செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (11:39 IST)

இந்த வாரம் ஆயிரம் பேர் பணிநீக்கம்..! – யாஹூ அதிர்ச்சி அறிவிப்பு!

பிரபல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் யாஹூ நிறுவனமும் இணைந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மந்தநிலை காரணமாக பல ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை பணிநீக்கம் செய்து வருகின்றன.

முன்னதாக கூகிள், மைக்ரோசாப்ட், அமேசான், டெல் என பல நிறுவனங்கள் அதிகமான அளவில் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன. தற்போது யாஹூவும் இந்த பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 2000களில் முன்னணியில் இருந்த யாஹூ தேடுபொறி கூகிளின் வரவால் பின் தங்கியது. தற்போது சில நாடுகளில் மட்டும் யாஹூ பயன்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. யாஹூ நிறுவனம் இ மெயில் உள்ளிட்ட மேலும் சில மென்பொருள் சேவைகளையும் வழங்கி வருகிறது.


ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக இந்த வாரத்தில் 1000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது. இது யாஹூவின் மொத்த பணியாளர்களில் 12 சதவீதம் என கூறப்படுகிறது. மேலும் இந்த பணிநீக்க நடவடிக்கை இந்த ஆண்டு இறுதி வரை தொடர உள்ளதாகவும் யாஹூ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதலாக பல்வேறு ஐடி நிறுவனங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்கள், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உலகளவில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Edit by Prasanth.K