1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (13:10 IST)

உலக ஆக்டோபஸ் நாள் - ஆக்டோபஸ் பற்றிய பத்து தகவல்கள்!!

ஆக்டோபஸ் மிகவும் விளையாட்டுத்தனமான, குறும்புதனமான உயிரினம். அது உங்களை பலவகையில் ஆச்சரியப்படுத்தும். அதன் உடல் முழுவதும் மூளையணுக்கள் உள்ளன. இந்த உயிரினம் பற்றிய சுவாரசியமான பத்து தகவல்களை இதோ...


1. அவை புத்திகூர்மையானவைஅவற்றின் கைகளில்தான் பெரும்பாலான மூளையணுக்கள் உள்ளன:
 
ஆக்டோபஸ், தன் உடலில் ஒரு பெரிய நரம்பியல் அமைப்பை கொண்டுள்ளது. அதாவது, சராசரி ஆக்டோபசுக்கு 500 மில்லியன் நியூரான்கள் அல்லது மூளையணுக்கள் உள்ளன. இது நாய்கள் போன்ற சிறிய வகை பாலூட்டிகளுக்கு இணையான 'மூளை அளவு' ஆகும்.

நாய்கள், மனிதர்கள் போல் அல்லாமல் இந்த நியூரான்களில் பெருமளவு மூளையில் இல்லாமல், ஆக்டோபஸின் கைகளில் காணப்படுகின்றன. உண்மையில் மூளையில் உள்ளதைப் போல கிட்டத்தட்ட இரண்டு மடங்கு மூளை அணுக்கள் அவற்றின் கைகளில் உள்ளன. ஆக்டோபஸின் கையில் உள்ள ஒவ்வொரு உறிஞ்சிகளும் அவற்றின் சுவை மற்றும் தொடுதலைக் கையாள 10,000 நியூரான்களைக் கொண்டிருக்கலாம்.

2. ஆக்டோபஸ்களுக்கு நல்ல நினைவாற்றல் திறன் உள்ளது - அவற்றுக்கு பயிற்சி அளிக்கலாம்

ஆக்டோபஸ்களுக்கு எளிய பணிகளைச் செய்ய பயிற்சி அளிக்க முடியும் என்பதை கடந்த எழுபது ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஒரு குறிப்பிட்ட சோதனையில், ஒரு மீனை எடுப்பதற்காக பல ஆக்டோபஸ்கள் இணைந்து ஒரு நெம்புகோலை இழுத்தன.

மேலும், ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு விஷயத்தை நினைவில் கொள்வது போன்ற எளிமையான பணிகள் செய்ய, காட்சி ரீதியான சோதனைகளுக்கு ஆக்டோபஸ்கள் உட்படுத்தபட்டன. இது ஒரு நீண்ட செயல்முறையாக இருந்தது. ஆனால் ஆக்டோபஸ், புறாக்கள் உட்பட பல விலங்குகளை விட சிறப்பாக செயல்பட்டது.

3. அவை மிகவும் குறும்பானவை

மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனையில், மூன்று ஆக்டோபஸ்கள் ஈடுபட்டன. அவை ஆல்பர்ட், பெர்ட்ராம் மற்றும் சார்லஸ் என்று பெயரிடப்பட்டன. ஆல்பர்ட் மற்றும் பெர்ட்ராம் மிகவும் நன்றாக செயல்பட்டன. அதே சமயம், சார்லஸ் சற்று தவறுதலாக நெம்புகோலை உடைத்துவிட்டது.

அது மட்டுமல்லாமல், சார்லஸ் அந்த சோதனையை நடத்துபவர்கள் மீது நீர் பாய்ச்சி கொண்டே இருந்தது. பல்வேறு மீன் கண்காட்சியகங்களில் மிகவும் குறும்புத் தனத்துடன் நடந்துகொள்ளும் ஆக்டோபஸ்கள் இருந்தன. சில ஆக்டோபஸ்கள் அங்குள்ள பல்புகளில் தண்ணீரைச் பாய்ச்சி மின்விளக்குகளை அணைக்க கற்றுக்கொண்டதுடன், ஷார்ட் சர்க்யூட் ஏற்படுத்தவும் செய்தன. நியூசிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகத்தில், இந்த குறும்புதனங்கள் காரணமாக ஓர் ஆக்டோபஸை மீண்டும் அதன் வாழிடத்திலேயே விட வேண்டியிருந்தது.

4. ஆக்டோபஸ்கள் தனிப்பட்ட நபர்களை கண்டறியும்

நியூசிலாந்தில் ஆக்டோபஸ் ஷார்ட் சர்க்யூட் செய்த அதே ஆய்வகத்தில், ஓர் ஆக்டோபஸ், எந்த காரணமின்றி, ஆய்வக ஊழியர் ஒருவரை மீது வெறுப்பை காட்டியது. அந்த நபர் கடந்து செல்லும் போதெல்லாம், அவர் கழுத்து மீது வேண்டுமென்றே தண்ணீர் வீசியது.

5. விளையாடப் பிடிக்கும்

மேலே விவரிக்கப்பட்ட அவைகளின் குறும்புத்தனமான செயல்களை கவனிக்கும்போது, அவை விளையாட்டுத்தனமான உயிரினங்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

ஆய்வகங்களில் உள்ள சில ஆக்டோபஸ்கள் மாத்திரை பாட்டில்களை வைத்து விளையாடுவதுடன், தொட்டியின் வால்விலிருந்து வரும் நீரின் ஓட்டத்தில் பாட்டிலை முன்னும் பின்னுமாக அடித்து குதித்து விளையாடி நேரத்தை செலவிடுவதையும் காணலாம்.

6. ஆக்டோபஸ்கள் கைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன

ஆக்டோபஸின் பல இன வகைகளுக்கு, அவற்றின் மூன்றாவது வலது கையின் கீழ் பள்ளம் போன்ற ஒன்று இருக்கிறதா என்பதை வைத்து, அவை ஆணா அல்லது பெண்ணா என்பதை நீங்கள் கண்டறியலாம்.

அப்படி பள்ளம் இருந்தால், அது ஓர் ஆண். அவை இனச்சேர்க்கையில் இந்த கையை பயன்படுத்துகின்றன. அவை என்ன செய்கின்றன என்றால், அந்த கையை பெண் ஆக்டோபசை நோக்கி நீட்டும். பெண் ஆக்டோபஸ் ஏற்றுக்கொண்டால், கையின் அடிப்பகுதியில் உள்ள பள்ளத்திலிருந்து விந்தணு அனுப்பப்படும். பெண் ஆக்டோபஸ்கள் பெரும்பாலும் கருவுறுவதற்கு முன், சிறிது நேரம் இந்த விந்தணுக்களை சேமித்து வைக்கின்றன.

7. 'ஹை-ஃபைவ்கள்' என்பது அவை வழக்கமாக வாழ்த்து கூறும் முறை

பொதுவாக ஆக்டோபஸ்கள் சுற்றி வரும்போது, சில சமயங்களில் அவை தங்கள் குகைகளில் உள்ள மற்ற ஆக்டோபஸ்களை நோக்கி தங்கள் கைகளைத் தட்டுவதை காணலாம்.

ஆக்டோபஸ் நடத்தை பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் ஸ்டீபன் லின்க்விஸ்ட், இந்த நடந்தை உண்மையில் 'ஹை ஃபைவ்கள்' என்கிறார். இது ஆக்டோபஸ்கள் ஒன்றை ஒன்று அடையாளம் காண உதவும் என்று அவர் நினைக்கிறார்.

8. ஆக்டோபசுக்கு பல இதயங்கள் உள்ளன

ஆக்டோபசுக்கு மூன்று இதயங்கள் உள்ளன. அந்த இதயங்கள் நீலம் - பச்சை நிறம் கலந்த ரத்தத்தை பம்ப் செய்கின்றன. நமது ரத்தத்தை சிவப்பு நிறமாக்கும் இரும்புக்கு பதிலாக, ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் மூலக்கூறாக அவை தாமிரத்தை பயன்படுத்துகின்றன.

9. ஆக்டோபஸ்கள் அச்சுறுத்தலாம்
ஆக்டோபஸ்கள் நிறத்தையும் வடிவத்தையும் மாற்றும். ஓர் ஆவேசமான ஆண் ஆக்டோபஸ், மற்றொரு ஆக்டோபஸைத் தாக்கும் போது, அது கருப்பாக மாறி, கடற்பரப்பில் இருந்து எழுந்து, விரிவடைந்து தாக்கும். சில சமயங்களில் அவை தங்கள் உடல் பகுதியை எழுப்பி, பேய் போன்ற தோரணையில் இருக்கும். இது "நோஸ்ஃபெரட்டு" போஸ் என்று செல்லமாக அழைக்கப்படும்.

10. ஆக்டோபஸுக்கு எலும்புக்கூடு இல்லாததால் சில நன்மைகள் உண்டு

ஓர் ஆக்டோபஸ் அதன் கருவிழியின் அளவு உள்ள ஒரு துளை வழியாகவும் நுழையலாம், தன் உடல் வடிவத்தை கிட்டத்தட்ட வரம்புகள் இல்லாமல் மாற்றக்கூடியது அது. ஆக்டோபஸின் அளவையும், சிக்கலான வடிவத்தையும் பார்க்கும்போது, அவற்றுக்கு எலும்புக்கூடோ அல்லது ஒடோ இல்லாதது அசாதாரணமானது. இந்த தன்மை அதனை வேட்டையாடும் மற்ற உயிரினங்களுக்கு சாதகமாகிறது. ஆனால் அவற்றிடம் இருந்து மறைந்து கொள்ளவும் ஆக்டோபசுக்கு இது உதவுகிறது.