திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (22:54 IST)

பெரிய மார்பகங்கள் அவமானச் சின்னமா? அளவை சிறிதாக்க அறுவை சிகிச்சையை நாடும் பெண்கள்

womens day
இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் உடைய பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த இரண்டு வார்த்தைகளில்தான் விவரித்தனர் . ஒன்று வலி, மற்றொன்று அவமானம்!
 
உருவகேலி என்பது ஆண்டாண்டு காலமாக உலகம் முழுக்க நடைபெற்று வரும் விஷயம். ஆனால் இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் கீழ்தரமாக பார்க்கப்படுகிறார்கள் என்னும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
 
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாக்கி அதிதேஜி என்னும் பெண், தன்னுடைய பெரிய மார்பகங்களால் தான் ’கேலியாகவும் கொச்சையாகவும்’ பார்க்கப்படுவதாக வேதனையுடன் கூறுகிறார்.
 
பெரிய மார்பகங்கள் உடைய பெண்ணின் நிலை குறித்து அவர் பேசும்போது, ”இங்கே ஒரு பெண்ணின் மார்பக அளவு 36k ஆக இருந்தால், அவள் நிச்சயம் வாழ்க்கையில் ஓடி ஒளியதான் வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
 
அவர் தொடர்ந்து பேசுகையில், ”11 வயதிலிருந்து நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறேன். நான் சிறுவயதில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருக்கும்போது பல வளர்ந்த ஆண்கள், என்னை பார்த்துகொண்டே அவர்களின் உதட்டை நக்குவது போன்ற கொச்சையான செயல்களில் ஈடுபடுவார்கள். இப்படி எத்தனையோ கசப்பான நினைவுகள் என் மனதில் இருக்கின்றன” என்று கூறுகிறார்.
 
அலுவலக மீட்டிங்கின்போது கூட சக ஊழியர்கள் உங்களை பாலியல் ரீதியாக நோட்டமிடுவதை உங்களால் உணர முடியும்.
 
சேனல் 4 தொலைக்காட்சி தொடரான ’MY BIG BOOBS : UNTOLD’-ல் பேசியிருந்த ஜாக்கி அதிதேஜி, தன்னுடைய வயதிற்கேற்ப தன் உடலை பார்த்துக்கொள்வதற்கு கற்றுகொண்டதாக கூறியிருக்கிறார்.
 
ஆனால் இங்கிலாந்தில் உள்ள மற்ற பெண்கள் அனைவராலும் இப்படியான மனநிலைக்கு பக்குவப்பட முடியவில்லை. அங்கே பெரும்பாலான பெண்கள் அறுவை சிகிச்சைக்குச் செல்கின்றனர்.
 
இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் கொண்டிருக்கும் பெண்கள் மன ரீதியாக எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும் என்கிறார் ஜாக்கி.
 
“உங்கள் மார்பகங்கள் பெரிதாக இருக்கும் போது, அதன் மீது பலரும் உரிமை எடுத்துகொள்ள முயல்கிறார்கள். அதை பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு பொருளாக பார்க்கிறார்கள். இதனால் அந்த பெண்கள் மிகவும் அவமானமாக உணர்கிறார்கள்” என்றும் ஜாக்கி குறிப்பிடுகிறார்.
 
பெரிய மார்பகங்களை கொண்டிருப்பதால் மத ரீதியாகவும் பல தடங்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்றும் தன் அனுபவம் குறித்து அவர் பகிர்கிறார்.
 
”கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர், எப்போதும் ஒரு நேர்மறையான எண்ணங்களுடன், நேர்த்தியாக தன்னை பொது வெளியில் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த பெரிய மார்பகங்களால் நேரும் சங்கடங்களினால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை” என்று ஜாக்கி கூறுகிறார்.
 
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்பர் என்ற பெண்ணும் இதே போன்ற சங்கடங்களை எதிர்கொண்டார். அதனால் 2022ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் தனியாக வாழ்வதற்கு முடிவு செய்தார்
 
அவருடைய மார்பக அளவு 36L ஆக இருந்திருக்கிறது. இதனால் மனம் மற்றும் உடல் என இரு வகையிலும் அவர் சோர்வடைந்திருக்கிறார்.
 
“சிறு வயதிலிருந்தே இதனால் நான் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். குறிப்பாக என்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தப் பிறகு என்னுடைய வலிகள் அதிகரித்தன. நடக்கும்போது, உடல் அசைவின்போதும் மார்பகங்களில் வலி ஏற்பட்டது” என்று கூறுகிறார் ஆம்பர்.
 
 
தன்னுடைய கணவரிடம் நீண்ட ஆலோசனையை மேற்கொண்ட பிறகு, அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார் ஆம்பர். இதற்காக அவர் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. மார்பக அளவை குறைக்கும் அறுவை சிகிச்சைக்காக அவர் அதிகமான பணத்தை செலவு செய்ய வேண்டியிருந்தது. பணத்திற்காக நிறையக் கடனும் வாங்கியிருக்கிறார். ஆனால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதுதான் வாழ்வின் மிகச் சரியான முடிவு என அவர் நம்புகிறார்.
 
இவர்களை போலவே 36HH என்ற மார்பக அளவை கொண்டிருந்த ரேச்சல் என்ற பெண்ணும், பெரிய மார்பகங்களினால் உடல் ரீதியாக பல சவால்களை சந்தித்திருக்கிறார். பெரிய மார்பகங்களினால் அவருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நிறைய வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்ட அவர், ஒருகட்டத்தில் சோர்ந்து போனார். இதனால் மனதளவிலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மனச்சோர்வினால் உடைந்து போனார்.
 
பத்து ஆண்டுகால போராட்டத்திற்கு பின் அவரும் அறுவை சிகிச்சைக்குச் சென்றார். அது அவருக்கு உதவி செய்தது.
 
“அறுவை சிகிச்சைக்கு முன் என்னால் உடலளவில் ஒரு வேலையும் செய்ய முடியாது. ஆனால் இப்போது என் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறது.முன்பை விட இப்போது நான் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று ரேச்சல் கூறுகிறார்.
 
மார்பக அறுவை சிகிச்சைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளாக கருதப்பட்டாலும், இது உண்மையில் பல பெண்களுக்கு உடல் அளவில் அவர்கள் எதிர்கொள்ளும் பல தொந்தரவுகளிலிருந்து விடுபெற உதவி செய்கிறது. பல பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது, மனதளவில் சோர்ந்திருக்கும் பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. இதன் காரணமாக சமீப ஆண்டுகளில் இத்தகைய சிகிச்சை முறைகள் பெரிதும் பேசப்படுகின்றன.