திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (21:13 IST)

அமெரிக்க வரலாறு: தர்பூசணி சண்டையை பெரிதாக்கி ஒரு நாட்டையே ஆக்கிரமித்த கதை

இச்சம்பவம் இல்லஸ்ட்ரேட்டட் போன்ற அமெரிக்க செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது, ஆனால் அமெரிக்க நலன்களுக்கு உகந்த வகையில் பக்கச்சார்பானதாக இருந்தது.
 
"கிஸ் மீ தி ••••," என்ற வாசகங்களுடன் ஒரு அமெரிக்கர் தூண்டிய கிளர்ச்சி பனாமா தீவின் வரலாற்றையே புரட்டிப்போட்டது.
 
அவர் ஃபிலிபஸ்டர்கள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவர். தீய வழிகளில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தங்கத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே பல ஏமாற்றுவேலைகளைச் செய்யக்கூடிய அந்த வடஅமெரிக்கர், அமெரிக்காவின் மேற்கு பகுதியிலோ, கரீபியக் கடல் பகுதியிலோ அல்லது மத்திய அமெரிக்காவிலோ செயல்படக் கூடியவராக இருந்தார்.
 
ஃபிலிபஸ்டர்கள் பிற குடியேறிகளுடன் நியூயார்க் அல்லது பாஸ்டன் போன்ற நகரங்களில் இருந்து கலிஃபோர்னியாவை நோக்கி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணத்தின் போது நியூ கிரனாடாவின் ஒரு பகுதியாக இருந்த பனாமாவை அடைந்தனர்.
 
அங்குள்ள உள்ள கிராமப்பகுதியில் லா சியானெகா என்ற ஊரின் தெருக்களில் அவர்கள் சென்றபோது, ஃபிலிபஸ்டர் ஜேக் ஆலிவர், ஜோஸ் மானுவல் லூனா என்ற தர்பூசணி வியாபாரியை அவமதித்தார். இந்த சம்பவம் கடந்த 1856-ம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று நடந்தது.
 
தர்பூசணிப் பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு, அதற்கான விலையைத் தர மறுத்த ஆலிவரை நோக்கி பனாமா நாட்டைச் சேர்ந்த மற்றொருவர், "கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் இப்போது அமெரிக்காவில் இல்லை," என எச்சரித்தார்.
 
ஆனால் அப்போது அந்தத் தெருவில் ஏற்பட்ட சண்டை ஒரு சமூகம் மிகப்பெரிய அளவில் கொதிப்படைய வழிவகுத்தது.
 
"தர்பூசணி துண்டின் காரணமாக ஏற்பட்ட சண்டையின் ஆழமான அர்த்தம், அவமானப்படுத்தப்பட்ட மக்களை கண்ணியப்படுத்துவதற்கான முதல் இயக்கத்தின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியமான விஷயம்" என்று கோஸ்டாரிகாவின் தேசிய பல்கலைக்கழகத்தில் லத்தீன் அமெரிக்க ஆய்வு நிபுணரும், இந்த விஷயத்தில் பகுப்பாய்வு மேற்கொண்ட ஆசிரியருமான டாக்டர் ஹெர்மன் குயெண்டல் பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார்.
 
அந்த சம்பவம் தூண்டிய கிளர்ச்சி மூன்று நாட்கள் வரை நீடித்தது. இதன் விளைவாக 16 அமெரிக்கர்கள் மற்றும் பனாமாவைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். அதே போல் இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
 
அதன் பின்னர் அந்த சம்பவம் "தர்பூசணி சம்பவம்" என்று அழைக்கப்பட்டது. ஆனால் தர்பூசணி துண்டு சம்பவத்தை அமெரிக்கா ஒரு மூலதனமாக மாற்றி எதிர்காலத்தில் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையே பனாமா கால்வாயை அமைத்து ஆக்கிரமிக்கப் பயன்படுத்திக்கொண்டது.
 
1840 களில் இருந்து, பனாமா பூசந்தியில் அமெரிக்கா ஒரு மூலோபாய இருப்பைக் கொண்டிருந்தது. அங்கு ஓடிய சாகஸ் நதி பசிபிக் கடல் பகுதியிலிருந்து அட்லாண்டிக் கடல் வரை முழுக் கண்டத்தையும் சுற்றிச் செல்லாமல் எளிதாகக் கடந்து செல்ல உதவும் ஒரு வழித்தடமாக இருந்தது.
 
அமெரிக்கா 1846 ஆம் ஆண்டில் (கொலம்பியா, வெனிசுலா, ஈக்வடார் மற்றும் பனாமாவை உள்ளடக்கிய) நியூவா கிராண்டாவுடன் மல்லாரினோ-பிட்லாக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் மூலம் அதன் குடிமக்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கு பனாமா பூசந்தி வழியாக செல்லும் போது பல சலுகைகளை உறுதி செய்தது.
 
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் குழுமம் ரூ.1,600 கோடி முதலீடு செய்வதில் சர்ச்சை ஏன்? உண்மை என்ன?
 
கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு நோக்கி செல்ல, அமெரிக்கர்கள் பனாமா வழியாக செல்லும் பாதை வழியாக படகில் பயணம் செய்தனர்.
 
“கொள்கை அளவில் பார்த்தால், இது அந்த நேரத்தில் பனாமா மக்களுக்கு பொருளாதார வளர்ச்சிக்கான பொன்னான வாய்ப்பாகத் தோன்றியது. அவர்கள் போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்றவை அதிக அளவில் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்களது எதிர்பார்ப்பு அமெரிக்கர்களுக்கு சாதகமான விளைவுகளையே அளித்தது,”என்று குயெண்டல் விளக்குகிறார்.
 
பனாமா கால்வாய் ரயில்வே நிறுவனத்தின் ரயில் பாதை போக்குவரத்து பனாமா நாட்டுப் படகுப் பயணங்களைக் கைப்பற்றியது. கொலோன் மற்றும் பனாமா நகரங்களில் திறக்கப்பட்ட தங்கும் விடுதிகள் மற்றும் சூப் கிச்சன்களையும் அமெரிக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
 
அதையும் மீறி, பனாமா நாட்டு மக்களை மதிக்காமல் மூர்க்கமாகப் பல சுதந்திரங்களுடன் செயல்பட, அமெரிக்கா 1846 உடன்படிக்கையைப் பயன்படுத்தியது. இதனால் அமெரிக்கர்களிடமிருந்து திமிர் பிடித்த மனப்பான்மையை பனாமா மக்கள் எதிர்கொள்ளத் தொடங்கினர். “அமெரிக்கா ஏற்கனவே தனது குடியேற்ற விரிவாக்க தத்துவத்தில் வளர்ந்தது. இந்த தத்துவத்தின் அடிப்படையில் அமெரிக்கர்கள் செயல்பட்டதால் பனாமா மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர்," என்கிறார் குயென்டெல்.
 
" அமெரிக்க புலம்பெயர்ந்தோர் வரும்போது, ​​​​அவர்கள் லத்தீன் அமெரிக்கா பற்றிய கருத்தை கொண்டு வருகிறார்கள். இது, மக்கள், அவர்களுடைய சட்டங்கள் மற்றும் நியூ கிரனாடாவின் அதிகாரிகளை திமிர் பிடித்த மற்றும் கேலிக்குரிய வகையில் நடத்துவதற்கு வழிவகுத்தது," என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
 
ஏப்ரல் 15, 1856 இல், பனாமாவுக்கு வந்த அமெரிக்க பயணிகளில் ஜாக் ஆலிவர் இருந்தார்.
 
அந்த நபருடன் மற்ற ஃபிலிபஸ்டர்களும் இருந்தனர். இவர்களில் சிலர், "சூதாட்டக் கூடங்கள் மற்றும் மதுக்கடைகளில் திமிருடன் நடந்துகொண்டனர்," என்று வரலாற்றாசிரியர் ஜுவான் பாடிஸ்டா சோசா 1911ல் வெளியிட்ட தனது "கப்பெண்டியம் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் பனாமா" (Compendium of the history of Panama) என்ற நூலில் விவரித்தார்.
 
 
சிறிய சண்டை பெரும் வன்முறையாக மாறி ரயில் நிலையம் வரை தாக்குதல் நடைபெற்றது.
 
ஆலிவர் குடிபோதையில் இருந்த நிலையில், ஜோஸ் மானுவல் லூனாவின் ஸ்டாண்டிற்குச் சென்று ஒரு தர்பூசணிப் பழத்தை எடுத்துக் கொண்டார். அந்த பழத்தை பாதி சாப்பிட்டுவிட்டு, தரையில் எறிந்தார். பின்னர் அதற்கான விலையைக் கொடுக்காமல் அவர் செல்ல முயன்றபோது, ​​​​விற்பனையாளர் அதற்கான பணத்தைக் கேட்டார். ஆனால் ஆலிவர் பணம் கொடுக்காமல், தனது துப்பாக்கியை எடுத்து கடைக்காரரை மிரட்டினார். பதிலுக்கு லூனா தனது கடையில் இருந்த ஒரு கத்தியை எடுத்தார் என சோசா விவரிக்கிறார்.
 
ஆலிவரின் வகுப்புத் தோழன் அந்த தர்பூசணித் துண்டுக்கு பணம் செலுத்த முயன்றான். அது நடந்திருந்தால் அந்தப் பிரச்னை அப்போதே முடிந்திருக்கும்.
 
ஆனால் மிகுவல் ஆபிரகாம் என்ற ஒரு நபர் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆலிவரின் கைத்துப்பாக்கியைப் பிடுங்கினார். இது தான் அமெரிக்கர்கள் இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்துவதற்கு உதவியது.
 
"இதையடுத்து அங்கிருந்து தப்பியோடியவர்களை அவர்கள் துரத்தினார்கள்" என்று சோசா தெரிவிக்கிறார். இதை உணர்ந்த பனாமா மக்கள் ஆபிரகாம் மற்றும் லூனாவைப் பாதுகாக்க முயன்றனர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு பெரும் சண்டை வெடித்தது. அது ரயில் நிலையம் வரை சென்றது. அதற்கு மேல் ஆலிவர் எங்கும் செல்லமுடியவில்லை. இதையடுத்து அங்கு இருதரப்பும் துப்பாக்கியால் மாறிமாறி சுட்டுக்கொண்டன.
 
அப்போது தற்செயலாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 900 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது.
 
ஆளுநர் பிரான்சிஸ்கோ டி ஃபேப்ரேகாவின் உத்தரவின் பேரில் பனாமா காவலர்கள் அப்போது உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். ரயில் நிலையத்தில் இருந்து வரும் துப்பாக்கிச் சூட்டைத் தடுக்க காவலர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இறுதியில் அந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. ஆனால் இந்தத் தகராறில் 16 அமெரிக்கர்களும், பனாமாவைச் சேர்ந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர். மேலும் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன.
 
அதன் பின் அமெரிக்கா சும்மா இருக்கவில்லை. என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணையை மேற்கொள்ளுமாறு பனாமாவுக்கான அமோஸ் பி. கோர்வைனுக்கு உத்தரவிட்டது. அவர் ஜூலை 8, 1856 அன்று தாக்குதல் குறித்த முழு விசாரணை அறிக்கையை அளித்தார். அந்த அறிக்கை அமெரிக்க ஆவணக்காப்பகத்திலும் பாதுகாக்கப்பட்டது.
 
இருப்பினும், அந்தச் சண்டை எங்கே தொடங்கியது என்பதை இந்த விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டவில்லை. மேலும், ஆலிவரின் தவறுதான் அந்தச் சண்டையின் தொடக்கப்புள்ளி என்பதையும் இந்த விசாரணை அறிக்கை கோடிட்டுக் காட்டவில்லை. மாறாக, பனாமா பூசந்தியை அமெரிக்க ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைக்கும் வகையில் அந்த விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
 
"மேலும், அது அமெரிக்க ஃபிலிபஸ்டர்களின் தவறு என்று பிரிட்டிஷ், பிரான்ஸ் மற்றும் ஈக்வடார் நாட்டு தூதர்கள் தெரிவித்த தகவல்களைப் புறந்தள்ளிவிட்டு, அவரது அறிக்கையில், கறுப்பர்களின் மிருகத்தனம் தான் இதுபோன்ற உயிரிழப்புக்களுக்குக் காரணமாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது," என்று குயெண்டல் விளக்குகிறார்.
 
 
நியூ யார்க் இல்லஸ்ட்ரேட்டட் செய்தித்தாளின் அட்டைப்படத்தில் குறைவான விவரங்களுடன் வெளியிடப்பட்ட செய்தியைப் போலவே, இந்த இழிவான சம்பவம் பனாமா நாட்டவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அமெரிக்காவில் பேசப்பட்டது என ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார்.
 
"செய்தித்தாளில் வெளியான இந்தப் படம், அரைகுறை ஆடைகளுடன் ஆப்பிரிக்க மக்கள் வெள்ளையின வீரர்களை எதிர்த்து மூர்க்கத்தனமாக சண்டை போடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது,” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 
இரண்டு கப்பல்கள் மற்றும் 160 இராணுவ வீரர்கள் செப்டம்பர் 1856 இல் நியூ கிரனாடா பகுதியை மூன்று நாட்களுக்குள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் பனாமாவில் அமெரிக்க ராணுவத்தின் தலையீடு பலமுறை ஏற்பட்டது.
 
கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக, அமெரிக்காவும் நியூவா கிரானாடாவும் ஒரு குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தி நிலைமையைச் சரிசெய்தனர். நியூவா கிராண்டா 4,12,349 அமெரிக்க டாலர்களை செலுத்தியது மட்டுமல்லாமல், அந்த பூசந்தியில் அமெரிக்க நலன்களுக்கான உத்தரவாதமும் பெறப்பட்டது.
 
"இது பனாமா மற்றும் கொலோனின் சுயாட்சியை அமெரிக்கர்களுக்கு ஆதரவாக அறிவிக்க நியூவா கிராண்டாவை கட்டாயப்படுத்துகிறது. மேலும் கிட்டத்தட்ட 4,00,000 அமெரிக்க டாலர்கள், இறந்தவர்களின் குடும்பங்களைச் சென்றடையவில்லை. இருப்பினும் இவை அனைத்திலும் பெரிய வெற்றி பெற்றது அமெரிக்கா," என்கிறார் குயென்டெல்.
 
அடிப்படையில், தர்பூசணி பழம் குறித்த சம்பவத்திற்கு முன்னர் பல ஆண்டுகளாக இருதரப்புக்கும் இடையே நிலவிய ஒடுக்குமுறைகளை அவர்களுடைய ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரவில்லை.
 
அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்ந்து அப்பகுதியில் நீடித்த போது அவர்கள் ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்ட அந்த உணர்விலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு வழியாக, இந்த சம்பவம் அமைந்தது என அவர் உறுதிப்படுத்துகிறார்.
 
"இறுதியில் அதை இராணுவ ரீதியாக ஆக்கிரமித்து, மேலும் பல ஆண்டுகளாக அது பனாமா பூசந்தியின் இரு கரைகளிலும் 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். பின்னர் அந்த கால்வாய் அமெரிக்க சொத்தாக மாறியது," என்று அவர் விவரிக்கிறார்.
 
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் இடையேயான முக்கிய பாதையின் கட்டுப்பாடு 1999 இன் கடைசி நாள் வரை ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்தது.