தவாரியார் ஆகியோர் பிரசங்கம் செய்யவே இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. அவ்வளவு புனிதமான மண்டபம் என்று கூறினார்கள். ஆனால், இப்போது ஒரு திருமணத்தை நடத்த அனுமதித்திருக்கிறார்கள். கோவிலை அரசு கையகப்படுத்துவதுதான் இந்த முறைகேடுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கும்" என்கிறார் தமிழக இந்துசமய அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன்.

ஆனால், முன்னாள் அறநிலையத் துறை அதிகாரிகள் இந்தக் கோவிலை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இதுவே சரியான தருணம் என்கிறார்கள். "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கோவிலில் தவறுகள் நடந்தால் அறநிலையத் துறை தலையிட முடியும். உடனடியாக தீட்சிதர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துவிட்டு, அரசே ஒரு அறங்காவலரை நியமிக்க சட்டத்தில் இடமிருக்கிறது" என்கிறார் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் அதிகாரியான முத்துபழனி உடையவன்.