செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (19:43 IST)

பயணம் பலவிதம்: விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய பெண் நரிக்குட்டி

இளம் ஆர்க்டிக் நரிக்குட்டி ஒன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலைச் செய்துள்ளது.

நார்வே நாட்டுக்குச் சொந்தமான ஸ்வால்பார்ட் தீவுக் கூட்டத்தில் இருக்கும் ஸ்பீட்ஸ்பெர்ஜன் தீவில் இருந்து வடக்கு கனடாவுக்கு நரிக்குட்டி ஒன்று வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

76 நாட்களில் 3,506 கிலோ மீட்டர் தூரத்தை பனிப்பரப்பின் மீது நடந்தே கடந்துள்ளது இந்த பெண் நரிக்குட்டி.

நார்வே போலார் இன்ஸ்டிட்டியூட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் சென்ற ஆண்டு மார்ச் மாத இறுதியில் அந்த நரிக்குட்டியின் கழுத்தில் ஜி.பி.எஸ் ட்ரேக்கர் கருவி ஒன்றை கட்டி அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது அதற்கு ஒரு வயதுகூட நிறைவடைந்திருக்கவில்லை.

தனது பயணத்தைத் தொடங்கிய 21 நாட்களில் 1,512 கிலோ மீட்டர் பயணித்தது. சில நாட்களுக்குப் பிறகு தனது பயணத்தின் இரண்டாம் பகுதியில் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கனடாவின் எல்லெஸ்மியர் தீவை அடைந்தது.

நாளொன்றுக்கு சராசரியாக 46 கிலோ மீட்டரைவிடவும் சற்று கூடுதலான தொலைவைக் கடந்த அந்த நரிக்குட்டி, சில நாட்களில் 155 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்தது.

"அது இறந்து விட்டது அல்லது ஏதாவது படகில்தான் எடுத்துச் செல்லப்படுகிறது என நினைத்தோம். எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை, " என்று நார்வே போலார் இன்ஸ்டிட்டியூட்டை சேர்ந்த ஆய்வாளர் இவா பியூக்லேய் அந்நாட்டு அரசு வானொலியான என்.ஆர்.கேவிடம் தெரிவித்துள்ளார்.

ஆர்க்டிக் குளிர் பகுதியின் மாறுபடும் தீவிரமான வெப்பநிலைகளில் நரிகள் எவ்வாறு வாழ்கின்றன என்பது குறித்த ஆய்வில் அவர் ஈடுபட்டுள்ளார்.

"கோடைக் காலங்களில் அதிக அளவில் உணவு கிடைக்கும். ஆனால், குளிர் காலங்களில் உணவு கிடைக்காது என்பதால் ஆர்க்டிக் நரிகள் இரை தேடி புலம் பெயரத் தொடங்கும். இந்த இளம் பெண் நரிக்குட்டி இதுவரை பதிவு செய்யப்படாத அளவு தூரத்தைக் கடந்துள்ளது. அந்த இளம் குட்டியின் வழக்கத்துக்கும் மீறிய திறமையை இது காட்டுகிறது," என்று இவா கூறுகிறார்.