செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (08:59 IST)

கட்சியில இருக்கதுனா இருங்க.. இல்லைனா கெளம்புங்க! - சீமான் பேச்சால் அப்செட் ஆன நிர்வாகி எடுத்த முடிவு!

Seeman

நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபமாக அதன் மாவட்ட செயலாளர்கள் விலகி வரும் நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்ட செயலாளரும் விலகியுள்ளார்.

 

 

2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்போதே சில தொகுதிகளில் வேட்பாளரை அறிவித்து வருகிறார். இதில் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு உடன்பாடு இல்லாததாக தெரிகிறது. அதனால் சமீபமாக பலர் கட்சியை விட்டு விலகி வரும் நிலையில் தற்போது விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த அனைத்து கட்சி பணிகளையும் சிறப்பாக செய்தேன். 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும், என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டோம். 2024ல் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிறப்பாக செயல்பட தொடங்கினேன்.

 

நா.த.க போட்டியிட்ட இரண்டு சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், இரண்டு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நான் சிறப்பாக பணியாற்றினேன். இதில் உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து மற்ற எந்த வேட்பாளரும் எங்கள் மாவட்டத்தையோ, தொகுதியையோ சேர்ந்தவர்கள் இல்லை.
 

 

இதுநாள் வரை நாம் செய்த செயல்கள், உழைப்பு, பண விரயம் இவை எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. “இந்த தொகுதியில் எவருக்கும் நான் பதில் சொல்லமுடியாது. நீங்களும் கேள்வி கேட்க கூடாது. என் இஷ்டப்படிதான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள். உங்களை யாரும் போஸ்டர் ஒட்ட சொல்லவில்லை, செலவும் செய்ய சொல்லவில்லை” என கூறினார். 

 

அண்ணா நாங்கள் கேட்பது பணமோ, பொருளோ அல்ல. எங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரம், இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன்  நாம் தமிழர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K