அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என முன்னோர்கள் சொல்வார்கள் ஏன்?


Sasikala|
அதிகாலையில் சுற்றுப்புற சூழ்நிலை, காற்று முதலானவை எல்லாம் மிகவும் தெளிவாக இருக்கும். காற்று தூய்மையாக இருக்கும். அந்தத் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால் ஆரோக்கியம் கூடும்.

 


பொழுது விடிந்து போக்குவரத்து மிகுந்து விட்டதென்றால், சூரியனின் வெப்பம் பட்டுப் பல சக்திகள் ஆவியாகப் போய்விடும். போக்குவரத்து வாகனங்களின் நச்சுப்புகை, காற்று மண்டலத்தில் பரவி ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்புறம் தூய்மையான காற்றுக்கு எங்கே போவது? ஆரோக்கியத்தை நாம் அடைய வேண்டுமென்றால், அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என நம் நலத்திற்காகவே சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள். 

அப்படி எழுந்திருக்கும்போதும், வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருக்க வேண்டும். இதற்கும் காரணம் உண்டு. 
 
நம் உடலில் இரண்டு விதமான காந்த வளையங்கள் இருக்கின்றன. (பள்ளி-கல்லூரிகளில் விஞ்ஞான பரிசோதனை கூடங்களிலோ, மருத்துவ நிலையங்களிலோ உடல் கூறினை விளக்கும் படத்தைப் பார்த்திருப்போம். அதில் இந்த வளையங்களைக் காணலாம்.) ஒன்று, காலில் இருந்து தலைக்கும், தலையிலிருந்து காலுக்கும் வலம் வந்து கொண்டிருக்கும். இரண்டாவது, இடது பக்கம் இருந்து முன் பக்கம் வழியாக, வலது பக்கத்திற்கும் வலது பக்கத்தில் இருந்து பின் பக்கம் வழியாக, இடது பக்கத்திற்கும் வலம் வந்து கொண்டிருக்கும். அந்த வளையங்களின் திசைக்கு ஏற்றபடி உடம்பு அசையும்போது வளையங்களின் சுருள்கள் இறுகும். அதற்கு எதிராக அசையும்போது, காந்த சுருள்கள் தொய்வடைந்து போகும். அதனால் உடம்பின் செயல்திறன் தளர்வடைந்து போகும். 
 
அடுத்து, படுக்கையில் இருந்து எழுந்து கையால் தரையைத் தொட்டு, ‘‘தாயே, பூமாதேவி, என்னை மன்னித்து, நான் செய்யும் அபராதங்களைப் பொறுத்துக்கொள்’’ என வேண்டி, கையால் தரையைத் தொட வேண்டும். 
 
இது எதற்காக? இரவு முழுவதும் உடலை நீட்டிப் படுத்திருந்தோம். உடம்பு சம நிலையில் இருந்தது. எழுந்தவுடன் காலால் தரையைத் தொட்டால் சக்தி வீணாகும். ஏனென்றால், படுத்திருந்த போது ரத்த ஓட்டமும் உடம்பின் செயல்பாடுகளும் வேறு. ஆகவே, எழுந்தவுடன் காலால் தரையைத் தொட்டால்... சக்தி பெருமளவில் கீழ்நோக்கிப் பாய்ந்து வீணாகும். கையால் தரையைத் தொட்டு நிமிரும்போது சக்தி மேல் நோக்கிப் பரவிப் பாய்ந்து நலம் தரும். 
 
இதை எண்ணியே காலையில் எழுந்ததும் கையால் தரையைத் தொட்டு, பூமாதேவியிடம் அபராத மன்னிப்புக் கேட்க வேண்டும் என வைத்தார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :