1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (20:09 IST)

சைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா?

சைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும் விடையில்லை.

 
110 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஒரு பயங்கரமான வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது போட்காமேன்னயா துங்குஸ்கா ஆற்றின் அருகே ஏற்பட்டது.
 
1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி, உள்ளூர் நேரப்படி 7 மணி 17 நிமிடத்திற்கு, பைகால் ஏரியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மலைப்பகுதியில் வசித்தவர்கள், நீல நிறத்தில் இருந்த ஒளிமயமான பொருள் ஒன்றை வானில் கண்டார்கள். சூரியனைப் போல பிரகாசமாக இருந்த அந்தப் பொருள் நகர்ந்ததையும் பார்க்கமுடிந்தது. சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பீரங்கியில் இருந்து வெளிப்படும் தோட்டா ஒலியைப் போன்று தொடரொலி எழுந்தது.
 
இந்த நிகழ்வின்போது, சுமார் 60 கி.மீ. தொலைவில் இருந்த வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. இந்த வெடிப்பினால் வெளிவந்த வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அங்கிருந்த விலங்குகள் எலும்புக்கூடுகளாக மாறின.
 
அந்த வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரின் கூற்றுப்படி, 'வானம் இரண்டு பகுதிகளாக பிளவுண்டு, அதிலிருந்து நெருப்பு கோளம் கொட்டுவது போல் தோன்றியது. தரையில் எதோ விழுந்ததைப் போல் பயங்கரமான ஓசை ஏற்பட்டது. அதன்பிறகு எல்லா இடங்களிலும் கல் மழை பொழிந்தது. அதன் ஓசை, துப்பாக்கியால் தொடர்ந்து சுடுவது போன்று இருந்தது'.
 
இந்த நிகழ்வு 'துங்குஸ்கா நிகழ்வு' என்று அறியப்படுகிறது. 110 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் புதிர் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு விஞ்ஞானிகளும், வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
 
வெடிப்பு நிகழ்ந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதைப் பற்றி விசாரிக்க அங்கு யாரும் செல்லவில்லை. அந்த கால கட்டத்தில் ரஷ்யாவில் ஒரு அரசியல் புரட்சி ஏற்பட்டது. எனவே மனிதர்கள் வசிக்காத இந்த இடத்தில் ஏற்பட்ட வெடிப்புக்கு யாரும் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
 
அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் உள்ள அறிவியல் கோளரங்க நிறுவனத்தை சேர்ந்த நத்தாலியா ஆர்த்தேயிமேவாவின் கருத்துப்படி, வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு 1927இல் லியோனித் குலிக் என்ற விஞ்ஞானி தலைமையில் ஒரு ரஷ்ய குழு துங்குஸ்கா பகுதிக்கு சென்றது.
 
இந்த வெடிப்பு நிகழ்ந்த ஆறு ஆண்டுகள் கழித்துதான் அது பற்றிய தகவல் செய்தித்தாள்களில் வெளிவந்தது. 1938இல் துங்குஸ்கா வெடிப்பு பற்றி லியோனித் இவ்வாறு எழுதுகிறார், 'பூமியில் இருந்து 25 மீட்டர் ஆழத்தில் நிக்கலுடன் கூடிய இரும்புத் துண்டுகள் இருக்கலாம் என்று கருதுகிறோம். அவற்றின் எடை நூறு முதல் இருநூறு மெட்ரிக் டன்கள் வரை இருக்கும்.
 
இப்படி பல்வேறுவிதமான கோட்பாடுகள் சொல்லப்பட்டாலும், துங்குஸ்கா வெடிப்பு சம்பவம் பற்றிய ஊகங்கள் முடிவடையவில்லை. வெடிப்புக்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை.