1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (15:44 IST)

கொரோனா வைரஸ் காரணமாக மோசமான பட்டினியை சந்திக்கவுள்ள 5 நாடுகள் இவைதான்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உண்டாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பசியின் காரணமாக உலகம் முழுவதும் அடுத்த பெருந்தொற்று பரவல் போன்ற நிலை உருவாகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் உணவுத் தேவை காரணமாக அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காகலாம் என்கிறது அந்த அமைப்பு.

2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் மோசமான பட்டினி சூழலில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 13.5 கோடி. கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு உலக நாடுகள் முடக்க நிலையை அறிவித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 26.5 கோடியாக அதிகரிக்கலாம் என்று உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

உலக மக்கள் யாரும் பசியின் காரணமாக பாதிக்கப்படக்கூடாது என, அவர்களுக்கு உணவு விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பு 2019 ஆம் ஆண்டில் 230 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக பெற்று இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தங்களுடைய செயல்பாடுகளை முறையாக செய்ய வேண்டுமானால் 10 முதல் 12 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 1000 முதல் 1200 கோடி அமெரிக்க டாலர் வரை தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால், உணவின்மை காரணமாக உலக அளவில் பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ள நாடுகளாக ஐந்து நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏமன்

அரபு நாடுகளிலேயே மிகவும் வறுமை நிலையில் உள்ள நாடான ஏமனில் 2015 ஆவது ஆண்டு முதல் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான படைகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.

தற்போதைய கொரோனா பரவல் அந்த நாட்டில் நிலவும் மனிதநேய சிக்கலை மேலும் அதிகமாக்கியுள்ளது.

சண்டைகள் நடக்கும் காலம் நீடிக்கும் போது அதன் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கையும் அதிகமாகிறது. 2016 ஆம் ஆண்டில் ஏமனில் நாங்கள் 30 முதல் 40 லட்சம் வரையிலான மக்களுக்கு உதவி செய்தோம்.

ஆனால் தற்பொழுது ஒரு கோடியே 20 லட்சம் மக்களுக்கு உதவி செய்கிறோம் என்று பிபிசியிடம் தெரிவித்தார் உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் ஆரிஃப் ஹுசேன்.

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும் பகுதிகளில் மக்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை தடுத்து வருவதாகவும் உலக உணவுத்திட்டம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் தெரிவித்துள்ளது. யேமெனில் இந்த மாத தொடக்கத்தில் வைரஸ் தொற்று இருப்பது முதன்முதலாக உறுதி செய்யப்பட்டது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு

சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலமாக உள்நாட்டு ஆயுதப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ ஜனநாயக குடியரசு உலகிலேயே உணவுப் பிரச்சனையை அதிக அளவில் எதிர்கொண்டிருக்கும் இரண்டாவது நாடு என்று உலக உணவுத் திட்டம் தெரிவிக்கிறது.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த 15 சதவிகித மக்கள் உலகெங்கும் போர் நடக்கும் பகுதியில் இருக்கக்கூடிய மூன்று கோடி மக்களில் அடக்கம்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய கிட்டத்தட்ட 200 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படும் என்று உலக உணவுத்திட்டம் தெரிவிக்கிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் நடக்கும் உள்நாட்டு சண்டைகள் காரணமாக சுமார் 50 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

உலகெங்கும் இருக்கக்கூடிய போர் நடக்கும் பகுதியில் இருக்கக்கூடிய மக்களைப் போலவே புலம்பெயர்ந்த மக்களும் கொரோனாவால் அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இதன் காரணம் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பதுதான்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் நடக்கும் உள்நாட்டு சண்டைகள் அங்கு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஐநாவின் அகதிகள் உயர் ஆணையம் அறிவித்தது.

வெனிசுவேலா

உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள பிற நாடுகளைப் போல் வெனிசுவேலாவின் போர் அல்லது சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அந்த நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழலில் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

உலகிலேயே அதிகமான பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களை கொண்டுள்ள நாடான வெனிசுவேலாவில் பணவீக்க விகிதம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 200 சதவிகிதம் எனும் அளவை அடைந்தது.

அதனால் அந்த நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் உதவிகளை உதவிகளை எதிர்நோக்கி வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

பெரும் எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள் திரளாக நாட்டை விட்டு வெளியேறியதால் அங்கு நிலைமை மோசமாக உள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினர் அல்லது 48 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

தெற்கு சூடான்

உலக நாடுகளிலேயே மிகவும் இளம் நாடு தெற்கு சூடான். 2011ஆம் ஆண்டில்தான் சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடாக உருவானது.

பிரிவினைக்காக பல்லாண்டு காலமாக அங்கு நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தது தனி நாடாக உருவான பின்னும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் வன்முறை நிறைந்த சண்டைகளை அந்த நாடு சந்திக்க தொடங்கியுள்ளது.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதம் பேர் தங்கள் தினசரி உணவைப் பெறவே கடுமையாகப் போராடி வருகிறார்கள் என்று உலக உணவுத் திட்டம் கூறுகிறது.

நிலைமையை மேலும் மோசமாக்கியது இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் விளைவிக்கப்பட்ட பயிர்களில் புலிகள் நடத்திய தாக்குதல்.

எண்ணெய் வளத்தையே தனது பொருளாதாரத்திற்கான பெரும் ஆதாரமாக கொண்டுள்ள தெற்கு சூடான், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலையில் பெரும் வீழ்ச்சி கண்டு வரும் சூழலில் அது தனது பொருளாதாரத்தையும் எதிரொலிக்கும் நிலையை சந்திக்க உள்ளது.

ஆஃப்கானிஸ்தான்

2001ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய படையெடுப்புக்குப் பிறகு பதினெட்டு ஆண்டு காலத்திற்கு மேலாக ஆஃப்கானிஸ்தான் சண்டை மற்றும் அமைதியின்மையை எதிர்கொண்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அந்த நாட்டின் மக்களில் 1.1 கோடி பேர் கடுமையான உணவு சிக்கலை எதிர் கொண்டுள்ளனர் என்கிறது உலக உணவு திட்டம். ஆஃப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள்.

தற்போது சுமார் ஆயிரம் பேர் ஆப்கன் முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்த எண்ணிக்கை அதிகமாகவே இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதன் காரணம் போரின் காரணமாக அந்த நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது என்பதே.

மேற்கண்ட நாடுகள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் சுமார் 13 கோடி மக்களும் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு பசி மற்றும் பட்டினி நிலைக்கு தள்ளப்படும் சூழலில் உள்ளனர்.

இதற்கு காரணம் வைரஸ் உள்ள பொருளாதார சரிவின் காரணமாக வேலை வாய்ப்புகளில் ஏற்பட்ட எதிர்மறைத் தாக்கமாகும்.