செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 மே 2021 (23:56 IST)

கொரோனாவை விரட்டிய ஆசிய குட்டித்தீவு - அங்கு வாழ ஆசையா?

பல நாடுகள் தொடர்ச்சியான கோவிட் அலைகளை சந்தித்துவரும் நிலையில், ஒரு சிறிய ஆசிய தீவு உலகளாவிய தொற்றுநோயை துரத்தியடித்த மிகச் சிறந்த இடமாக உருவெடுத்துள்ளது.
 
இந்த வாரம் சிங்கப்பூர் , ப்ளூம்பெர்க் கோவிட் மீட்சி தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. நியூசிலாந்த் பல மாதங்களாக இந்த தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. கோவிட் தொற்று எண்ணிக்கை, கட்டுப்பாடுகள் இன்றி வெளியே சென்றுவரும் சுதந்திரம் போன்ற காரணிகளை இந்தப்பட்டியல் கருத்தில் கொள்கிறது.
 
சிங்கப்பூரின் திறமையான தடுப்பூசி திட்டத்தை ஒப்பிடும்போது மெத்தனமான வேகத்தில் செயல்படுத்தப்படும் ந்யூசிலாந்தின் தடுப்பூசித்திட்டமே, அந்த நாடு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுவதற்கு முக்கிய காரணம் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்தது.
 
கொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு? புதிய சிக்கல்
கொரோனா: வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும் தகவல்கள்
இந்த நிச்சயமற்ற கோவிட் காலங்களில் உலகின் மிகச் சிறந்த இடத்தில் வாழ்வது எப்படி இருக்கும்? உண்மையிலே சொல்லும் அளவிற்கு அது சிறப்பாக உள்ளதா?
 
ஒரு ஏறக்குறைய சாதாரண வாழ்க்கை மற்றும் ஆழமான முரண்பாடு
சரி, இது பெரும்பாலும் உண்மைதான். சிங்கப்பூரில் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது. இதை நான் சில எச்சரிக்கைகளுடன் சொல்கிறேன்.
 
சமீபத்திய மாதங்களில், அவ்வப்போது வெளிவரும் ஒருசில தொற்றுக்களை ஒடுக்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூக அளவில் தினசரி தொற்றுக்கள் கிட்டத்தட்ட ஏற்படுவதே இல்லை என்றே சொல்லலாம். ஆயினும் இந்த வாரத்தில் பல புதிய தொற்றுக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் உடனடியாக இறுக்கப்பட்டன.
 
கடுமையான பயண விதிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவை வெளியிலிருந்து வரும் தொற்றுக்களை உடனடியாக நிறுத்துகின்றன. உள்ளே வருபவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுகின்றனர்.
 
 
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அமல் செய்யப்பட்ட இரண்டு மாத "சர்க்யூட்-பிரேக்கர்" தவிர, நாங்கள் ஒருபோதும் மீண்டும் பொதுமுடக்கத்தின் கீழ் இருக்கவில்லை.
 
வாழ்க்கை ஏறக்குறைய இயல்பாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் எனது குடும்பத்தினரை நான் சந்திக்க முடியும். கூடவே உணவகத்தில் நண்பர்களைச் சந்திக்க முடியும். ஆனால் எட்டு பேருக்கு மேல் இருக்க முடியாது. எல்லா இடங்களிலும், வெளியில் கூட முகக்கவசம் அணிவது காட்டாயமாகும். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது சாப்பிடும்போது அவற்றை கழற்றலாம்.
 
சமூக இடைவெளி பராமரிக்கப்படும் அலுவலகத்தில் எங்களில் பலர் மீண்டும் வேலைக்கு வந்துள்ளோம், உங்கள் முககவசத்தை அணிந்து , தொடர்புகளை கண்டுபிடிக்கும் செயலியில் செக் இன் செய்துகொண்டபிறகு, நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்த்து மகிழலாம் அல்லது ஒரு கச்சேரியை கேட்டு ரசிக்கலாம்.
 
பள்ளிகளும், குழந்தை பராமரிப்பு மையங்களும் திறந்திருக்கின்றன. வார இறுதியில் நான் என் குழந்தைகளை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல முடியும். பல இடங்கள் சமூக தூரத்தை உறுதி செய்வதற்காக வருவோர் எண்ணிக்கையை குறைத்திருந்தாலும், வார இறுதிக்குத் திட்டமிடுவது என்பது ஒரு ராணுவப் பயிற்சிக்கு தயார் செய்வது போன்றது. (இதில் நான் மகிழ்ச்சியற்ற வீரர், என் குழந்தைகள் ஜெனரல்கள்).
 
ஆண்டின் தொடக்கத்திலிருந்து எங்கள் மக்கள்தொகையில் சுமார் 15% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கு சுமார் ஆறு மில்லியன் பேர் மட்டுமே உள்ளனர். நன்கு செயல்படும் தன்மை, அரசின் மீது அதிக நம்பிக்கை மற்றும் தடுப்பூசி தயக்கம் குறைந்து வருவது போன்றவையே இதற்கான காரணங்களாகும்.
 
எனவே நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், சிறப்பாக செயல்படுகிறோம். கட்டாய முககவசம் அணிதல், தொடர்புகளை கண்டறியும் சிறப்பான வழிமுறை, பயணம் மற்றும் பெரிய கூட்டங்களுக்கு நீடித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இவற்றில் உதவியுள்ளன. அதேபோல் , எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய எல்லைகள், பெரிய நிதி வளம் மற்றும் கண்டிப்புடன் கூடிய திறமையான அமைப்புமுறை போன்றவையும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.
 
 
சிங்கப்பூரில் பலர், வெளியே சென்று வரும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை இப்படி இல்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்களில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சிறிய தங்குமிடங்கள் மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் காரணமாக கடந்த ஆண்டு இவர்களிடையே நிறைய கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டன.
 
அவர்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே செல்ல விரும்பினால் தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கு மையங்களில் மட்டுமே பெரும்பாலும் அவர்கள் கலந்துபழக முடியும்.
 
இந்த சமூகத்தில் "உண்மையான மற்றும் குறிப்பிடத்தக்க" தொற்றுப்பரவல் ஏற்படும் ஆபத்து இருப்பதால் நாட்டின் பிற பகுதிகளைப் பாதுகாக்க இந்தக்கட்டுப்பாடுகள் அனைத்தும் அவசியம் என்று அரசு வாதிட்டது. இது பொய்யானது அல்ல. தொழிலாளர்களின் தங்குமிடத்தை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளுக்குப் பிறகும்கூட, பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகளை விட அதிக நெரிசலான வீடுகளில் இவர்கள் தொடர்ந்து வாழ்கின்றனர்.
 
ஆனால் சமத்துவம் பற்றிய பேச்சுக்களுக்கு இடையே சிங்கப்பூர் இன்னும் ஆழமாக பிரிக்கப்பட்ட சமூகமாகவே உள்ளது என்ற கசப்பான உண்மையையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
 
இது "வெட்கக்கேடானது மற்றும் பாரபட்சமானது" என்று புலம்பெயர்ந்தோர் உரிமை ஆர்வலர் ஜோலோவன் வாம் கூறுகிறார்.
 
"புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லாததால், நமது கொள்கை தோல்விகளின் சுமைகளை அவர்கள் தாங்குவது என்பது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக எப்படியோ ஆகிவிடுகிறது," என்கிறார் அவர்.
 
"நியூசிலாந்து , கோவிட் மீட்சிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும்கூட அது மக்களின் உரிமைகளை மிதிக்கவில்லை. இது முடிவைப் பற்றியது மட்டுமல்ல, நாம் அங்கு எப்படி சென்றடைகிறோம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்."
 
வறிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது தொற்றுநோயானது தொடர்ந்து தன் வடுக்களை விட்டுச்செல்கிறது.
 
பொருளாதாரத்தை முடுக்கி விடவும், ஏழைக் குடும்பங்களுக்கு உதவவும் அரசு மில்லியன் கணக்கான டாலர்களை செலவுசெய்து வருகிறது. வேலையின்மை விகிதம் குறைவாகவே உள்ளது.
 
ஆனால் புள்ளிவிவரங்கள் முழு கதையையும் சொல்லவில்லை. சில தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்களை அனுபவித்துவருகின்றனர். வேலை இழந்தவர்களில் பலர் , உணவு டெலிவரி ஆள் அல்லது ஓட்டுநர்களாக தற்காலிக வேலைகளை பெற்றுள்ளனர்.
 
"இது ஆபத்தானது. அந்த நாளில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று தெரியாத உணர்வு,பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அவர்களின் இடத்தில் மற்றொருவரை மணியமர்த்துவது மிகவும் எளிது. எனவே இது சமூக பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியியுள்ளது," என்று சமூக சேவகர் பாட்ரிசியா வீ கூறுகிறார்.
 
இந்த மன அழுத்தம் பின்னர் அவர்களின் குடும்பங்களையும் மோசமாக பாதிக்கும். உதாரணமாக, குடும்ப வன்முறை சம்பவங்கள் பொதுமுடக்கத்திற்குப் பின்னரும் அதிகரித்து வருகின்றன என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
ஒரு தங்கக்கூண்டு
 
சுதந்திரத்தின் சலுகைகளையும் நிலையான வருமானத்தையும் அனுபவிக்கும் நம்மில் பலருக்கும்கூட, சில பிரச்சனைகள் இருக்கின்றன.
 
மிகவும் கண்காணிக்கப்படும் இந்த நாட்டில் தொற்றுநோய்க்கு முன்னர் எங்களுக்கு இருந்த சிறிதளவு தனியுரிமை, இப்போது மேலும் குறைந்துவிட்டது. செல்லும் எல்லா இடங்களிலும் ஒரு செயலியை நாங்கள் பயன்படுத்த வேண்டும் அல்லது நாங்கள் இருக்கும் இடத்தையும், நாங்கள் தொடர்பு கொள்ளும் நபர்களையும் கண்டுபிடிக்கும் ஒரு டோக்கனை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் தரவுகள் பகிரங்கமாக வெளியிடப்படாது என்று அரசு கூறுகிறது.
 
கோவிட் -19 , பொது விவாதம் இல்லாமல் மேலும் கண்காணிப்பை கொண்டு வந்துள்ளது.
 
ஒரு நெருக்கடியில் இது அவசியம் என்ற அரசின் வாதத்துடன் பலர் உடன்படுகிறார்கள். ஆனால் சிலர் இவ்வளவு பெரிய அளவிலான தரவுகள் பெறப்படுவதால் முறைகேடுகள் நடக்க சாத்தியம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். ​​ முந்தைய தனியுரிமை உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், இந்தத் தகவலை, தொடர்புத் தடமறிதல் தவிர வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த காவல்துறையை அனுமதித்ததாக அரசு சமீபத்தில் ஒப்புக் கொண்டபோது, இந்த வெளிப்படைத்தன்மை இல்லாத நிலைமை சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
 
சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் காரணமாக பயணம் எளிமையானதாக இல்லை என்பதால் பலரும், தங்கக்கூண்டில் அடைப்பட்ட கிளியாக மாறியுள்ளனர். மற்ற நாடுகளில் உள்ள நம் அன்புக்குரியவர்களை நம்மில் பலர் இப்போதும் நேரில் பார்க்க முடியாது என்பதே இதன் பொருள்.
 
அருகிலுள்ள இந்தோனேசிய தீவுக்கு அல்லது அண்டை நாடான மலேசியாவின் எல்லை நகரங்களுக்கு வார இறுதி பயணமாக என்று வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வதற்கு சிங்கப்பூரில் பலர் பழகியுள்ளனர்.
 
இது இனி சாத்தியமில்லை. எனவே பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கும் செல்லாமல் வெறுமனே படகுப்பயணத்தை மேற்கொள்கின்றனர். ஹோட்டல்கள் "தங்குமிடங்களாக" முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மலேசியாவின் தடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆர்வலர்கள், இப்போது இந்தத்தீவுக்குள்ளேயே சுற்றிவருகின்றனர்.
 
கடந்த ஆண்டு தோல்வியுற்ற முயற்சிக்குப் பிறகு சிங்கப்பூர், ஹாங்காங்குடன் ஒரு ட்ராவல் பப்பிளை திறக்கிறது என்ற செய்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஆனால் இந்த வாரம் இரு நகரங்களிலும், சமூக தொற்றுக்கள் பதிவான பின்னர் நடப்பது நடக்கட்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
 
'உயிர் பிழைத்தவர்களின் குற்ற உணர்வு'
உலகின் சில பகுதிகளில் இந்த வைரஸ் எவ்வாறு காட்டுத்தீ போல பரவி வருகிறது என்பதைப்பார்க்கும்போது, சலிப்பு பற்றி புகார் செய்வது மடத்தனம்.
 
பேரழிவுகரமான இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள இந்தியாவில் குடும்பம் உள்ள எழுத்தாளர் சுதிர் தாமஸ் வடகேத் போன்ற நம்மில் சிலர், "தப்பிப்பிழைத்தவரின் குற்ற உணர்வுக்கு" ஒப்பான ஒன்றை அனுபவித்து வருகிறார்கள். தனது அன்புக்குரியவர்கள் அவதிப்படுவதை தூரத்திலிருந்து அவர்கள் பார்க்கிறார்கள்.
 
" சில நாடுகளின் நிலைமை உண்மையில் நரகமாக இருக்கும் வேளையில் நாம் இங்கே ட்ராவல் பப்பிள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது விநோதமாக உள்ளது. நாம் இங்கே மூடப்பட்டிருக்கும்போது நன்றாக இருக்கிறோம், நம் வாழ்க்கையை அனுபவிக்கிறோம் என்பது கிட்டத்தட்ட நேர்மையற்றதான உணர்வைத்தருகிறது. அதே நேரம் பிற நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன, "என்று அவர் கூறுகிறார்.
 
"சிங்கப்பூர் என்பது உலகமயமாக்கலின் பின்னணியில் வளமையடைந்த ஒரு நகரம். நமது இணைப்பையும் பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் கருத்தில் கொண்டு பார்த்தால் நமக்கு [மற்ற நாடுகளைப் பற்றி அக்கறை கொள்ள] அதிக தார்மீக பொறுப்பு இருப்பதாக நான் உணர்கிறேன்."
 
ஆபத்தான உலகளாவிய தொற்றுநோயை வெற்றிகரமாக சமாளித்து நாங்கள் இப்போது இந்த பாதுகாப்பான சிறிய குமிழியில் இருப்பதால் நன்றியுள்ளவர்களாகவும் நிம்மதியுடனும் இருக்கிறோம் என்று சிங்கப்பூரில் பலர் கூறுவார்கள்.
 
ஆனால் இந்தக்குமிழி எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடும். பொருளாதார மீட்சிக்காக நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளதுடன், சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சில இடங்களிலிருந்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும் தொடங்கியுள்ளது.
 
சிங்கப்பூர் ஒரு நாள் உலகின் பிற பகுதிகளுடன் முழுமையாக மீண்டும் இணையும். அதுவே நமது கோவிட் மீட்சியின் உண்மையான சோதனையாக இருக்கும்.