வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (23:56 IST)

சீனாவில் போயிங் விமான விபத்து: இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை.
 
விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
 
இந்த விபத்து சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான முழு விசாரணைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
 
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
விளம்பரம்
 
இதில் உயிரிழந்தோர் குறித்த விவரம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது. இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
சீனாவின் மாவோ சிட்டுக் குருவிகளை கொல்ல உத்தரவிட்டது ஏன்?
 
சீனாவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு; வர்த்தகத்தை நிறுத்தும் பெரு நிறுவனங்கள்
இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், யுனான் மாகாணத்தில் உள்ள ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் குவாங்சு விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.
 
புதிதாக திருமணமான பெண் ஒருவர் தன் கணவரை இந்த விபத்தில் இழந்துவிட்டதாக, WeChat பதிவில் தெரிவித்துள்ளார். அவர் தன் முந்தைய பதிவுகளில் கணவருடன் சென்ற சுற்றுலா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
 
இந்த விமானத்தில் பயணித்தவர்கள் யார், விமானக்குழுவினர் யார் என அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுள், 6 பேர் கொண்ட குழு, இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பயணித்ததாக தெரியவந்துள்ளது.
 
 
படக்குறிப்பு,
 
விமானத்தில் பயணித்த ஒருவரின் அலுவலக சகா, ஊடகத்திடம் பேசுகிறார்.
 
அக்குழுவில் தன்னுடைய சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்களும் இருந்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
"நான் மிகுந்த வேதனையில் உள்ளேன்" என, அவர் Jiemian News ஊடகத்திடம் தெரிவித்தார்.
 
அந்த விமானத்தில் பயணித்த டான் என்பவரின் அலுவலக சகா ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், டான் குடும்பத்தினரிடம் தான் இந்த செய்தியை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
 
"அவர்கள் அழுதுகொண்டிருக்கின்றனர். இதனை அவருடைய தாய் நம்பவில்லை. தன் மகன் சீக்கிரம் வந்துவிடுவார் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார். டானுக்கு 29 வயதுதான் ஆகிறது" என்றார்.
 
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விமானத்தில் பயணித்தோரின் குடுபத்தினரை அழைத்துச் செல்லும் பணியில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 
விமான நிலையத்தில் காத்திருக்கும் உறவினர்கள்
 
இதனிடையே விபத்துக்குள்ளான 737-800 ரக விமானங்கள் மிகுந்த பாதுகாப்பானவை என தெரிவித்துள்ள விமான நிபுணர்கள், உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்குள்ளான விமானம் தயாரிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகிறது.
 
விபத்துக்கான காரணம் விமானியின் குறைபாடா அல்லது பாதுகாப்பு குறைபாடா, விமான வடிவமைப்பு மற்றும் வானிலை காரணமா என, பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
 
சமீப காலத்தில் நடந்த பெரிய விமான விபத்துகள்
 
2021
 
கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தனர்.
 
2020
 
மே 22 அன்று, 91 பயணிகள் மற்றும் விமானக்குழுவை சேர்ந்த 8 பேருடன் பயணித்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறைந்தது 2 பேர் மட்டுமே இந்த விபத்தில் உயிர்பிழைத்தனர்.
 
2019
 
மார்ச் 10 அன்று, எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், அடிஸ் அபாபா பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 157 பேரும் இதில் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
 
2018
 
அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்ஸில் ஏப்ரல் 11 அன்று, ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானக்குழுவை சேர்ந்த 10 பேர் உட்பட பயணித்த 257 பேரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானோர், ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினருமாவர்.
 

 
2017ஆம் ஆண்டில் எந்தவொரு விமான விபத்தும் நடைபெறவில்லை.
 
2016
டிசம்பர் 25 அன்று, கருங்கடலில் ரஷ்ய ராணுவ விமானமான Tu-154 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 92 பேரும் உயிரிழந்தனர். சிரியாவில் ரஷ்ய படையினருக்காக கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ராணுவத்தினர் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.