குடியரசு தின விழாவிற்காக வேலை வாங்கிய பள்ளி நிர்வாகம்.. 8ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி..!
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள எஸ்சி சமூக மாணவர்களுக்கான அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சங்கீதா என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.
குடியரசு தின விழாவிற்காக பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டிலிருந்து நாற்காலிகளை ஏற்றி சென்ற ஆட்டோவில் சங்கீதாவும் மற்ற சில மாணவர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது திடீரென தவறி சங்கீதா கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின்படி, ஆட்டோவிலிருந்து நான்கு குழந்தைகள் விழுந்தும், ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் சென்றது தெரியவந்தது.
உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சங்கீதா, தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் காதுகளில் வழிந்த ரத்தப்போக்கு காரணமாக ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்றும், அவருக்கு காது கேளாத குறைபாடு இருந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் போராட்டத்தை வெடிக்க செய்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே மாணவியின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டி, தலைமை ஆசிரியர் சுனிதா மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
Edited by Siva
