தன்னைக் காண யாருமே வரவில்லை.. விரக்தியில் தினகரன்?
டெல்லி போலீசார் தன்னை சென்னை கொண்டு வந்து விசாரித்த போது, தன்னை காண அதிமுகவில் இருந்து யாருமே வராதது, தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், டெல்லியில் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனை, நேற்று மதியம் விமானம் மூலம் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவர்கள் விமான நிலையம் வந்தபோது, அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என யாருமே விமான நிலையத்தில் இல்லை. நாஞ்சில் சம்பத் மற்றும் ஜெ. பேரவை செயலாளர் புகழேந்தி மட்டுமே அங்கிருந்தனர். ஆனால், அவர்களால் தினகரனிடம் பேச முடியவில்லை.
அங்கிருந்து நேராக பெசண்ட்நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அவரை கொண்டு சென்று போலீசார் விசாரணை செய்தனர். அதன்பின் மாலையில், அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போதும் அதிமுக தரப்பிலிருந்து பெரிதாக யாரும் அங்கு வரவில்லை. நாஞ்சில் சம்பத்தும், புகழேந்தியும் மட்டுமே அங்கிருந்தனர். அவர்கள் தினகரனிடம் பேச வேண்டும் என அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு டெல்லி போலீசார் மனுமதி மறுத்துவிட்டனர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என புடை சூழ வலம் வந்த தினகரன், கட்சியிலிருந்து விலகியதோடு, இரட்டை இலை சின்னம் விவகாரத்திலும் சிக்கி, இப்படி கைதாகும் நிலை வரை சென்று விட்டதால், அதிமுக வட்டாரத்தில் அவரின் மவுசு குறைந்துவிட்டதாக தெரிகிறது.
தன்னைக் காண யாருமே வராதது தினகரனுக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.