செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 9 ஏப்ரல் 2014 (11:33 IST)

அதிகாரிகள் இடமாற்றம்: மே.வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் காலக்கெடு

மேற்குவங்க மாநில அரசு அதிகாரிகளின் இடமாற்றம் சம்பந்தமான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த, புதன்கிழமை காலை பத்து மணி வரை காலக்கெடு வழங்கி அம்மாநில அரசுக்கு தேசிய தேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

தேசிய தேர்தல் ஆணையம், மேற்குவங்கத்தை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள இடமாற்ற உத்தரவை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என அம்மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் பணிகளை பாதிப்பு இல்லாமல் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள தேசிய தேர்தல் ஆணையம், அம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு திங்களன்று இடமாற்றம் செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
 
மேற்குவங்கத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் பணியில் உள்ள ஐந்து காவல்துறை ஆய்வாளர்கள், ஒரு மாவட்ட ஆட்சியர் உட்பட எட்டு உயர் அதிகாரிகளை உடனடியாக அவ்வாறு பணிமாற்றம் செய்தால், அரசு பணியில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவ்வுத்தரவை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.
 
மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவை அமல்படுத்த அம்மாநில அரசுக்கு, செவ்வாய்கிழமை மதியம் 2.30 மணிவரை காலக்கெடு அளித்து தேசிய தேர்தல் ஆணையம் முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
பின்னர் இதற்கு பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம், இந்த உத்தரவின் பேரில் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்தால், அரசு நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால் இதை நிர்பந்திக்க கூடாது என்றும், அதே சமயம் இந்த உத்தரவில் உள்ளவர்களுக்கு மாற்றாக மூன்று புதிய பெயர்களை பரிந்துரை செய்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்பட்டது.
 
சில தினங்களுக்கு முன்பு தேசிய தேர்தல் ஆணையத்திடம் இடதுசாரி கட்சிகள் அளித்துள்ள புகாரில், மேற்குவங்கத்தில் நடைபெறும் மம்தா பானர்ஜியின் தலைமையிலான அரசாங்கத்தில் அரசு அதிகாரிகள் அம்மாநில அரசுக்கு சாதகாமாக செயல்படுவதாக குற்றம் கூறினார்கள்.
 
இதனை தொடர்ந்து தான் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
 
இருந்தபோதும் பொது நிகழ்ச்சி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து சுட்டிக்காட்டிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் இது போன்ற நடவடிக்கைகள் வழக்கமானது தான் என்றாலும், தற்போது தமது தலைமையிலான அரசை தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்குவதாக விமர்சனம் செய்தார்.
 
மேலும் தான் முதல்வராக பொறுப்பு வகிக்கும் வரை இந்த இடமாற்ற உத்தரவை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறாக நீடித்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனையில், மேற்குவங்க அரசின் பரிந்துரையை ஏற்க மறுத்துள்ள தேசிய தேர்தல் ஆணையம், கடைசியாக நாளை காலை பத்து மணிக்குள் வழங்கப்பட்டுள்ள உத்தரவை அமல்படுத்த கூறியுள்ளது.
 
இவ்வாறு இந்த உத்தரவை மம்தா பானர்ஜி ஏற்க மறுத்தால் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தேதிகளை, அப்பகுதிகளில் தள்ளிவைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.