வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (14:31 IST)

"குடும்பத்திற்கு 72 ஆயிரம் அளிக்கும் 'நியாய்' திட்டம் சாத்தியமே": ப. சிதம்பரம்

நாட்டில் உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதிசெய்யும் 'நியாய்' திட்டத்திற்கு தேசத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் செலவாகுமென முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
"காங்கிரஸ் காரிய கமிட்டி 'நியாய்' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. தேர்தல் அறிக்கை வெளியாகும்போது இந்தத் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும். இந்தியாவில் உள்ள ஐந்து கோடிக் குடும்பங்களுக்கு, அதாவது, சுமார் 25 கோடி மக்களுக்கு இந்தத் திட்டத்தினால் பயன் கிடைக்கும்." என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரம் விளக்கினார்.
 
எல்லா குறியீடுகள், புள்ளிவிவரங்களை கணக்கில் எடுத்துப் பார்த்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் அல்லது மாதம் 6 ஆயிரம் ரூபாய் தர முடிவெடுத்ததாகவும் இந்தத் திட்டத்தை வடிவமைக்க அறிஞர் குழு அமைக்கப்படும் என்றும், படிப்படியாக ஐந்து கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் சிதம்பரம் கூறினார்.
 
20 ஆண்டுகளுக்கு முன்போ 40 ஆண்டுகளுக்கு முன்போ இந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியாது எனக் கூறிய சிதம்பரம், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அடைந்திருக்கும் அபிரிமிதமான வளர்ச்சியை நம்பியே இந்த திட்டம் வரையப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
 
"தற்போது, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 200 லட்சம் கோடி; ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சி இருந்தால் ஐந்தாண்டுகளில் 400 லட்சம் கோடியை இது எட்டும். மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் வரும் ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் இதைச் செய்ய முடியும் என நம்புகிறோம். 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றார்கள். செயல்படுத்திக் காட்டினோம். அதேபோல இதையும் செய்வோம்" என்கிறார் சிதம்பரம்.
 
இந்தியில் 'நியுந்தம் ஆய் யோஜனா' எனவும் தமிழில் ஏழைகளுக்கு நீதி என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் அளவுக்கு செலவாகும் என்று குறிப்பிட்ட சிதம்பரம், இந்தத் திட்டத்திற்கான 5 கோடி குடும்பங்களை அடையாளம் காண்பது கடினமான காரியமல்ல என்றார்.
 
 
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 90 சதவீத மக்கள் ஏழைகளாக இருந்தார்கள்; இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட 70 சதவீதம் பேர் ஏழைகளாக இருந்தார்கள்; இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி 20- 30 சதவீதம் பேர் ஏழைகளாக இருக்கிறார்கள். அதை மாற்ற விரும்புகிறோம். அதற்குச் சிறந்த வழி நேரடியாக பணம் வழங்குவதுதான் என்று கூறிய சிதம்பரம், உலகில் பல நாடுகளில் 'நெகடிவ் இன்கம்டாக்ஸ்' என்ற பெயரில் இம்மாதிரித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
 
இந்தத் திட்டத்திற்கு பணம் தேவைப்படும் என்பதால் பிற திட்டங்களுக்கான மானியங்கள் குறைக்கப்படாது எனக் கூறிய சிதம்பரம், இலக்கு வைத்து செயல்படுத்தப்படும் எந்தத் திட்டத்திற்கான மானியத்தையும் குறைக்காமல் இதனைச் செய்ய முடியும் என்றார்.
 
குறைந்தபட்ச வருவாயாக 72 ஆயிரம் ரூபாயை நிர்ணயித்திருந்தாலும், முழுப் பணத்தையும் அரசு தராது என்றும் அதில் பற்றாக்குறையாக உள்ள பணத்தையே அரசு தருமென்றும் கூறிய சிதம்பரம், இந்தத் திட்டத்திற்கான செலவு எந்தக் கட்டத்திலும், எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தைத் தாண்டாது என்று குறிப்பிட்டார்.
 
அரசு அளிக்கும் இந்த உதவி, குடும்பத்தில் உள்ள பெண்களின் கணக்கில் செலுத்தப்படுமென்றும் தற்போது உள்ள வரிவருவாயை வைத்தே இதைச் செய்ய முடியுமென நம்புவதாகவும் கூறினார்.
 
இந்த திட்டத்தின்படி பெரிய அளவில் பணம் நேரடியாக மக்களின் கைக்குச் செல்வது பணவீக்கத்தை ஏற்படுத்தாதா எனக் கேட்டபோது, "இது கடைநிலையில் உள்ள மக்களின் கையில் பணத்தைக் கொண்டு சேர்க்கும். அவர்களது நுகர்வு மிகக் குறைவாக இருக்கிறது. அவர்கள் அதற்காக செலவழிக்கும்போது, உற்பத்தி பெருகும். அதனால் பணவீக்க ஆபத்து இருக்காது" என்றார் சிதம்பரம்.