செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2016 (16:42 IST)

வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

பி.வி.சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதி போட்டியில் போராடி விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவை தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். முக்கிய தலைவர்களின் வாழ்த்துக்கள் இதோ:


 

 
குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி : "சிந்து, நீங்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்கு உங்களோடு இணைந்து இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். உங்களது மன உறுதி, இந்திய விளையாட்டு வீரர்களிடம் தன்னம்பிக்கையை விதைக்கும். இதன்மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளில் அவர்களும் சாதிக்கும் நம்பிக்கை கொள்வர்”.
 
பிரதமர் நரேந்திர மோடி : "சில்வர் சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். சிறப்பாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் நீங்கள் செய்திருக்கும் இந்த சாதனை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு நினைவு கூரப்படும்”
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி:  ”ஒவ்வொரு இளம் இந்தியர்களின் மனதிலும் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறார் சிந்து. அவர் வென்றிருக்கும் வெள்ளிப் பதக்கம், இந்தியத் தாயின் மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள விலைமதிக்க முடியாத ஓர் ஆபரணம். நட்சத்திரத்தைப் போல ஜொலித்து விளையாடிய அவர், அனைத்து இந்தியர்களையும் பெருமையடையச் செய்துள்ளார்”
 
ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு :  ”தங்கப் பதக்கம் வெல்ல மனம் தளராமல் போராடிய சிந்து, இந்திய இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறார். அவர் தெலுங்கு பெண் என்பதில் பெருமிதம் அடைகிறோம். சிந்துவின் வெற்றிக்காக பாடுபட்ட பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பாராட்டுகள்”
 
நடிகர் ரஜினிகாந்த் :  “சிந்து, வாழ்த்துக்கள். நான் உங்களுடைய ரசிகனாகிவிட்டேன்”
 
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் :  “நான் உங்களை நினைத்து பெருமை கொள்கின்றேன். நீங்கள் இந்தியர் அனைவரையும் பெருமைப்படுத்தி விட்டீர்கள்”
 
கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் :  ”இந்தியாவின் இளம் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர் சிந்து மிக நன்றாக விளையாடினீர்கள். சிறந்த ஆட்டத்தின் மூலம் நீங்கள் எங்களுடைய இதயங்களை வென்றுவிட்டீர்கள்”
 
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அபிநவ் பிந்ரா : ”ஒரு வாரத்திற்கு முன்னர் நான் மனமுடைந்து போனதைவிட இன்று அதிகமாக மனம் உடைந்து போனேன். சிந்து மிகவும் நன்றாக விளையாடினீர்கள். நீங்கள் எனக்கு உத்வேகம் அளித்திருப்பவர்”.