1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2017 (15:58 IST)

ஜெ.வை சசிகலா எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினார்? - தகவல் தரும் ஐ.பெரியசாமி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, அவரின் தோழி சசிகலா எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினார் என்பது ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு நன்றாக தெரியும் என திமுக துணை பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பதாக அதிமுகவின் "புதிய" பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் முதல் அரசியல் அறிக்கை ஒன்றை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை முழுவதும் படித்துப் பார்த்தேன். எந்த வரியிலாவது "சட்ட பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டை அதிமுக ஆட்சியில் நடத்தினோம்" என்று ஏதாவது வரிகள் இருக்குமா என்று தேடிப் பார்த்தேன். அப்படியொரு வரியை அந்த அறிக்கையில் சசிகலா நடராஜனால் சொல்ல முடியவில்லை. அதிலிருந்தே "ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்புடன் நடத்த முடியாமல் அதிமுக ஆட்சி தோற்று விட்டது" என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
 
தி.மு.க. கொண்டு வந்த "ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டத்தை" ஒழுங்காக நடைமுறைப்படுதாமல் திட்டமிட்டு கோட்டை விட்டதுதான் ஜல்லிக்கட்டு விளையாட்டு இன்றைக்கு நடக்காமல் போனதற்கு முக்கியக் காரணம் என்பதை தென் மாவட்ட இளைஞர்கள், தமிழக ஜல்லிக்கட்டு வீரர்கள் அனைவரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். 
 
ஆகவே ஜல்லிக்கட்டு பற்றி தி.மு.க. மீது குற்றம் சுமத்த சசிகலா நடராஜனுக்கு அருகதை இல்லை. தன் தவறை மறைக்க பிறர் பெயரைச் சொல்லி அனுதாபம் தேட முயற்சிப்பது போல் "ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த" ஸ்டாலின் இப்படி பேசியிருக்கிறார் என்று நா கூசாமல் பொய் சொல்ல வேண்டாம் என்று சசிகலாவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஜெயலலிதா பெயரை யாராவது கொச்சைப்படுத்துகிறார் என்றால் அது சசிகலா நடராஜனாகத் தான் இருக்கும். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் கேட்டாலே பக்கம் பக்கமாக ஜெயலலிதாவை எப்படி சசிகலா கொச்சைப்படுத்தினார் என்பதை வெளியிடுவார். 
 
அதற்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை. முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் ஓடோடிச் சென்று அவரது உடல் நலம் விசாரித்து, அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, இன்றைக்கு தி.மு.க.வின் பொதுக்குழுவில் கூட ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் போட்டிருக்கும் செயல் தலைவர் ஸ்டாலினைப் பார்த்து "கொச்சைப்படுத்தும் அரசியல்" செய்கிறார் என்று சொல்வதற்கு சசிகலா நடராஜனுக்கு "கால் காசு தகுதி" கூட இல்லை என்று இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.