1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (21:09 IST)

கிம் பற்றிய 5 மர்மங்கள்: பிறந்த நாள், தாய், மனைவி, குழந்தை என அனைத்தும் ரகசியம் ஏன்?.

North Korea
கிம் பற்றிய மர்மம் இது மட்டுமல்ல. 2011-ல் அதிகாரத்துக்கு வந்த வட கொரிய சர்வாதிகாரி பற்றிய விடை தெரியாத ஐந்து மர்மமான கேள்விகள் இங்கே உள்ளன.
 
1. கிம் ஜாங் உன் எப்போது பிறந்தார்?
உண்மையில் தெரியவில்லை.
 
"அவர் பிறந்த ஆண்டு 1982, 1983 அல்லது 1984 என பல சர்ச்சைகள் உள்ளன," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரசியல் பாடப் ஆசிரியர் டாக்டர் எட்வர்ட் ஹோவெல் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ஜனவரி 8 என்று கூறப்படும் அவரது பிறந்தநாள் கம்யூனிச நாட்டில் ஒரு வழக்கமான வேலை நாளாகும். அதே நேரத்தில் அவரது தந்தை கிம் ஜாங் இலின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 16 ஆம் தேதி "பிரகாசமான நட்சத்திரத்தின் நாள்" என்று கொண்டாடப்படுகிறது.
 
அவரது தாத்தா கிம் இல் சூங் -ன் பிறந்த நாளான ஏப்ரல் 15-ம் தேதி "சூரிய நாள்" என்று கொண்டாடப்படுகிறது.
 
எவ்வாறிருந்தாலும், அவரது குடும்பத்தின் பல விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன.
 
வட கொரிய நிபுணர் டாக்டர் ஹோவெல், கிம் ஜாங் உனுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் பெயர் கிம் ஜாங் நாம் என்கிறார். அவர் 2017 -ல் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
 
கிம் ஜாங் உனின் தந்தை கிம் ஜாங் இலுக்கு குறைந்தது நான்கு வாழ்க்கை துணைகள் இருந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் அவரது உறவுகள் பெரும்பாலும் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தன.
 
அவரது தாய், கோ யங் ஹூய், ஜப்பானில் பிறந்ததாகவும், 1960களில் நடனம் ஆடுபவராக வேலை செய்ய வட கொரியாவுக்கு வந்ததாகவும் கருதப்படுகிறது.
 
அவர் கிம் ஜாங் இலின் அனைத்து துணைகளிலும் மிகவும் பிடித்தமானவர் என்று கூறப்பட்டது.
 
1973ல் ஜப்பானுக்கு சென்றபோது கோ யங் ஹூய் எடுத்த புகைப்படங்கள் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டன.
 
கோ ஹூய் நடனக் கலைஞராக இருந்ததாலும் ஜப்பானுடன் தொடர்புடைய குடும்ப பின்னணி இருந்ததாலும் வட கொரியா அவரைப் பற்றி அதிகம் விளம்பரம் செய்யவில்லை என்று கொரியா டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
 
"இரண்டாம் உலகப் போரின் போது கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்திருந்த ஜப்பானில் பிறந்தவர் பொதுவாக சமூகத்தில் குறைந்த நிலையில் இருப்பார். ஆனால் கிம் ஜாங் இலை திருமணம் செய்ததால், அவருக்கு ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தது," என்று டாக்டர் ஹோவெல் கூறுகிறார்.
 
2. கிம் ஜாங் உனின் மனைவி யார்?
 
ரி சோல் ஜு-வை இசை நிகழ்ச்சி ஒன்றில் கிம் சந்தித்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
 
மீண்டும், நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவருக்கு ரி சோல் ஜு என்ற மனைவி இருப்பதாகத் தெரியும். ஆனால் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை (2009 இல் இது நடந்திருக்கலாம் என்ற ஊகம் உள்ளது).
 
"தோழர் ரி சோல் ஜு" பற்றி மிகக் குறைவே தெரியும். அவர் முன்னாள் பாடகியாக இருந்து, ஒரு நிகழ்ச்சியின் போது கிம்மின் கவனத்தை ஈர்த்தாரா?
 
அவரது பெயரில் வட கொரிய கலைஞர் ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே நபர் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
 
ஒரு சட்டமன்ற உறுப்பினர், புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, 2005-ம் ஆண்டு ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கான வட கொரியாவின் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் குழுவில் (cheer leaders) பங்கேற்க சோல் ஜு தென் கொரியாவுக்குச் சென்றதாகவும், சீனாவில் பாடல் பயின்றதாகவும் நம்புவதாகக் கூறினார்.
 
கிம் ஜாங் உனின் மனைவி என்பதை தவிர, வேறு எந்த விவரங்களையும் வட கொரியா கொடுக்கவில்லை.
 
3. கிம் ஜாங் உனுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர்?
,
கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஆவுடன் பொது நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
 
இந்த விவரத்தை கண்டறிவதும் கடினம் தான்.
 
2016 -ம் ஆண்டில் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைந்த பிறகு ரி சோல் ஜு கர்ப்பமாக இருப்பதாக ஊகம் எழுந்தது. ஆனால் அது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
 
ஏற்கெனவே, 2010 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் அதில், வாரிசாக இருப்பதற்கான சாத்தியம் கொண்ட, ஆண் குழந்தை பிறந்ததா என்று தெரியவில்லை. சொல்லப் போனால், அந்த குழந்தைகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.
 
வட கொரிய தலைவர் தனது மகள் கிம் ஜூ-ஆவுடன் பொது மக்கள் முன்பு தோன்றியுள்ளார். இரண்டாவது மூத்த குழந்தையான அவருக்கு 10 வயதாகிறது. அதிக தகவல்கள் தெரிந்திருப்பதும் அவரைப் பற்றி தான். அவர் 2023-ல் குறைந்தது ஐந்து முறை பொது நிகழ்வுகளில் தோன்றியுள்ளார்.
 
"அவரது குழந்தைகளின் முழு கதையையும் நாம் இன்னும் அறியவில்லை," என்று டாக்டர் ஹோவெல் விளக்குகிறார். கிம் ஜாங் உனின் நண்பரான முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரமான டென்னிஸ் ரோட்மேன் 2013-ம் ஆண்டில் தான் அளித்த பேட்டி ஒன்றில் கிம்மின் மகளின் பெயரை வெளியே சொன்னார் என்று அவர் நினைவூட்டுகிறார்.
 
கிம் ஜாங் உனுக்கு வேறு குழந்தைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றி மிகக் குறைவே தெரியும். அவர்களின் தாய் யார் என்பதும் தெரியவில்லை என்று வட கொரியா நிபுணர் டாக்டர் ஹோவெல் கூறுகிறார்.
 
கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ-ஆவை அடுத்த தலைவராக வளர்ப்பதாக பல அரசியல் பகுப்பாளர்களும், தென் கொரியாவின் உளவு அமைப்பும் நம்புகிறது. ஆனால், டாக்டர் ஹோவெல் இதை நம்பவில்லை.
 
கிம் ஜூ ஆ இன்னும் இளமையாக இருக்கிறார். மேலும் கிம் ஜாங் உனின் செல்வாக்குமிக்க சகோதரி கிம் யோ ஜோங், அதிக அனுபவமும், உயர் வகுப்பு மக்களுடன் சிறந்த தொடர்புகளும் கொண்டிருக்கிறார். எனவே, தனது சகோதரனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அவருக்கே இருக்கின்றன.
 
"வட கொரிய தலைவர் ஏவுகணை ஏவுதல், விருந்துகள் அல்லது கால்பந்து போட்டிகளில் தனது இளம் மகளுடன் பார்க்கப்படுகிறார். ஏனென்றால் அவர் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவராகவும் கருணையுள்ள தலைவராகவும் பார்க்கப்பட விரும்புகிறார்," என்று டாக்டர் ஹோவெல் நம்புகிறார்.
 
4. கிம் ஜாங் உன் எப்படி ஆடம்பரமாக வாழ முடிகிறது?
 
கிம் ஜாங் உன், ஆடம்பரமான வாகனங்களை அடிக்கடி பயன்படுத்துகிறார்.
 
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்குவதன் காரணமாக வட கொரியாவும் அதன் தலைவரும் ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளை பல ஆண்டுகளாக சந்தித்து வருகின்றன.
 
ஆனால் டாக்டர் ஹோவெல், கிம் ஜாங் உன் தடைகளிலிருந்து தப்பிக்க எல்லாவற்றையும் செய்து வருவதாகக் கூறுகிறார்.
 
“அரசு பயன்பாட்டுக்காக கணக்கில் காட்டப்படாத நிதியை வட கொரியா கொண்டுள்ளது. தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறை தொடர வேண்டும் என்று கிம் விரும்புவதால் இந்த நிதி தொடர்ந்து இருந்து வருகிறது.”
 
உலகம் முழுவதும், வட கொரியாவுக்கு நிதி அளிக்க தயாராக இருக்கும் நாடுகள் பல உள்ளன என்று டாக்டர் ஹோவெல் நம்புகிறார். இந்த பணம் வேறு வழிகளில் வரலாம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
 
“வட கொரியா இணைய வசதி இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட நாடு என்று பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். வட கொரியாவில் அரசு நடத்தும் இணையம் உள்ளது. சைபர் போர் வட கொரியாவின் முக்கிய உத்தியாக உள்ளது. தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும், அணு ஆயுத திட்டத்தையும் நடத்த, கிம்மின் அரசு, பிற நாடுகளின் கணினி முறைகளை ஹேக் செய்து, பணத்தை திருடுகின்றனர்” என்று டாக்டர் ஹோவெல் கூறுகிறார்.
 
5. கிம் ஜாங் உன் தனது மக்களைப் பற்றி கவலைப்படுகிறாரா?
 
2020-ம் ஆண்டில் ராணுவ அணிவகுப்பில் கிம்மின் பேச்சு, அவரது மாறுபட்ட பக்கத்தை காட்டியது.
 
பெருந்தொற்று மற்றும் சமீபத்திய இயற்கை பேரிடர்களை எதிர்த்து அவரது துருப்புகளின் முயற்சிக்காக அவர் நன்றி சொன்னார். ஒரு கட்டத்தில், நாட்டின் போராட்டங்களைப் பற்றி பேசுகையில் அவர் கண்களில் இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே பேசினார். இது வட கொரிய தலைவரின் மிக அரிதான உணர்ச்சி வெளிப்பாடு ஆகும்.
 
நாடு அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், அவர் பணிவு காட்ட முயற்சிக்கிறார் என்று சில நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
ஆனால், வட கொரிய தலைவரின் ஆடம்பரமான வாழ்க்கை முறை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
 
கிம் ஜாங் உன், தனது தாத்தா கிம் இல் சூங் தொடங்கிய ஆடம்பரமான ரயில்கள் மூலம் நீண்ட தூர பயணம் செய்யும் பாரம்பரியத்தை தொடர்கிறார்.
 
2001-ம் ஆண்டில் கிம் ஜாங் உனின் தந்தையான கிம் ஜாங் இல் உடன் பயணம் மேற்கொண்ட ரஷ்ய ராணுவத் தளபதி தனது நினைவுக் குறிப்புகள் ‘ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’-ல் அதன் ஆடம்பரத்தைப் பற்றி பேசினார்.
 
கிம்மின் முன்னுரிமைகள் குறித்து இது என்ன கூறுகிறது?
 
“அவர் தனது ஆட்சியையும், தனது ஒடுக்குமுறை மற்றும் சர்வாதிகார தலைமையையும் மட்டுமே பாதுகாக்க விரும்புகிறார். தனது நாட்டில் உள்ள 26 மில்லியன் மக்களைப் பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை,” என்று டாக்டர் ஹோவெல் கூறுகிறார்.