1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:33 IST)

இந்தியாவில் கொரோனாவால் 40 லட்சம் பேர் உயிரிழப்பா?

இந்தியாவில் கொரோனாவால் 40 லட்சம் பேர் உயிரிழப்பா? - மத்திய அரசு தந்த விளக்கம்.
 
உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிடும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது' என்ற தலைப்பில் அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. 
 
அதில், இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் இறந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது ஆனால், 40 லட்சம் வரையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கணக்கீட்டு முறையை ஏற்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளது மத்திய அரசு என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசின் விளக்கம் பின்வருமாறு...
 
உலக சுகாதார அமைப்பு ஆய்வில் முதல் அடுக்கு நாடுகளில் இருந்து ( அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவை) நேரடியாக பெறப்பட்ட இறப்பு புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா உள்ளிட்ட இரண்டாம் அடுக்கு நாடுகளுக்கு கணித மாதிரி செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இந்த வழிமுறையை எதிர்க்கிறது.
 
இந்த வழிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா தனது கவலைகளை பிற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்டது. இதையொட்டி உலக சுகாதார அமைப்புக்கு 2021, 2022 ஆண்டுகளில் 6 கடிதங்களை இந்தியா எழுதி உள்ளது. அவற்றிலும், காணொளி காட்சி வழி கூட்டங்களிலும், இறப்புகளை கணக்கிடும் வழிமுறை மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின் பயன்பாடுகள் பற்றி சீனா, ஈரான், வங்காள தேசம், சிரியா, எத்தியோப்பியா, எகிப்து போன்ற பிற உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து இந்தியா குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பியது.
 
இந்தியாவின் முக்கிய கவலை, பூகோள ரீதியில் பெரிய அளவிலானதும், மக்கள் தொகையை அதிகமாக கொண்டுள்ள ஒரு நாட்டிற்கான புள்ளி விவர மாதிரி திட்ட மதிப்பீடுகள், சிறிய மக்கள் தொகை கொண்ட பிற நாடுகளுடன் எவ்வாறு பொருந்தும்? துனிசியா போன்ற சிறிய நாடுகளுக்கு பொருந்தும் மாதிரிகள், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு பொருந்தாது.
 
மாதிரி துல்லியமானதாக, நம்பகமானதாக இருந்தால், அதை அனைத்து முதல் அடுக்கு நாடுகளுக்கும் இயக்குவதன் மூலம் அங்கீகரிக்க வேண்டும். இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தி இருந்தாலும், உலக சுகாதார அமைப்பிடம் இருந்து திருப்திகரமான பதில் எதுவும் வரவில்லை.
 
கொள்கை உருவாக்கும் பார்வையில் இருந்து இது போன்ற தரவுத்தொகுப்புகள் உதவியாக இருக்கும் என்பதால் உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. அதே நேரத்தில் கொள்கை வகுப்பவர்கள், எந்த விஷயத்திலும் நம்பிகையுடன் இருக்க வேண்டும், வழிமுறைகளில் ஆழமான தெளிவு இருக்க வேண்டும், செல்லுபடியாகும் தெளிவான ஆதாரம் முக்கியம் என்று இந்தியா நம்புகிறது.
 
இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதிகமான கொரோனா இறப்புகள் என்ற புள்ளிவிரங்களை 'நியூயார்க் டைம்ஸ்' பெற முடிந்தாலும், மற்ற நாடுகளுக்கான மதிப்பீடுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.