வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2015 (17:24 IST)

தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பருப்பு விலை உயர்வு

பருவமழை குறித்த நேரத்தில் பெய்யாத காரணத்தால்  உற்பத்தி குறைந்ததாக காரணம் கூறி, சந்தைகளில் துவரம் பருப்பின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 

 
துவரம் பருப்பு விலை கிலோவுக்கு 50 ரூபாய் அளவுக்கு மார்க்கெட்டில் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.170ல் இருந்து ரூ.200 வரை விற்கப்பட்டது. உயர்தர பருப்பு ரூ.210 ஆகவும் விற்கப்பட்டது.
 
துவரம் பருப்பைப் போலவே உளுத்தம் பருப்பும் ஒரு கிலோ ரூ.180க்கும், பாசிப்பருப்பு ரூ.130க்கும், கடலை பருப்பு ரூ.75க்கும் சந்தையில் விற்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பருப்புகள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அது இந்திய பருப்புகளைப் போல ருசியாக இருப்பதில்லை என்றும் கூறப்பட்டது.
 
அது ஒருபுறம் இருக்க துவரம் பருப்பு விலை இனி குறைய வாய்ப்பில்லை என்று பயமுறுத்தினார்கள் சில வியாபாரிகள். இதனால், சில கடைகளில் சாம்பாருக்கு பதில் சட்னி மட்டும் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
 
பருப்பின் விலை உயர்வு இந்திய அளவில் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாம்பாருக்கு எங்கே தட்டுப்பாடு வந்துவிடுமோ என்று மக்கள் பயந்தனர். நிறைய ஹோட்டல்களில் சாம்பார் நிறுத்தப்பட்டது. டில்லியில் பருப்பு தரவில்லை என்று கூறி ஹோட்டல் முதலாளி தாக்கப்பட்டார்.
 
பருப்பு விலைகள் தாறுமாறாக எகிறியதில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திய வியாபரிகள் கள்ளசந்தையில் பருப்புகளை பதுக்க ஆரம்பித்தனர். அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
 
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் டில்லியில் அவசரமாக கூட்டப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள விவசாய நிலைமை குறித்து இந்தக் கூட்டம் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
 
அப்போது, மிகப்பெருமளவில் விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை கொள்முதல் செய்த தனியார் பெரும் கம்பெனிகள், விவசாயிக்கு கொடுத்ததை விட 5 மடங்கு கூடுதலாக விலைவைத்து மக்கள் தலையில் விலையை ஏற்றி விற்று கொள்ளை லாபமடித்த விபரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 
அதாவது, மத்திய அரசு பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து பெரும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள அனுமதித்தது. இதனையடுத்து, பருப்பு கிலோ 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

ஒன்றுக்கு வெறும் 40 ரூபாய் மட்டுமே விவசாயிக்கு கொடுத்த பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், அதை வெளி மார்க்கெட்டில் 180 ரூபாய் அதிகம் விலை வைத்து மொத்தம் 220 ரூபாய்க்கு விற்று பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த விவகாரம் வெளியானது.
 
இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 24 மில்லியன் டன் பருப்பு வகைகள் உட்கொள்ளப்படுகின்றன. அந்தக் கணக்கின்படி அக்டோபர், நவம்பர்  மாதங்களில் மட்டும் சுமார் 4 மில்லியன் டன் அளவிற்கு பருப்பு உட்கொள்ளப்பட்டது. அந்த 4 மில்லியன் டன் பருப்பை விற்றவகையில் மட்டும், பெரும் நிறுவனங்கள் ஒரு கிலோவிற்கு ரூ.180 கொள்ளையடித்து லாபம் ஈட்டியது.
 
அந்த விபரத்தை வெளியிட்ட விவசாயிகள் சங்கம், அந்தக் கொள்ளையை மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசின் ஆதரவோடு நடத்திய பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக மோடியின் மிக நெருங்கிய நண்பரான அதானியின் விவசாய மார்க்கெட்டிங் கம்பெனியான அதானி - வில்மர் நிறுவனம் தனது ‘பார்ச்சூன்‘ நிறுவனத்தின் மூலம்பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வகைகளை விற்பதற்காக பல லட்சம் டன் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தது.


 

 
ஆனால், கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.40 மட்டுமே விவசாயிக்கு வழங்கி விட்டு, அதே பருப்பை பாக்கெட் போட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.220 என்ற விலையில் விற்று சம்பாதித்துள்ளது. விலை ஏறும் வரையில் அதானியின் பார்ச்சூன் நிறுவனம் ஒட்டுமொத்த பருப்பு வகைகளையும் பதுக்கியது என்றும் விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியது.
 
அதானி - வில்மர் மட்டுமின்றி, டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், ஐடிசி மற்றும் இதர கார்ப்பரேட் விவசாய வர்த்தக நிறுவனங்களும், பருப்பு இருப்பு வைத்துக் கொள்வதற்கான வரையறையை அரசு தளர்த்தியதை காரணமாகக் கொண்டு, மிகப் பெருமளவில் பதுக்கி விலையை ஏற்றின என்றும், விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியது.
 
பருப்பு விலை உயர்வை ஜெயலலிதாவின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி. அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
 
பருப்பு விலையை கட்டுப்படுத்த கூடுதலாக 2,000 டன் பருப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
 
மத்திய அரசு தமிகத்திற்கு ஒதுக்கிய 500 மெட்ரிக் பருப்புகளை, கூட்டுறவு பண்டகசாலை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தினால் நடத்தப்படும் பல்பொருள் விற்பனை அங்காடிகள் மூலம், அரை கிலோ ரூ.55க்கும், ஒரு கிலோ ரூ.110 க்கும் விற்பனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நடவடிக்கையின் மூலம்,  தமிழகத்தில் வெளிச் சந்தையில் துவரம் பருப்பு விலை குறைய வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். 
 
இதனிடையே விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள்,  உரிமம் பெற்ற உணவு பதப்படுத்தல்  நிறுவனங்கள்,  பெரிய கடைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்ட அளவுதான் பருப்பை இருப்பு வைக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. 
 
அதன் மூலம் பதுக்கல் தடுக்கப்பட்டு பருப்பு விலை ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மேலும், பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த, 1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சவை கமிட்டி ஒப்புதல் அளித்தது.
 
அந்த பருப்புவகைகள், சந்தை விலையில் வாங்கப்படும், அது நடப்பு ஆண்டிலேயே இருப்பு வைக்கப்படும். பருப்பு விலை கடுமையாக உயரும்போது இவை சந்தைக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகளினால் பருப்பின் விலை கட்டுக்குள் வந்தது.