தமிழக அளவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா அணியும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணி என்று தனித்தனியாக செயல்பட்ட தொடங்கியுள்ளது.
குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் மட்டும் சசிகலாவின் விளம்பரத்தை விட, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் விளம்பரம் கொடி கட்டி பறக்கிறது. அவருக்கு ஆதரவாக ஏரளமான பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்ட அளவிலான தீபா பேரவை கூட்டம் இன்று கரூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. அதில் தீபா பேரவை ஆதரவாளர்கள் திரண்டனர். மேலும் இக்கூட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏவும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளர் சொளந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு தீபாவிற்கு இந்த கூட்டம் ஆதரவு தெரிவிப்பது, மேலும் தீபாவை கொண்டு 1.5 கோடி தொண்டர்களையும், தமிழக மக்களையும் தலைமையேற்று வழிநடத்தி செல்ல இந்த கூட்டம் கேட்டுக் கொண்டது.
மேலும் எம்.ஜி.ஆர் கண்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா கண்ட பேரியக்கத்தை தீபா மூலமாக வரும் பிப்ரவரி மாதம் 24 ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளான்று ஜெ.தீபாவின் வழியில் தமிழகமே வியக்கம் வண்ணம் கோடிக்கணக்கான தொண்டர்களை இணைத்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த, திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சொளந்தரராஜன் தெரிவிக்கையில் “மறைந்த முன்னாள் முதல்வரின் மரணத்திற்கு வெள்ளை அறிக்கை வேண்டும், மேலும் அவரது பொற்கால ஆட்சியை தீபாவால் மட்டுமே செயல்படுத்த வேண்டுமென்றும், ஜெயலலிதாவின் மரணத்தில் யார், யார் எல்லாம் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக அறிக்கை வெளியிட வேண்டும். இனி தமிழக மக்களை காக்க, தீபாவால் மட்டுமே முடியும் ஆகவே, தமிழகத்தை தீபாவின் வழியில் நாம் சிறந்த ஆட்சியை செயல்படுத்த முடியும்” என்று பேட்டியளித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூரை சேர்ந்தவர்தான். ஆங்காங்கே ஊதிய குழு பேச்சுவார்த்தை ஒரு புறம், அதிக விபத்துகள் என்பதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது அபர்ணா என்ற பெண் பயணிக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் தனது பேட்டியை முடித்து பின்பு அப்பெண்ணிற்கு காவல்துறையின் சார்பில் இவரால் தான் டார்ச்சர் கொடுக்கப்பட்டது என்று ஒரு புறம் செய்தி வைரலாகி பரவி வருகிறது.
ஈரோட்டில் அரசுப்போக்குவரத்து கழக தற்காலிக பணி டிரைவர் பள்ளிபாளையத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அங்கு அனைத்து தற்காலிக பணியாளர்களும் இரண்டு நாட்களாக போராட்டங்கள் என்று அடுத்தடுத்து அவரது துறையில் ஏற்பட்டு வரும் நிலை, அடி மேல் அடி விழும் கதையான நிலையில், அமைச்சர் பதவிக்கு ஆப்பு வைக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தான் போக்குவரத்து துறை என்று போயஸ் வட்டாரம் கூறிவிட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே அமைச்சர் பதவி எந்நேரத்திலும் பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, இந்த தீபா பேரவையின் கூட்டம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய கட்சி நிர்வாகிகளும், அமைச்சரின் உறவினர்களோடு மட்டுமில்லாமல், அமைச்சரின் ஆதரவாளர்களின் ஏற்பாட்டில்தான் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் நம்பகத் தன்மையான வட்டாரங்களும் உளவுத்துறையும் கார்டன் வரை சொல்ல தற்போது கட்சி பதவிக்கும் ஆபத்தா வருமா என்று கலக்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளாராம்.
- சி.ஆனந்தகுமார்