1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (23:35 IST)

அடுத்தடுத்து திவாலாகும் வங்கிகள்: 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் திரும்புகிறதா? அமெரிக்காவில் நடப்பது என்ன?

அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2 வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகியுள்ளன. இதனால், உலகையே உலுக்கிய 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் வரப் போகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க வங்கிகள் திவாலானது ஏன்? அதனை சமாளிக்க அந்நாட்டின் மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) என்ன செய்கிறது? அதன் தாக்கம் உலகளவில் எப்படி இருக்கும்?
 
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் சான்டாகிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சிலிகன் வேலி வங்கி (SVB) திவாலாகியுள்ளது. அந்த வங்கியின் 17 கிளைகளும் மூடப்பட்டுவிட்டன. வங்கியின் அனைத்து சொத்துகளையும் அமெரிக்க வங்கி ஒழுங்குமுறை அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.
 
 
2008-ம் ஆண்டு நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்காவில் திவாலாகும் பெரிய வங்கி சிலிகன் வேலி வங்கி தான். 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிப்படி அதன் சொத்து மதிப்பு 209 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதன் கணக்கில் 1,743.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தன. அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியாக அது திகழ்ந்தது.
 
புத்தாக்க தொழில் நிறுவனங்களில்முதலீடு செய்யும் 2,500-க்கும் மேற்பட்ட வென்சர் கேபிட்டல் நிறுவனங்களுக்கு வங்கி சேவைகளை இந்த சிலிகன் வேலி வங்கி வழங்கி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கும் அதிகமான தொகையை சேமிப்பாக வைத்திருப்பவர்கள் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அமெரிக்க நிதி ஒழுங்குமுறை அமைப்பான ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் அறிவித்துள்ளது.
 
சிலிகன் வேலி வங்கி திவாலான அடுத்த இரண்டே நாட்களில், நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட சிக்னேச்சர் வங்கி(Signature bank) வீழ்ந்தது. அந்த வங்கியை அமெரிக்க ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வங்கி 110.36 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளையும், 88.59 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு டெபாசிட்களையும் கொண்டிருந்தது.
 
சிலிகன் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவற்றின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் சேமித்த பணம் முழுமையாக திரும்பக் கிடைக்கும் என்று அமெரிக்க நிதித் துறையும், வங்கி ஒழுங்குமுறை அமைப்புகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
 
வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தைக் கையாள வசதியாக தற்காலிகமாக புதிய வங்கி சேவையை அமெரிக்க ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ளது. சிக்னேச்சர் வங்கி வாடிக்கையாளர்களும், கடன் வாங்கியவர்களும் தாமாகவே புதிய வங்கியின் வாடிக்கையாளர்களாகி விடுவார்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
சிலிகன் வேலி வங்கி வாடிக்கையாளர்கள் திங்கட்கிழமை முதல் தங்களது கணக்குகளை வழக்கம் போல் கையாள முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
 
சிலிகன் வேலி வங்கி, மற்ற வங்கிகளைப் போலவே தனது கையிருப்பை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் கடன் பத்திரங்கள் முதலீடு செய்ததாக நம்பப்படுகிறது.
 
ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்த வரையிலும் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஆனால், கொரோனா பேரிடருக்குப் பிந்தைய பொருளாதார சூழலில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தியதும் சிலிகன் வேலி வங்கி தள்ளாடத் தொடங்கியது.
 
இந்த காலத்தில், வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் இருந்து பணத்தை அதிக அளவில் எடுத்ததால், புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு (Start up) நிதி திரட்டுவது சவாலானதாக இருந்தது.
 
சிலிகன் வேலி வங்கி, தனது முதலீட்டின் மதிப்பு குறைவாக இருந்த வேளையில், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பணம் எடுத்ததால், அதனை ஈடுகட்ட சொந்த முதலீடுகளை விற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
 
அந்த வகையில், கடந்த மார்ச் 8ம் தேதி மட்டும் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்துவிட்டதாக அந்த வங்கி கூறியுள்ளது.
 
மார்ச் 9-ம் தேதிக்கு முன்பு வரை சிலிகன் வேலி வங்கியின் நிதி நிலைமை நன்றாகவே இருந்ததாக அமெரிக்க அரசு ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், அந்த வங்கி நஷ்டத்தில் இயங்குவதாக பரவிய செய்தியால் மார்ச் 9-ம் தேதி மட்டும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும் பணத்தை எடுத்துவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மார்ச் 9ம் தேதிப்படி, சிலிகன் வேலி வங்கியின் நிதி நிலைமை மைனஸ் 958 மில்லியன் என்கிறது அந்த அறிக்கை. இந்த சிக்கலை சமாளிக்க அந்த வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் தரவில்லை.
 
சிலிகன் வேலி வங்கி பெருமளவில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களுக்கு வங்கி சேவை அளித்து வந்தது. திவாலான மற்றொரு வங்கியான சிக்னேச்சர் வங்கியோ கிரிப்டோ கரன்சி நிறுவனங்களுக்கு அதிக அளவில் சேவை அளித்து வந்தது.
 
திவாலான இரு வங்கிகளுக்கும் உள்ள ஒற்றுமை அவையிரண்டுமே ஒரு குறிப்பிட்ட துறையை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வந்தவை என்பதுதான். அதுவே அந்த வங்கிகளுக்கு பெரிய பிரச்னையாகிப் போனது. அவற்றின் ஒட்டுமொத்த வர்த்தக மாடலும் ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்திருந்ததும், ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகரித்ததால் அவற்றின் முதலீடுகளின் மதிப்பு வீழ்ந்ததுமே தற்போதைய நிலைக்குக் காரணம் என்று நிதித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
அமெரிக்க வங்கிகள் திவாலால் இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?
 
திவாலான அமெரிக்க வங்கிகளில் சிலிகன் வேலி வங்கியுடன் இந்திய புத்தாக்க தொழில் நிறுவனங்கள் பலவும் தொடர்பில் இருந்தன. அதாவது, அந்நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்து வரும் முதலீடுகளை அந்த வங்கி வாயிலாகவே பெற்று வந்தன.
 
அந்த வங்கி திவாலானதால் இந்திய புத்தாக்க தொழில் நிறுவனங்கள் கவலையடைந்தன. ஆனால், அமெரிக்க அரசின் நடவடிக்கைகளால் இந்திய புத்தாக்க தொழில் நிறுவனங்களை சூழ்ந்திருந்த சிக்கல்கள் நீங்கியிருப்பதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
 
இந்திய வங்கி கட்டமைப்பு மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை இந்த நெருக்கடியில் இருந்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.